
தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டு, மாநில அரசின் நிதியில் இயங்கி வரும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் ‘வேந்தர்’ அதிகாரத்தை, மாநில அரசின் ‘முதலமைச்சரே’ பெற்றிட வேண்டும் என்பதுதான் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
இந்த நிலைப்பாடுதான், தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் மாநில உரிமைக் காப்போரின் நிலைப்பாடாகவும் இருந்து வருகிறது.
மாநிலத்தின் கல்வி உரிமை பொதுப்பட்டியலுக்குச் சென்றது முதல், மாணவர்களின் கல்விக் கனவு பல படிநிலைகளில் சிதைந்து வருகிறது. இதனால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர, தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது.
அப்போராட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஆளுநரிடம் (ஒன்றிய அரசின் நிர்வாகி) இருந்து வந்த மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை, இனி தமிழ்நாட்டின் முதலமைச்சரே வகிப்பார் என்ற முழக்கம் எழுந்தது.
இது வெறும் மாநில உரிமை முழக்கமாக மட்டும் நின்றுவிடவில்லை; துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தையும், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பையும் தமிழ்நாடு அரசே பெற்றிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் சட்டமும் இயற்றப்பட்டது.

இதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர், அதனைத் தட்டிக் கழித்ததால், இதற்கான நீதிப்போராட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதன் காரணமாகத்தான் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளன. மாநில நலன் கருதிச் சிந்தித்தால், இங்கு ஒத்துப்போக வேண்டியது ஆளுநரும், ஒன்றிய அரசும்தான்.
ஆனால், அவர்கள் ஒத்துப்போகாமல், தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பவர்களை ஒத்துப்போகச் சொல்வதுதான் வேடிக்கை. இந்த வேடிக்கைக்கு வேட்டு என்று மற்றொரு பொருளும் உண்டு.
ஆட்சி அனுபவமின்மையுடனும், மாநில உரிமையை நிலைநாட்டுவதில் முதிர்ச்சியின்மையுடனும் செயல்பட்டு வரும் த.வெ.க. அரசை மூளைச்சலவை செய்து, மீண்டும் மாநில உரிமைக்கு வேட்டு வைத்துவிடலாம் என எண்ணுகிறது ஆளுநர் (ஒன்றிய அரசு) தரப்பு.
அதற்காக, இன்றைக்கு முதலமைச்சர் விஜய்க்குக் கடிதமும் எழுதியிருக்கிறார் ஆளுநர் அர்லேகர். தமிழ்நாட்டில் தி.மு.க... தி.மு.க... என வசைபாடும் த.வெ.க., ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வினால் தமிழ்நாடு பல வகைகளில் வஞ்சிக்கப்படும் வேளையிலும் பா.ஜ.க. எதிர்ப்பில் மந்தமாகவே செயல்படுகிறது.
அந்த மந்தம், மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் வகையில் இருந்துவிடக் கூடாது என்பதே ஒட்டுமொத்தக் கல்வியாளர்களின், மாநில உரிமைக் காப்பாளர்களின் மனநிலையாகத் தற்போது இருக்கிறது.
ஆளுநர் என்ற பொறுப்பே தேவையற்றதாக இருக்கும் வேளையில், அந்த ஆளுநரிடம் கூடுதல் அதிகாரத்தைக் குவித்து, தமிழ்நாட்டு உரிமைகளைத் தவிடுபொடியாக்கிவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் ஒற்றைக் குரலாகவும் இருந்து வருகிறது.
ஆளுநர் ஏன் தேவையில்லை எனக் கேட்பவர்களிடம், “ஆளுநர் யாருக்குத் தேவைப்படுகிறார்?” என்ற கேள்வியை முன்வைப்பது அவசியமாகிறது. ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்காகச் செயல்படுபவர்.

ஆனால், அவர் தங்கும் இடம், போக்குவரத்து, ஊதியம் என அனைத்துச் செலவினங்களும் அந்தந்த மாநிலங்களின் தலையில்!
இன்னும் சொல்லப்போனால், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த மனதோடு தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி நிறைவேற்றும் சட்ட முன்வடிவுகளைச் சட்டமாக்க ஒப்புதல் அளிக்க வேண்டியவர் ஆளுநர்.
உண்ட சோற்றுக்குப் பணி செய்ய வேண்டும் என்ற சொற்றொடரின்படி, மாநில உரிமை, மாநில நலன் கருதிக் கொண்டுவரப்படும் இந்தச் சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக, நீட் தேர்வு விலக்கு, துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் என மாநில நலன் சார்ந்து நிறைவேற்றப்படும் எந்தச் சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல், ஒன்றிய அரசுக்குக் காட்டும் விசுவாசம் என்ற பெயரில், மாநில உரிமைகளுக்குக் குழி தோண்டுவதையே ஆளுநர்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால்தான் ஆளுநர் பொறுப்பே தேவையற்றது என்ற முழக்கமும் மங்காமல் ஒலித்து வருகிறது.
இப்படியான அரசியலை உணர்ந்து, மாநில நலன் காக்கும் முடிவை முதலமைச்சர் விஜய் எடுப்பாரா... என்ற எதிர்பார்ப்பு மாநில அளவில் எழுந்துள்ளது.
அரசியல் வீம்பிற்காக, ஒன்றிய - மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவைக் கலைத்ததுபோல், இந்த உரிமைப் போராட்டத்தையும் சிதைத்துவிடக் கூடாது என்பதே கல்வியாளர்களின் அறிவுறுத்தலாகவும் இருக்கிறது.






