
சென்னை கொளத்தூரில் உள்ள சோமநாத சுவாமி திருக்கோயில் சார்பில் 4 இணைகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நடத்தி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது :
"இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அறம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி அமைந்து இதுவரை 2,800 திருமணங்கள் நடந்து முடிந்துள்ளது. கூடுதலாக 1,000 திருமணங்கள் மார்ச் மாத இறுதிக்குள் நடத்தப்படும். திமுக ஆட்சி அமைந்து இதுவரை 3,813 திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடந்து உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா வருவதை முன்னிட்டு நாளை மறுநாள் திருவண்ணாமலை மாவட்ட அமைச்சராக இருக்கக்கூடிய எ.வ.வேலு அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் கூட்டம் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை செய்யும்." என்றார்.

=> தொடர்ந்து நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் அர்ச்சகர் ஒருவர், "தாமரை அனைவரது உள்ளத்திலும் மலர வேண்டும்" என்று பக்தர்களிடம் கூறியது தொடர்பான கேள்விக்கு...
திருக்கோயில் அர்ச்சகர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் குளிரும் வகையில் பக்தர்கள் நலனை நாடி அர்ச்சனை செய்ய வேண்டுமே தவிர, அரசியல் சாயத்தை பூசிக்கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் அந்த அர்ச்சகர் கூறிய சின்னத்தை ஆதரிப்பவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் அவரை எப்படி குருக்களாக ஏற்றுக் கொள்வார்கள்? அந்த அர்ச்சகர் கூறியது குறித்து புகார் வந்துள்ளது. தேவைப்பட்டால் விசாரணை மேற்கொள்ளப்படும்.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள சிங்காரவேலர் ஆலயத்தின் சிவா குருக்கள், பெங்களூரில் இருந்து வந்த பக்தர்களிடம், அம்மன் தாமரை மலர் போன்றவள் என்றும், உங்கள் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் என்றும் பாஜகவுக்கு ஆதரவாக மறைமுக பிரச்சாரம் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி இடதுசாரிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






