
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:-
தஞ்சை வடக்கு மாவட்டம், மத்திய மாவட்டம், தெற்கு மாவட்டம் என இன்று மூன்று கழக மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களை எல்லாம் ஒரே இடத்தில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இளைஞர் அணிக்குப் பொறுப்பு நியமிக்கப்பட்ட பிறகு, முரசொலியில் அறிவிப்பு வந்த பிறகு, ஒவ்வொரு மண்டலமாக நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி வருகிறோம். ஒரு மாதத்திற்கு முன்பு திருவண்ணாமலையில் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை ஒரு மாநாடு போல நடத்தி முடித்தோம். கழகத் தலைவர் அவர்கள் வந்து உரையாற்றினார். ஒரு வாரத்திற்கு முன்பு விருதுநகரில் தெற்கு மண்டல நிர்வாகிகளிடம் தலைவர் அவர்கள் சந்தித்து பேசி அவர்களை எல்லாம் ஊக்கப்படுத்தினார்.
அந்த வரிசையில் இன்று மற்ற மண்டலங்கள் எல்லாம் சென்று மண்டலம் மண்டலமாக நடத்தினோம். ஆனால், இன்று தஞ்சாவூருக்கு நானே நேரில் வந்து உங்களை எல்லாம் நேரில் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.
நன்றி சொல்வதற்கும் வந்துள்ளேன். ஏனெனில், திருவண்ணாமலையில் நடந்த சந்திப்பிற்கும், விருதுநகரில் நடந்த சந்திப்பிற்கும் இங்கிருக்கக்கூடிய தஞ்சை நிர்வாகிகள் முழு அளவில் உழைத்து அந்த வெற்றிக்கு நீங்கள் பாடுபட்டுள்ளீர்கள். அதற்கு நன்றி சொல்லவும் நான் இன்று தஞ்சாவூருக்கு வருகை தந்துள்ளேன்.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி இதே திடலில், இதே செங்கிப்பட்டியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்கின்ற டெல்டா மண்டல மகளிரணி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். நானும் கலந்துகொண்டேன். அன்று மகளிரணி சார்பாக அந்த நிகழ்ச்சி நடந்தது. இன்று இளைஞர் அணி சார்பாக அதே போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு, மறுபக்கம் மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு. இந்த நிகழ்வுக்கெல்லாம் வருகின்ற எழுச்சியான இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, இளைஞர்களைப் பார்க்கும்போது, மகளிரைப் பார்க்கும்போது எல்லாரும் கேட்கிறார்கள். இளைஞர்கள் எந்தப் பக்கம்? மகளிர் எந்தப் பக்கம்? நான் சொல்கிறேன், இளைஞர்கள் எங்கள் பக்கம், மகளிரணி எங்கள் பக்கம். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது போன்று இன்று இங்கு எழுச்சியோடு கூடியுள்ளீர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் என்றைக்குமே தி.மு.க-வின் கோட்டை என்பதை மீண்டும், மீண்டும் நிரூபிக்கின்ற மாவட்டம் இந்தத் தஞ்சை மாவட்டம். இந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைக் கொடுத்த மண். நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் அடிக்கடி பெருமையோடு சொல்வார், "நான் ஒரு டெல்டா காரன்" என்று பெருமையோடு சொல்வார். இன்று அவர் வழியில் நானும் ஒரு ‘டெல்டா காரன்’ என்ற பெருமையோடு உங்களை எல்லாம் சந்திக்க வருகை தந்துள்ளேன்.
இந்த டெல்டா மாவட்டத்தில் தலைவர் கலைஞருடைய, நம்முடைய கழகத் தலைவர் அவர்களுடைய காலடி படாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கழகத்தைப் இப்பகுதியில் வளர்த்துள்ளார்கள். 1962-இல் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த இரண்டாவது சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் அவர்கள் இதே தஞ்சாவூர் தொகுதியில் நின்றுதான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட பல்வேறு பெருமைகளைப் பெற்ற தஞ்சை மண்ணில் உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.
