தமிழ்நாடு

கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!

சென்னையில் அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து கொலை, கொள்ளை மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டிய த.வெ.க அரசோ மவுனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னையிலேயே அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணம்மாப்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.நகர் பகுதியில் உள்ள விஜயா மஹால் திருமண மண்டபத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து புறப்பட்டுச் சென்ற அவர், இரவு நேரத்தில் மீண்டும் விஜயா மஹால் அருகே சுயநினைவின்றிச் சரிந்து கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ உதவியாளர்கள், ராஜேந்திரனைப் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் ராஜேந்திரனைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.இதனை அடிப்படையாகக் கொண்டு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாண்டி பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் ராஜேந்திரனும், மற்றொரு நபரும் மது அருந்தியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு, அங்கிருந்து ராஜேந்திரனைப் பின்தொடர்ந்து வந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற ஆட்டோ ஓட்டுநர், ராஜேந்திரனின் தலையின் பின்புறம் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து ராஜேந்திரனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், பாண்டி பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரான பாலாஜியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், தியாகராயா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் விருந்துகள் முடிந்த பின் உணவருந்தும் அறையைச் சுத்தம் செய்யத் தொழிலாளர்களை அழைத்து வேலை வாங்கும் மேஸ்திரியாக ரவிகுமார் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு மண்டபத்தின் பின்புற வாகன நிறுத்துமிடத்தில் தலையில் பலத்த காயத்துடன் அவர் சுயநினைவின்றிப் பிணமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்துத் தகவலறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரவிகுமார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்த மணி என்பவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், வேலை தொடர்பாக ரவிகுமார் தன்னை அடிக்கடி திட்டி வந்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, குடிபோதையில் மரக்கட்டையால் ரவிகுமாரின் தலையில் அடித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்துப் போலீசார் அவரைத் தீவிரமாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories