
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்காமல், மக்களை வஞ்சிக்கும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதோடு பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்தும் நிவாரணம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை வழங்காமல் ஓரவஞ்சனை காட்டி வருகிறது.
இதற்கு தொடர்ந்து மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், பாஜக திருந்தவில்லை. இந்த சூழலில் SIR என்று சொல்லப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, பீகாரில் நடத்தியது இந்திய தேர்தல் ஆணையம். இதற்கு கண்டு எதிர்ப்புகள் கிளம்பியபோதிலும், தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டது.

இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படி, பீகாரில் பல லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது தேர்தல் ஆணையம் SIR பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
அதோடு 12 மாநிலங்களிலும் SIR பணிகள் வெறும் ஒரு மாதத்திலேயே நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) அதிகாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக SIR பணிகள் தொடங்கிய சில நாட்களிலேயே மேற்கு வங்கத்தில் BLO அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து இதையே தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில், புதுப்புது உத்தரவு பிறப்பித்து பணிச்சுமையை அதிகரிப்பதாக தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்திலேயே BLO அதிகாரிகள் நேற்று (நவ.15) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழலில் தற்போது கேரளாவில் BLO அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பையனூர் பள்ளி ஒன்றில் அனீஷ் ஜார்ஜ் (41) என்பவர் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்த சூழலில் BLO அதிகாரியான இவர் பாரம் வழங்குவது தொடர்பாக நேற்று இரவு 2 மணி வரையில் பணியாற்றி உள்ளார். எனினும் மேலதிகாரிகள் இன்று மேலும் அதிக எண்ணிக்கையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பாரத்தை வழங்குமாறு உதறிவிட்டுள்ளனர்.
இதனால் ஓய்வு நாளன்றும் பணியாற்ற உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று உறவினர்களிடம் கடந்த சில நாட்களாக அவர் புலம்பி வந்துள்ளார். இதன் காரணமாக அவர் இன்று (நவ.16) காலை சுமார் 11 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது கணவர் SIR வேலைப்பளு காரணமாகதான் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார். உயிரிழந்த அனீஷ் ஜார்ஜுக்கு பள்ளி செல்லும் வயதில் 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