இன்று நம்முடைய இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இன்று கிட்டத்தட்ட 15,000 நிர்வாகிகள் இந்தக் கூட்டத்திற்கு வந்துள்ளீர்கள். உறுப்பினர்களைப் பார்த்தால் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளோம். இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சியின் சார்பு அணிக்கும் இப்படி ஒரு வலுவான கட்டமைப்பு நிச்சயம் கிடையாது. நம்முடைய இளைஞர் அணிக்கு மட்டும்தான் அந்தச் சிறப்பு.
இன்று பல கட்சிகள் வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கே போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆள் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நாம் இளைஞர் அணிக்கு இன்று பாகம் வரை நிர்வாகிகள் நியமித்துள்ளோம்.
உங்களைப் போன்ற இளைஞர் அணித் தம்பிமார்களால்தான் இன்று நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் 76 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இன்றும் அதே இளமையோடு, அதே துடிப்போடு தி.மு.க வெற்றி பெற்றுள்ளது என்றால், இங்கே வந்துள்ள இளைஞர் அணித் தம்பிமார்களாகிய நீங்களே மிக முக்கியமான காரணம்.
நம்முடைய தலைவர் அவர்கள் இளைஞர் அணியைத் தொடங்கி 45 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இளைஞர் அணியின் ஒவ்வொரு கருப்புச் சிவப்பு தம்பிமார்களும் இன்று கழகத்தின் ராணுவக் கட்டுப்பாட்டோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கழகத்தில் பணியாற்றுவதற்கு ஒரு பயிற்சி களமாக இன்று இளைஞர் அணி திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி, இன்று மிக மிக முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் பலர் நம்முடைய இளைஞர் அணியில் பயிற்சி எடுத்துக்கொண்டு சென்றவர்கள்தாம். உதாரணமாகத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மேயர்கள் என இளைஞர் அணியிலிருந்து உருவானவர்கள்தான் இன்று பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் பெருமையோடு சொல்லப்போனால், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கொடுத்ததும் தி.மு.க-வின் இளைஞர் அணிதான் என்று சொன்னால் அது நமக்குத்தான் பெருமை. அப்படிப்பட்ட இளைஞர் அணியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
இன்று நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்துப் பாராட்டிக்கொண்டு இருக்கிறது.
பல்வேறு திட்டங்கள். மகளிருக்கு விடியல் பயணத் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவிகளுக்குப் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்குத் தமிழ்ப் புதல்வன் திட்டம், ‘நான் முதல்வன்’ திட்டம். தமிழ்நாடு முழுவதும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கிக்கொண்டு இருக்கிறார். இப்படிப் பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொல்லிச் செய்துகாட்டியுள்ளார்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்ற ஒரு திட்டம், அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம். 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் நம்முடைய தலைவர் அவர்கள் வழங்கி வருகிறார். இந்தத் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 5 லட்சம் மகளிர் இந்த மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டின் மகளிருக்கு இந்த உரிமைத் தொகை சென்று சேர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. பாசிச சக்திகளுக்கும் அடிமைகளுக்கும் இது பிடிக்கவில்லை. எப்படியாவது இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், அவர் பெயர் அஷ்வினி குமார் உபாத்யாய், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எப்படியாவது உரிமைத் தொகையை நிறுத்த வேண்டும் என்று. இந்தச் செய்தி தலைவருக்கு வந்த உடனே, "நீ என்னுடைய தமிழ்நாட்டு மகளிருக்கு 1,000 ரூபாய் கொடுப்பதைத் தடுக்கிறாயா? நான் 5,000 ரூபாய் கொடுக்கிறேன்" என்று இரண்டு நாட்களுக்கு முன்பு 5,000 ரூபாயை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்குச் சேர்த்து 3,000 ரூபாயும், கோடை காலத்திற்கான சிறப்பு ஊக்கத்தொகையாக 2,000 ரூபாயும் என மொத்தம் 5,000 ரூபாயைத் தலைவர் வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், கடந்த மாதம் பொங்கலுக்கு 3,000 ரூபாய், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் என மொத்தம் 9,000 ரூபாயைத் தலைவர் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் மகளிர் இப்போது மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
பாசிசவாதிகளும் அடிமைகளும் இன்று வயிற்றெரிச்சலில் இருக்கிறார்கள், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, இங்கே இருக்கக்கூடிய நம்முடைய அரசு தொடர வேண்டும்.
அடுத்த மாதத்திலிருந்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்னொரு வாக்குறுதி வழங்கியுள்ளார். மீண்டும் தமிழ்நாட்டில் அமையப் போவது திராவிட மாடல் அரசுதான். மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பேன் என்று நம்முடைய தலைவர் உறுதிமொழி அளித்துள்ளார். இப்பொழுது ஒட்டுமொத்த சங்கிக் கூட்டமும் அடிமைக் கூட்டமும் கதறிக்கொண்டு இருக்கிறது.
இந்தத் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொடுத்துள்ளது:
ஒரத்தநாடு வட்டம் பஞ்சநதிக்கோட்டை கிராமத்தில் 1.41 கோடி ரூபாய் செலவில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் 70.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி வட்டத்தில் 7.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது வசதி மையம் திறக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு வட்டம், நடுவூரில் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சேமிப்புக் கிடங்கு அமையவுள்ளது.
பூதலூர் வட்டம் செங்கிப்பட்டியிலும் மற்றும் பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடம் பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை, பட்டுக்கோட்டை மனோரா 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு கடல் பசு பாதுகாப்பு மையம், 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்துள்ளோம்.
திருவோணம் வருவாய் வட்டத்தை நம் அரசு உருவாக்கியுள்ளது. திருவையாறு புறவழிச்சாலை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
ஏரிப்புறக்கரை, கீழத்தோட்ட மீனவ கிராமங்களுக்கு 32 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்குதளம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஈச்சங்கோட்டை – வெட்டிக்காடு இடையே 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்லணை கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது.
இப்படிப் பல்வேறு திட்டங்களைத் தஞ்சை மாவட்டத்திற்கு நம்முடைய அரசு செயல்படுத்தியுள்ளது. முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்களால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக 11.19 சதவிகித வளர்ச்சியோடு சிறப்பாக வளர்ந்து சாதித்துக் காட்டியுள்ளது.
இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத பா.ஜ.க அரசு நம்முடைய தமிழ்நாட்டிற்கு எல்லா வகையிலும் தொல்லை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. நிதி உரிமையைப் பறிக்கிறார்கள், மொழி உரிமையைப் பறிக்கிறார்கள், கல்வி உரிமையைத் தடுத்து நிறுத்துகிறார்கள். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் திணிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டத்தைக் கூட அறிவிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பட்ஜெட்டை முழுமையாகப் படித்து முடிப்பதற்கு முன்னரே மிகச் சிறந்த பட்ஜெட் என்று வாழ்த்துச் சொல்கிறார்.
நீங்களெல்லாம் முரட்டு பக்தர்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். முரட்டு தொண்டர்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கேயாவது எடப்பாடி பழனிச்சாமியைப் போன்ற ஒரு முரட்டு அடிமையை எங்காவது பார்த்ததுண்டா? ‘ஜாடிக்கு ஏற்ற மூடி’ என்பது போல, மோடிக்கு ஏற்ற அடிமையாகத் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளங்குகிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருவதால் பா.ஜ.க-வினர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார்கள். மோடி வருவார், அமித்ஷா தொடர்ந்து வருவார். ஆனால் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதி மட்டும் நிச்சயம் வராது. திரு.மோடி அவர்களே, திரு.அமித்ஷா அவர்களே, உங்களுடைய பருப்பு உத்தரப்பிரதேசம், பீகார்ல, வடநாட்டில் வேகலாம், ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு ஒருபோதும் வேகவே வேகாது.
