அரசியல்

ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு.. முதல்வர், அமைச்சர்கள் மீது SIT-யில் டி.ஆர்.பாலு எம்.பி புகார்!

ஜெம் வீரமணி போக்சோ வழக்கில், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மீது சம்மன் செய்து விசாரிக்க வேண்டும் என SIT-யில் திமுக புகாரளித்துள்ளது.

ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு.. முதல்வர், அமைச்சர்கள் மீது SIT-யில் டி.ஆர்.பாலு எம்.பி புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

“ஜெம் வீரமணி வழக்கு: முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோருக்கு “சம்மன்” அனுப்பி விசாரித்து, ஆதாரங்களைப் பெற வேண்டும்!” என சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் தி.மு.க. பொருளாளரும் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் வலியுறுத்தல்!

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் “சம்மன்” செய்து விசாரணைக்கு அழைத்து, அவர்களிடம் உள்ள ஆதாரங்களைப் பெற வேண்டும் என வலியுறுத்தி, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கழகப் பொருளாளரும் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் புகார் மனு அளித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், ஜெம் வீரமணியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பாதுகாத்ததாகப் பொதுவெளியில் குற்றஞ்சாட்டினார். அதே நாளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஜெம் வீரமணியைக் கழகம் பாதுகாத்ததோடு, அவர் மீதான வழக்கையும் தவறாக முடித்து வைத்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஜெம் வீரமணியைப் பாதுகாப்பதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் அவரிடமிருந்து 500 கோடி ரூபாய் பெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொதுவெளியில் இவர்கள் மூவரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மூன்று விதமாகக் கருத வாய்ப்பிருக்கிறது. முதலில் அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எங்கள் கழகத்தின் மீதும் மற்றும் கழகத் தலைவர்கள் மீதும் அவதூறு பரப்ப முன் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக இந்த மூவரிடமும் இந்தக் குற்றம் தொடர்பான மிகமுக்கியத் தகவல்கள் உள்ளன. ஆனால் போக்சோ சட்டப்படி அவற்றை விசாரணை அதிகாரியிடம் கொடுக்கவில்லை. மூன்றாவதாக புலனாய்வு அதிகாரியின் “கேஸ் டைரி”யில் உள்ள விசாரணைத் தகவல்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் கிடைக்கிறது; அவற்றைப் பொது வெளியில் பரப்புகிறார்கள்.

ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு.. முதல்வர், அமைச்சர்கள் மீது SIT-யில் டி.ஆர்.பாலு எம்.பி புகார்!

மாநிலத்தின் முதலமைச்சரும் இரு அமைச்சர்களும் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டுகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, இக்குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை அவர்களிடமிருந்து உடனடியாகப் பெறுவது அவசியமாகும். 

அவர்களிடம் ஆதாரங்கள் உள்ளனவா? இருந்தால், அவற்றை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்காதது ஏன்? விசாரணை தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு அனுமதியின்றிக் கிடைத்துள்ளனவா? அவற்றிலுள்ள தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.

சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள இவ்வழக்கில், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கோ மறைக்கப்படுவதற்கோ இடமளிக்காமல் அவற்றை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். அதுதான் விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். 

குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பொய்யாக முன்வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ, விசாரணை ரகசியங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பொருந்தக்கூடிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு . அதேவேளையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும், அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

ஆகவே, முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட மூவரையும் “சம்மன்” செய்து விசாரிக்க வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories