
தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கடந்த 17ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கடந்த ஆட்சியில் CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ் வழங்க ரூ.25 லட்சம் வரை பணம் செலுத்தினோம் என போகிற போக்கில் குற்றச்சாட்டை சுமத்திச் சென்றுள்ளனர். அதேபோல், CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்கள் கிடைக்க எந்த காலதாமதமுமின்றி உடனடியாக அமைச்சர் வழங்கியுள்ளார் என தவெக ஆட்சியின் அருவருடிகளாக மாறி பேட்டியளித்துள்ளனர்.
இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது குறைந்தபட்ச ஆதாரங்களோடு அணுகியிருக்க வேண்டும். ஊடகங்கள் முன்னால் நின்றுவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்துக்கொண்டு பேசக்கூடாது.
இவ்வளவு பணம் கொடுத்தோம், அவ்வளவு பணம் கொடுத்தோம் என வாய் கிழிய பேசுகிறவர்கள் ஒன்றிய அரசின் வழிமுறைகள் தெரியாமல் உள்ளார்களா என்கிற கேள்வி எழுகிறது. அல்லது யாராவது தூண்டுதலின் பேரில் இப்படி அபாண்ட குற்றச்சாட்டை தெரிவித்துவிட்டு போகிறார்களா.
சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளுக்கான அங்கீகாரம் அல்லது இணைப்பை சிபிஎஸ்இ அமைப்பே வழங்குகிறது. மாநில அரசுகள் அல்ல என்பது தனியார் பள்ளிகள் கூட்டமைப்பிற்கு தெரியாதா?
மாநில அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்ற விதி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு முன்பு இருந்தது. இந்நிலையில் 2013-இல் காங்கிரஸை சேர்ந்த சசி தரூர் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது, அது நீக்கப்பட்டது. பின்னர், 2017-இல், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அந்த விதியை மீண்டும் கொண்டு வந்தது. 2025-இல், அந்த விதி மீண்டும் நீக்கப்பட்டது.
2026-27 கல்வியாண்டு முதல், மாநில அரசின் தடையின்மை சான்றிதழ் (NOC) இல்லாமலேயே பள்ளிகள் சிபிஎஸ்இ இணைப்பிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறத் தேவையில்லை என்றும், நேரடியாக சிபிஎஸ்இ வாரியமே மாநில அரசுகளுக்கு இதற்கு முறையான ஆவணங்களுடன் விவரங்களை அனுப்பும், 30 நாட்களுக்குள் ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் அது ஒப்புதலாக எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்படும் என திருத்தப்பட்ட விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது திமுக ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடைமுறையாக இருக்கும். ஆனால், தவெக ஆட்சியில் வானத்திலிருந்து குதித்து புதிய விதிகளை உருவாக்கி இந்த அனுமதியை அமைச்சர் கையாலேயே வாங்கியுள்ளோம் என முகம் முழுக்க இன்ப வெள்ளத்தில் தத்தளித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பேட்டியளித்துள்ளனர்.

இனிமேல் தாராளமாக மாணவர்கள், பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கவா இந்த மகிழ்ச்சி என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியாளர்களை புகழ வேண்டுமென்றால் தனியாக போய் புகழ்ந்து அதற்கான தக்க சன்மானத்தை பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே, அதைவிடுத்து கடந்த ஆட்சியைப் பற்றி குறை பேசினால் தான் இப்போதிருப்பவர்கள் மகிழுவார்கள் என்றா?
தனியார் பள்ளிகள் கூட்டமைப்புகளுக்கு பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக பெற்றோர்களுக்கு, மக்களுக்கு தெரியுமாறு கல்விக் கட்டணத்தை தெரியப்படுத்தி வெளிப்படையாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே. இதை எதிர்த்து மேல்முறையீடு சென்றது ஏன் என்ற கேள்வி வருகிறதே. அதற்கு இவர்களின் பதிலென்ன?
கூலி வேலை செய்யும் ஏழைப் பெற்றோர்கள் தங்களின் பள்ளிக் கல்விக் கட்டண கொள்கை எனும் கொள்ளியை தெரிந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமா? இது ஒன்றும் அவ்வளவு பெரிய பரம ரகசியம் இல்லையே இதைக் கடைபிடிக்க முடியாதாவர்கள் குறை கூறிக்கொண்டு அங்கு பணம் கொடுத்தோம் இங்கு பணம் கொடுத்தோம் என யாரையோ குளிர்ச்சிப் படுத்த வீண் விமர்சனங்களை வைக்க வேண்டாம்.
விதிமுறைகளை தெரிந்து கொண்டு பள்ளி நடத்த வேண்டும், யாரோ சொன்னார்கள், எவருக்காகவோ சொன்னோம் என்ற பழிச் சொற்கள் எல்லாம் தேவையில்லை.
இதே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தி பள்ளி வகுப்பறைகள், பள்ளிப் பேருந்துகள், தூய்மையான வசதி உள்ளதா? மாணவர்களுக்கு ஏற்ற சூழலில் பள்ளிகள் அமைந்துள்ளதா? சரியாக விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என அரசு ஆய்வுகள் அல்லாமல் தனியே ஆய்வு நடத்த முன்வருமா. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளத்தில் செக்கிழுப்பதுபோல் வேலை வாங்குகிறார்களே இது குறித்தும் பொதுவெளியில் அதனை அறிக்கையாக வெளியிடுவார்களா இந்த ஒழுக்க சீலர்கள்.
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காததால், ஒன்றிய அரசுடன் முட்டி, மோதி சண்டை போட்டுக் கொண்டிருந்தது திமுக அரசுதான். அப்போது ஏதாவது குரல் கொடுத்ததா இந்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு. இல்லை சேர்க்கைக்கான முன்னெடுப்பை எதாவது எடுத்ததா?
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நீங்கள் சொல்லும் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சீரழித்த கல்வித்துறையை திராவிட மாடல் ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சீர்தூக்கி விட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்நாட்டின் மாணவர்கள் தான் படிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அனைத்து மாணவர்களையும் பள்ளிகளையும் ஒரேமாதிரி பார்த்து, மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, இன்று நாட்டிலேயே முன்மாதிரியாக விளங்குகிறது தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை.
ஆனால், என்ன வேண்டுமானாலும் பொய்க்குற்றச்சாட்டுகளை வைக்கலாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நினைப்பில் பொய்யை அடுக்கிச் சென்றிருக்கிறார்கள் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர். பொய் தற்போது நன்றாக இருக்கும். ஆனால், நீண்ட காலம் நிலைக்காது உண்மை தான் நிலைக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.