இன்றைக்கு பாஜக, அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் எப்படிப் புகழ்ந்தார்கள் என்று பாருங்கள். நான் அவர்கள் என்ன பேசினார்கள் என்று மட்டும் சொல்கின்றேன். யார் சொன்னார்கள் என்று நீங்களே கண்டு பிடியுங்கள்.
ஒரு காலத்தில் "எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதற்குத் தூக்கில் தொங்கிவிடலாம்" என்று சொன்னார்கள். இன்னொருவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு கவுன்சிலர் ஆகும் தகுதி கூட கிடையாது. அவரை "டயர் நக்கி" என்று விமர்சித்தார். இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுக்கு "இரட்டை எஞ்சின்" அரசு வேண்டும் என்று மோடி சொல்கிறார். திரு.மோடி அவர்களே முதலில் உங்கள் வண்டியின் டயர்களை பாருங்கள். தமிழ்நாட்டில் நீங்கள் கூட்டணி வைத்துள்ள அனைவரும் பஞ்சரான டயர்கள். உங்களுடைய பஞ்சரான டயர்களும், இயங்காத டப்பா என்ஜினும் உள்ள உங்க வண்டி தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடவே, ஓடாது. இன்று எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வின் மிகப்பெரிய அடிமையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
இவர்கள் இப்படி என்றால், இன்னொரு பக்கம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. வெறும் சத்தம். ஒரு கொள்கை, லட்சியம், ஒரு கோட்பாடு எதுவுமே இல்லாமல், அப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அரசியல் என்றால் ஏதோ பொழுதுபோக்கு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இளைஞர் அணி தம்பிமார்களாகிய நீங்கள் சொல்ல வேண்டும்; அரசியல் என்பது மக்கள் பணிதான், பொழுதுபோக்கு கிடையாது, அது ஒரு அர்ப்பணிப்பு, அது ஒரு தியாகம் என்பதை நம்முடைய தி.மு.க இளைஞரணித் தம்பிமார்கள் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இந்த அர்ப்பணிப்பும், தியாகமும் இல்லாத அந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும் எதுவும் சாதிக்க முடியாது. ஆகவே, இப்படிப் பாசிஸ்ட்டுகளையும் பழைய, புதிய அடிமைகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு இங்கே வந்திருக்கக்கூடிய இளைஞர் அணித் தம்பிமார்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கப்போகின்ற போர்தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பதை நாம் மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இந்தப் போரில் தமிழ்நாட்டைக் காக்கப் போகின்ற முன்களப் பணியாளர்கள், வீரர்கள் நீங்கள்தான். சமீபத்தில் விருதுநகரில் நடந்த அந்த இளைஞரணி சந்திப்பில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், கழகத் தலைவர் அவர்கள் இளைஞர் அணியைப் பாராட்டிப் பேசினார்கள். என்ன தெரியுமா சொன்னார்கள்? இளைஞர் அணி என்றால் பிரம்மாண்டம் என்றார்கள். நாம் ஏதோ வெறும் எண்ணிக்கையில் மட்டும் பிரம்மாண்டம் கிடையாது. நாம் எளிமையில் பிரம்மாண்டம், நாம் கொள்கையில் பிரம்மாண்டம், உறுதியில் பிரம்மாண்டம். லட்சியத்தில், களப்பணியில் பிரம்மாண்டம். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய தேர்தல் வேலைகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
ஏனென்றால், வரும் சட்டமன்றத் தேர்தல் சமூக நீதிக்கும் சமூக அநீதிக்கும் இடையில் நடக்கப் போகின்ற தேர்தல். தமிழ்மொழிக்கும் இந்தி மொழித் திணிப்புக்கும் இடையில் நடக்கப் போகின்ற ஒரு தேர்தல். தமிழ்நாடு என்றைக்குமே தலைகுனியாது என்று டெல்லிக்கு நாம் தெரிவிக்க வேண்டிய தேர்தல். தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்குக் கட்டுப்பாட்டிற்கு Out of control என்பதைத் தெரிவிக்க வேண்டிய தேர்தல்.
தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள்தான் இருக்கின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியாகத் திட்டமிட்டு உங்களுடைய பணிகளை நீங்கள் வகுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்துப் பேசுங்கள். நம்மிடம் சாதனைகள் இருக்கின்றன, வரலாறு இருக்கிறது. மக்களிடம் தைரியமாகச் சென்று நம்முடைய சாதனைகளையும் வரலாற்றையும் எடுத்துச் சொல்லுங்கள்.

நீங்கள் சொன்னால் கேட்கும் வகையில் 50-லிருந்து 60 பேரை உங்கள் பக்கம் நீங்கள் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பகுதிகளில் உருவாக்குங்கள். உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், கழகத் தலைவர் அவர்கள் நிச்சயம் சரியான நேரத்தில் உங்களுக்குத் தருவார்கள். இளைஞர்கள்தான் பல்வேறு புரட்சிகளை, மாற்றங்களை நடத்திச் காட்டியிருக்கிறார்கள். அதனால்தான் "என்னுடைய கொள்கைகளை அடுத்து வரும் தலைமுறை நிறைவேற்ற வேண்டும்" என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். "என்னுடைய லட்சியங்களை எனது தம்பிமார்கள் நிறைவேற்றுவார்கள்" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். "எனக்குப் பிறகு தி.மு. கழகத்தை என்னுடைய உடன்பிறப்புகள் காப்பாற்றுவார்கள்" என்று டாக்டர் கலைஞர் அவர்கள் சொன்னார். அதனால்தான் நம்முடைய தலைவர் அவர்கள் "என்னுடைய மூத்த பிள்ளை இளைஞர் அணிதான்" என்று பெருமையோடு நமக்குச் சொன்னார்கள்.
ஆகவே, நம்முடைய தலைவர்களின் வார்த்தைகளை நீங்கள் காப்பாற்ற வேண்டும். முக்கியமாகத் தமிழ்நாட்டை டெல்லியிடமிருந்து நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணப்படும் அன்று எல்லா வாக்குச்சாவடிகளிலும் நிச்சயம் உதயசூரியன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நம்முடைய தோழமைக் கட்சிகளையும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வைக்க வேண்டும்.
மோடி வந்ததும் உதயசூரியன் மலர்ந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு பொய்யைக் கூறிக்கொண்டு இருக்கிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர் அணித் தம்பிமார்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் சார்பாக இந்தக் கூட்டத்திலிருந்து நான் சொல்கிறேன். எங்களின் உதயசூரியன் என்பது ஏதோ வெறும் சுவரில் எழுதி வைக்கின்ற வரைபடம் கிடையாது. உதயசூரியன், கழக உடன்பிறப்புகள் உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் ரத்தத்திலும் ஊறிப் போன சின்னம் உதயசூரியன். அண்ணா கண்டெடுத்த சின்னம் உதயசூரியன். நம்முடைய கழகத் தலைவர் நமக்காகக் கட்டிக்காத்த சின்னம் உதயசூரியன். டாக்டர் கலைஞர் அவர்கள் நம்மிடம் கொடுத்த சின்னம் உதயசூரியன். அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும் அட்டைகளும் என்னதான் உளறினாலும் புலம்பினாலும் களத்தில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கப் போகிற சின்னம் உதயசூரியன்.
வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் நமக்கு ஓர் இலக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த இலக்கை நோக்கி நம்முடைய இளைஞர் அணித் தம்பிமார்கள் ராக்கெட் வேகத்தில் உழைக்க வேண்டும். 200 தொகுதிகள் போதாது, அதைவிட அதிகமான தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயம் வெற்றிப் பெற்று காட்டும். அதற்கான தொடக்கமாக இந்தத் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய எட்டுத் தொகுதிகளிலும் நம்முடைய உதயசூரியன் சின்னம் வெற்றி பெற வேண்டும்.
இந்தத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றிப் பெற்றால், அது தமிழ்நாடு வெற்றியடைந்ததற்கு சமம். கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நம்முடைய தலைவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால், நாம் அனைவரும் ஒற்றுமையோடும் உறுதியோடும் உழைப்போம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.






