
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்ய மனமில்லாமல், வெற்றுப் பேச்சுகள் மட்டுமே பேசி காலத்தை ஓட்டும் த.வெ.க.வின் அலட்சிய ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை - கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
இதனை சுட்டிக்காட்டி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பல்வேறு கேள்விகளை முன்வைத்தபோது, அதற்கு விடையாக தக்க வழியில் தரவுகளுடனான பதிலுரையை வழங்குவதற்கு பதிலாக, ‘பக்கம் பக்கமாக வசன உரை’யை படித்தார் முதலமைச்சர் விஜய்.
அந்த உரை, த.வெ.க தகவல் தொழில்நுட்ப அணி ‘ரீல்’ செய்து வெளியிட உகந்ததாக இருந்ததே தவிர, தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்பதே நாள்தோறும் அதிகரிக்கும் குற்றங்கள் உணர்த்துவதாய் உள்ளது.
இந்நிலையில், அண்மையில் நடந்துள்ள குற்றங்களை சுட்டிக்காட்டி, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“புதுக்கோட்டை அருகே 9 வயது சிறுவன், 17 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்;
நாகர்கோவிலில் கூலித்தொழிலாளர்கள் இருவர், மதுபோதையிலிருந்த கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும்; காரைக்குடி ஆனந்தநகர் பகுதியில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும் வருகின்றன.
நாள்தோறும் அதிகரித்தபடி இருக்கும் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை பெரும் வேதனை அளிக்கிறது.
ஒருபுறம் இந்த நிர்வாகத் திறனற்ற த.வெ.க ஆட்சியில் சீர்கெட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மறுபுறம், வழிநடத்த ஆளின்றி குற்றவாளிகளாக உருவெடுக்கும் இளம் தலைமுறையினரைக் கைக்கொள்ள முடியாமல் இந்தச் சமூகமே திணறிக்கொண்டிருக்கிறது.
சமூக அளவில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு - சீர்திருத்த பணிகள் ஏராளமாக உள்ள நிலையில், அதற்கு முதன்மை ‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, இப்பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக் காரணமாகிறது.”






