
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களை த.வெ.க வென்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வந்தது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ஆளுநர் வழி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து, தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்கொள்ள நேரிடும் என்ற அச்சுறுத்தலின் பேரில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்துபேசிய பிறகு, வெளியில் இருந்து த.வெ.க.விற்கு ஆதரவு தருவதாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன.
அதனையடுத்து, த.வெ.க தலைவர் என்கிற முறையில் இன்று (மே 10) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சராக பதவியெற்றுக் கொண்டார் விஜய்.

அதன் பிறகு, பதவியேற்பு விழா மேடையிலேயே மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதன்மையாக, வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்திற்கான கையெழுத்து இருந்தது.
ஆனால், அனைத்து மக்களையும் மனம் குளிரவைக்கிற அறிவிப்பாக இது அமையாதது, பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 200 யூனிட்களாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் இல்லை. எந்தெந்த வீடுகளில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பெருவாரியான மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆட்சிக்கு வந்து விஜய் போடும் முதல் கையெழுத்திலேயே மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த திட்டத்திற்கும் முதல்வர் விஜய் கையெழுத்திடாதது சர்ச்சையாகியுள்ளது.






