விளையாட்டு

'வாத்தி ரெய்டு' : களையெடுப்புக்கு தயாராகும் கோலி... அடுத்தகட்ட இந்திய அணி எப்படியிருக்கும்?

தோல்வியிலிருந்து மீண்டு எழுவதற்காக இந்திய அணிக்குள் கோலி தனது கடுமையை காட்ட தொடங்கியிருக்கிறார்.

'வாத்தி ரெய்டு' : களையெடுப்புக்கு தயாராகும் கோலி... அடுத்தகட்ட இந்திய அணி எப்படியிருக்கும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியுசிலாந்திடம் தோற்றிருந்தது. பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே இந்திய அணி சொதப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டன் பதவிலியிருந்து விலக வேண்டும் என்கிற விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் தலைமையேற்றிருப்பவர் கோலிதான். இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததும் கோலிதான். அதனால் ஒரு போட்டியின் சொதப்பலை வைத்து கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க சொல்வது அபத்தம் என்றும் ஒரு தரப்பு கோலிக்கு ஆதரவாக பேசி வருகிறது.

'கோலி இந்திய அணிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவரை இந்த சமயத்தில் கேப்டன் பதவியை விட்டு நீக்குவது பெருங்குற்றம் ஆகிவிடும்' என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் கூறியுள்ளார். ஒட்டுமொத்த அணியுமே சொதப்பியிருக்கிறது. இந்த சமயத்தில் கோலி மீது மட்டுமே பழியை சுமத்துவது சரியில்லை என்றே பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தோல்வியினால் கோலியுமே கடுமையாக அப்செட் ஆகியிருந்தார். இதனால், கோலியே முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என்பது போன்ற யூகங்களும் எழுந்திருந்தது. ஆனால், போட்டிக்கு பிறகான ப்ரஸ்மீட்டில் கோலி இது பற்றி எதுவும் பேசியிருக்கவில்லை. மேலும், அடுத்தக்கட்ட இந்திய அணி எப்படியிருக்கும்? என்பது பற்றியும் கோலி பேசியுள்ளார். இதன்மூலம் கோலிக்கு கேப்டன் பதவிலியிருந்து விலகும் எண்ணமெல்லாம் இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

'வாத்தி ரெய்டு' : களையெடுப்புக்கு தயாராகும் கோலி... அடுத்தகட்ட இந்திய அணி எப்படியிருக்கும்?

அடுத்தகட்ட நடவடிக்கையாக அணிக்குள் கண்டிப்பாக கோலி சில களையெடுப்புகளை நிகழ்த்துவார் என்கிற தகவல்களும் கிடைத்திருக்கிறது. 'இனியும் தாமதம் எல்லாம் இல்லை. இப்போதிருந்தே சில விஷயங்களை செய்யப்போகிறோம். சில வீரர்கள் மனநிலை மாறியே ஆக வேண்டும்' என கோலி பேசியுள்ளார். புஜாரா ரொம்பவே மெதுவாக ஆடி ரன் வேகத்தை குறைப்பதால் அவர்மீது ஏற்கனவே கடுப்பில் இருந்தார் கோலி. இந்த இறுதிப்போட்டியிலும் அப்படியே மெதுவாக ஆடி சொதப்பியிருந்தார் புஜாரா. இனிமேல் புஜாரா அந்த அதீத தற்காப்பான ஆட்டத்தை கைவிட்டாக வேண்டும் என கோலி எதிர்பார்க்கிறார். மேலும், ரஹானே மாதிரியான சீனியர் வீரரிடம் கோலி கன்ஸிஸ்டன்சியை எதிர்பார்க்கிறார். பும்ராவை அதிகமாக நம்பியிருந்தார். ஆனால், அவரும் தொடர்ந்து விக்கெட்டை எடுக்காமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார். இதனால் கோலி மிகுந்த அதிருப்தியாகியுள்ளார்.

ஆகஸ்ட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பல வீரர்களுக்கும் முக்கியமானதாக இருக்கும். கோலி எதிர்பார்க்கும் மாற்றங்கள் எதிர்பார்க்கும் வீரர்களிடமிருந்து வெளிப்படாத பட்சத்தில் கோலி சில கடுமையான முடிவுகளை நிச்சயம் எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்தியா A க்கு எதிரான ஒரே ஒரு பயிற்சி போட்டி மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. தோல்வியின் விரக்தியில் இருந்த கோலி இதிலும் அதிருப்தியாகவே இருக்கிறார். 'ஏன் எங்களுக்கு பயிற்சி போட்டிகள் திட்டமிடப்படவில்லை என தெரியவில்லை' என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார் கோலி.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து கவுண்ட்டி அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களை கோரி பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் போர்டிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. தோல்வியிலிருந்து மீண்டு எழுவதற்காக இந்திய அணிக்குள் கோலி தனது கடுமையை காட்ட தொடங்கியிருக்கிறார். நல்ல ரிசல்ட் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories