
தூத்துக்குடி மாவட்டம் - ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தவெக நிர்வாகிகளால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கும் ஆறு மாதம் கழித்துத் தான் நாங்கள் கேள்வி கேட்க வேண்டுமா முதல்வர் விஜய் அவர்களே? என முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக கூறி தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
நீங்கள் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை சம்பந்தமே இல்லாமல் அப்போதைய முதலமைச்சர் கழகத்தலைவர் தளபதியாரை குற்றம் சாட்டி பொய்ச்செய்தி பரப்பினீர்களே?

தற்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை உங்கள் தவெக கட்சி நிர்வாகிகள் இருவரே மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கும் நாங்கள் ஆறு மாதம் கழித்து தான் கேள்வி கேட்க வேண்டுமா முதல்வர் விஜய் அவர்களே?
இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு செயல்படுகின்ற லட்சணமா? எதற்கெடுத்தாலும் 6 மாதம் அவகாசம் வேண்டுமென்றால், அந்த காலகட்டத்தில் நடக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கு யார் பொறுப்பு?
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம் என்று வாய்ச்சவுடால் விட்டு ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?






