
முரசொலி தலையங்கம் (17-11-2025)
பீகார் வெற்றியின் பின்னணி!
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கவில்லை. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி அடுக்கும் காரணங்கள்தான் அதிர்ச்சிக்குரியதாக இருக்கின்றன.
“பீகார் தேர்தல் வெற்றி என்பது சிறந்த நிர்வாகம், வளர்ச்சி, மக்கள் நலன், சமூகநீதியின் வெற்றியாகும்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. பீகார் என்னவகையில் வளர்ந்துள்ளது என்பதை அவர் அடுக்கி இருந்தால் பாராட்டலாம். பீகாரில் சிறந்த நிர்வாகம் எப்படி அமைந்துள்ளது என்பதைச் சொன்னால் மகிழ்ச்சி அடையலாம். பீகாரில் சமூகநீதி தழைத் தோங்கிய காட்சிகளை விவரித்தால் போற்றலாம். இவை எதுவும் பீகார் வெற்றிக்கு காரணம் அல்ல.
பீகாரில் லாலு பிரசாத் கட்சியுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்திருந்த போது மோடி பேசாத பேச்சா? மக்களை நம்புவதை விட நிதிஷ் மந்திரவாதிகளைத் தான் நம்புகிறார்' என்று குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி. 'பீகாரை மினி சம்பல் பள்ளத்தாக்கு ஆக ஆக்க முயற்சிக்கிறார் நிதிஷ்' என்று குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி. 'துப்பாக்கி கலாச்சாரம் நடக்கும் ஆட்சி’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நிதிஷ் ஆட்சியைத் தான் பிரதமர் மோடி சொன்னார். எனவே மக்களாட்சி நடப்பதற்காக பீகார் மக்கள் நிதிஷ்குமாருக்கு வாக்களிக்கவில்லை. வாக்களித்திருக்கவும் மாட்டார்கள்.
இந்திய அளவிலான பத்திரிக்கைகள் முதல் தமிழ் நாளிதழ்கள் வரை அனைத்தும் சொல்வது, முதலமைச்சர் நிதிஷ்குமார் அரசு, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் வழங்கிய பத்தாயிரம் ரூபாய் தான் அனைத்துக்கும் காரணம்.

பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது 6.10.2025 அன்று. அதற்கு பத்து நாட்களுக்கு முன் 26.9.2025 அன்று பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1 கோடியே 25 லட்சம் பெண்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதற்காக மட்டும் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் சராசரியாக ஏழைகள் குடும்பத்தில் சராசரி மாத வருமானம் 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் ரூபாய் ஆகும். இப்படி இருக்கும் சூழலில் அவர்களது வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் போட்டால் என்ன ஆகும்? அதுதான் அவர்களை நிதிஷ் - பா.ஜ.க. கூட்டணிக்கு கண்ணை மூடிக் கொண்டு வாக்களிக்க வைத்துள்ளது.
‘தினத்தந்தி” நாளிதழ் சென்னையில் வசிக்கும் பீகார் மக்களின் கருத்துகளை வாங்கி வெளியிட்டுள்ளது. 'தேஜஸ்வீ வெற்றிபெற்றால் ரூ.2,500 தருவதாகச் சொன்னார். ஆனால் நிதிஷ்குமார் ரூ. 10 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டார்' என்று சொல்லி இருக்கிறார் ராஜேஷ். ‘பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கியதுதான் வெற்றிக்குக் காரணம்' என்கிறார் பீதார்ஸ். ‘பெண்கள் அதிகளவில் வந்து வாக்களிக்கவே ரூ.10 ஆயிரம் கொடுத்தது தான் காரணம்' என்கிறார் சச்சின் குமார். இதுதான் காரணமே தவிர, பிரதமர் சொல்லும் வளர்ச்சியுமல்ல, எந்த வெங்காயமுமல்ல.
வளர்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் பீகார் மிக மோசமாக இருப்பதை பிரதமர் மோடி அரசு வெளியிட்ட புள்ளி விபரங்களே காட்டுகிறது. வேறு ஆதாரங்கள் தேவையில்லை. பா.ஜ.க. என்றாலே ஜாதி அரசியல்தான். இதனை 'சோசியல் இன்ஜினியரிங்' என்று ஸ்டைலாகச் சொல்லிக் கொள்வார்கள். அனைத்து ஜாதி மக்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கி அனைத்து வகையிலும் ஒரே மாதிரியாக வளர்த்தெடுப்பதுதான் சமூகநீதி. அனைத்து ஜாதி மக்களையும் தங்களது கூட்ட ணிக்குள் கொண்டு வந்து அவர்களது வாக்குகளை அறுவடை செய்வதுதான் பா.ஜ.க.வின் ஜாதி அரசியல் ஆகும். அதனைத்தான் பீகாரிலும் செய்தார்கள்.

