
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று (07/11/2025) நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகிவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி தெரிவித்ததாவது:
தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (S.I.R) தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து S.I.R-ஐ சரியாக அமல்படுத்தியிருக்க முடியும்.

S.I.R-ன் விளைவை பீகாரிலேயே நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில், மக்களின் வாக்குரிமை எந்த அளவிற்கு பறிக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் பீகாருக்கு சென்று அங்கே நடக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முழு ஆதரவையும் அளித்து இருக்கிறார்.
ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகதான், இந்த SIR அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல பிரச்சனைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துதான் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணி கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.






