
பொது இடங்களில் த.வெ.க.வினர் அஜாக்கிரதையாகவும், விதிமுறைகளை மீறியும் பேனர்களை வைப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அக்கட்சியினர் மேலும் ஒரு படி மேலே போய், பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் நிலையப் பதாகையையே நேரடியாக மறைத்து இந்த ‘கட்-அவுட்’ அரசியல் சாகசத்தை அரங்கேற்றியுள்ளனர்.
வடவள்ளி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அந்தப் புறக்காவல் நிலையத்தின் பெயர்ப்பலகை எங்கு இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு, கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களின் படங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர் அதன் மீது அப்படியே பொருத்தப்பட்டுள்ளது.
காவல் துறையின் பதாகையை மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த அத்துமீறல் காட்சிகளை, அப்பகுதியைக் கடந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது கைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலைப் படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது முகநூல் உள்ளிட்ட தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன.
"சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் ஒரு துறையின் அடையாளத்தையே, ஓர் அரசியல் கட்சி இப்படி அலட்சியமாக மறைக்கலாமா?" எனப் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.