இதோ ‘தினமலர்' முதல் பக்கத்தில், பா.ஜ.க. கூட்டணி சாதித்தது எப்படி என்பதற்கான முதலாவது காரணமாகச் சொல்கிறது.
*சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே, அனைத்துத் தொகுதிகளிலும் பா.ஜ.க. சார்பில் ஜாதி மதிப்பீடு நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும் தேர்வு செய்யப்படும் வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகுந்த கவனத்துடன் இருந்தது. இதன் அடிப்படையில் தான் வேட்பாளர் தேர்வும் இருந்தது.
*கடந்த 2020 தேர்தலில் மகத், ஷாபாத் பகுதிகளில் ராஜ்புத், குஷ்வாகா சமூகங்களிடையே பிரிவினை ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள 24 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி வென்றது. இந்தத் தேர்தலில் ராஜ்புத், குஷ்வாகா ஓட்டுகளை ஒருங்கிணைக்க பவன்சிங், உபேந்திர குஷ்வாகா போன்ற தலைவர்களை பா.ஜ.க. பயன்படுத்தியது.
*கடந்த தேர்தலில் சிராக் பஸ்வானால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த பா.ஜ.க. மேலிடம், சிராக்கின் அனைத்து கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்தது -என்று பட்டியலிடுகிறது ‘தினமலர்'. ஜாதிகளின் கூட்டணியை உருவாக்கியது பா.ஜ.க. - நிதிஷ் அணி. அதுதான் வெற்றிக்கு மிக அடிப்படையாக அமைந்தது.
இவை அனைத்துக்கும் மேலாக தேர்தல் ஆணையத்தை தனது கூட்டணியின் தொங்குசதையாக மாற்றியது பா.ஜ.க..
சிறப்புச் சீர்திருத்தம் என்கிற பெயரால், வாக்காளர் பட்டியலையே சிதைத்தது தேர்தல் ஆணையம். லட்சக்கணக்கானவர்கள் வாக்குகள் பறிக்கப்பட்டது. வாக்குரிமை இல்லாமல் ஆக்கப்பட்டது. பல லட்சம் பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டார்கள். பறிக்கப்பட்டவர்களில் அதிகமாக இசுலாமிய மக்கள் இருந்தார்கள். தேஜஸ்வீ, காங்கிரஸ் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டார்கள். இது குறித்த எந்தக் கேள்விக்கும் தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை.
தேர்தலில் பல்வேறு கோளாறுகளையும் செய்தது ஆணையம். வாக்காளர் பட்டியலில் 7 கோடியே 42 லட்சம் வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் உள்ளதாக தெரிவித்த தேர்தல் ஆணையம், தேர்தலுக்குப் பிறகு 7 கோடியே 45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை விட 3 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை எப்படி உயர்ந்தது? 66.91 விழுக்காடு மக்கள் வாக்களித்தனர் என்று தெரிவித்த தேர்தல் ஆணையம் எத்தனை வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
எனவேதான் பீகார் வெற்றிக்கு மோடியோ, நிதிஷ்குமாரோ சொந்தம் கொண்டாடுவதை விட தேர்தல் ஆணையம் தான் சொந்தம் கொண்டாட முழுத் தகுதி உள்ளது.
பீகார் மக்களால் தேஜஸ்வீ-- காங்கிரஸ் கூட்டணி நிராகரிக்கப்பட வில்லை. பீகார் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் விகிதத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி 23 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. பா.ஜ.க. 20 விழுக்காடு வாக்குகளையும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 19 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன.
'இந்தியா' கூட்டணி மக்களின் செல்வாக்கை பெறவில்லை என்றால் ராகுலும், தேஜஸ்வீயும் செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் கூடி இருக்க மாட்டார்கள். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில்தான் இவர்கள் நீந்தினார்கள். அதை மீறி நிதிஷ் - பா.ஜ.க. வெல்வதற்கு மக்களின் எண்ணத்தை மீறிய காரணங்கள் அமைந்து இருந்திருக்கின்றன.
இதனைத்தான் சி.பி.ஐ., எம்.எல். லிபரேஷன் கட்சியின் பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா சொல்லி இருக்கிறார் : “இந்தத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் இயற்கைக்கு மாறானவை. இது பீகாரின் நடைமுறை உண்மையுடன் ஒத்துப் போகவில்லை”.
இந்த உண்மைகளை பீகார் மக்கள் உணராமல் இருக்கலாம். இது எதனால் கிடைத்த வெற்றி என்பது பிரதமர் மோடியின் உள்ளத்துக்குத் தெரியும். தனிமையில் சிந்திக்கும் போது மகிழ்ச்சி தரும் வெற்றியாக இது அவருக்கு இருக்க முடியாது.






