
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (07-11-2025) நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைப் பெரும் தலைவர் இரா.ஏ. பாபு இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று கழகத் தலைவர், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
நம் நினைவில் வாழும் செங்குன்றம் மிசா ஏழுமலை அவர்கள் இல்லத்தில் நடைபெறும் திருமண விழா; நம்முடைய ஏழுமலை அவர்களின் பேரனும், நம்முடைய அருமைச் சகோதரர் பாபு அவர்களுடைய மகனுமான திலீபன் பாபு அவர்களுக்கும் - கௌதமி பிரபா ஆகியோருக்கும் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று மனவிழாவை நடத்தி வைத்து அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்!
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய போராட்டம், நெருக்கடி நிலைக் காலம். அந்த நெருக்கடி நிலைக் காலத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த தியாகங்கள்; தலைவர்களில் இருந்து தொண்டர்கள் வரை பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, அந்த தியாகங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அவர்கள் பட்டிருக்கும் கஷ்டங்கள் நஷ்டங்கள் இதெல்லாம் வரலாற்றில் தெளிவாகப் பதிந்திருக்கக் கூடியவை.
அப்படி வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய வகையில், எதற்கும் அஞ்சாமல் – எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கக்கூடியவர்களாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றைக்கும் கம்பீரமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
அதற்கு அடையாளமாக விளங்கியவர்தான், நம்முடைய செங்குன்றம் ஏழுமலை அவர்கள். ஓராண்டு காலம் மிசா என்ற கொடுமையான சட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்திருக்கும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கைதாகிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், நம்முடைய மிசா ஏழுமலை அவர்களும் கைது செய்யப்பட்டு எங்களோடு சென்னைச் சிறைச்சாலையில் இருந்தவர்.
அவர் ஏன் மிசா சட்டத்தில் கைதாகி உள்ளே வந்தார் என்று கேட்டால், மிசா என்ற அந்தக் கொடுமையான சட்டம் தமிழ்நாட்டில் பாய்ச்சப்பட்டு, நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் முன்னோடிகள் எல்லாம் கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், சிறையில் இருப்பவர்கள் யார் யார் என்பதைப் பற்றி கூட, பத்திரிகைகளில் எழுத முடியாத - தொலைக்காட்சிகளில் சொல்ல முடியாத - வெளியில் செய்தியை வெளியிட முடியாத வகையில், அன்றைக்குக் கடுமையான சட்டங்கள் எல்லாம் இருந்தன.
அதுமட்டுமல்ல, கட்சியில் இருக்கும் தலைவர்கள் யாரும் பொதுக் கூட்டத்தில் பேசக்கூடாது; வெளியில் சென்று பேசக்கூடாது; திருமணத்திற்குச் சென்றால்கூட அரசியல் பேசக்கூடாது என்ற நிலை எல்லாம் இருந்த நேரம். தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பேசுவதற்குக் கூட இடம் கொடுக்கக் கூடாது என்று அன்றைக்குப் பல கொடுமைகள் எல்லாம் சட்டமாக இயற்றி வைத்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் நம்முடைய செங்குன்றம் பகுதியைச் சார்ந்த நம்முடைய மிசா ஏழுமலை அவர்கள் உடனடியாக, “தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடைய பகுதிக்கு வருவதாக இருந்தால், என்னுடைய ரைஸ் மில்லை நான் தருகிறேன்” என்று சொன்னபோது, நம்முடைய தோழர்கள் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள், “நீங்கள் தந்தால் உங்களுக்குப் பல கொடுமைகள் ஏற்படும்; உங்கள் மீது வழக்கு வரும்; நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்” என்றெல்லாம் கூட எச்சரித்திருக்கிறார்கள்.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், எந்தக் கொடுமை வந்தாலும் சரி; கைது செய்யப்பட்டாலும் சரி, நான் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இடம் கொடுப்பேன் என்று சொல்லி, அந்த ரைஸ் மில்லை அன்றைக்குத் துணிச்சலாக தந்தார்கள். அவ்வாறு தந்த காரணத்தால், இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில் இருக்கும் எங்களோடு அவரைக் கொண்டு வந்து அடைத்தார்கள். இதுபோன்ற பல செய்திகள் உண்டு.
அதேபோல, விருத்தாசலத்தில் குமாரசாமி என்கிற ஒரு கடை வியாபாரி. அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் கிடையாது. ஆனால் கட்சியின் அனுதாபியாக இருந்தவர். அவரையும் மிசா சட்டத்தில் கைது செய்து உள்ளே அடைத்தார்கள். எதற்கு என்று கேட்டால், எவ்வாறு ஏழுமலை கைது செய்யப்பட்டார்களோ, அதேபோல அவரும் விருத்தாசலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் பேசுவதற்கு இடம் கொடுத்த காரணத்தினால், இடம் கொடுத்த காரணத்திற்காக மட்டுமல்ல; வீட்டிற்கு அழைத்து மதிய உணவு வழங்கிய காரணத்தால், கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு யார் யாரோ கிளம்பி, இந்தக் கழகத்தை அழித்து விடலாம்; ஒழித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்களே, அவர்கள் கனவெல்லாம் நிச்சயம் பலிக்காது, எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் நான் குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏழுமலை அவர்களுடைய அருமை மகன் நம்முடைய சகோதரர் பாபு அவர்கள் இங்கே நன்றி உரை ஆற்றுகிறபோது எடுத்துச் சொன்னார். நாங்கள் பெருமைப்படுகிறோம்; மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்; இதை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஏழுமலை அவர்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணத்தில் நாங்கள் கலந்து கொள்வதில், உள்ளபடியே நாங்கள் பெருமைப்படுகிறோம்; மகிழ்ச்சி அடைகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு பாபு அவர்கள், தந்தையின் வழியில் கொள்கைத் தடம் மாறாமல் இந்த இயக்கத்திற்குத் துணை நின்று தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மாணவப் பருவத்தில் இருந்தே கழகப் பணிகளுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு முழுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார். போராட்டக் களம் என்றாலும், துணிவோடு களம் காணும் ஒரு ஆற்றல் மிக்க செயல்வீரராக நம்முடைய பாபு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மென்மேலும் வளர வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கு நாடு இருக்கும் சூழ்நிலை எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிலும் S.I.R. எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் நான்காம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் அது நடைபெறுகிறது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் இதை எதிர்த்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி நாம் தீர்மானம் போட்டு அந்த அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு நாம் சென்றிருக்கிறோம். வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
சட்டப் போராட்டம் ஒரு பக்கம் என்று சொன்னாலும், வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்காணிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அது, இன்றைய நிலையில் மிக மிக அவசியமான ஒன்று என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
அதற்காக வருகிற 11-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம் என்ற செய்தியைக் கூட நேற்றைக்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, நாம் நம்முடைய உணர்வை வெளிப்படுத்த இருக்கிறோம்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில், B.L.O.-க்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று படிவங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நான்காம் தேதிக்குள் இந்தப் படிவங்களை நிரப்பி அதைச் சமர்ப்பித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் பெயர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரைக்கும், டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் மூன்று முறை அவர்கள் வர இருக்கிறார்கள். நாம் வேலைக்குச் சென்று விட்டால், ஏதாவது பணிகளுக்குச் சென்று விட்டால், வீட்டில் இல்லாமல் இருந்தால், நம்முடைய வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
அதனால், இந்தப் பணி முடிந்த பிறகு ஆன்லைனில் நாம் தொடர்பு கொண்டு சேர்க்கின்ற முயற்சி இருக்கிறது. அது தேர்தல் நேரத்தில் எவ்வளவு பெரிய நெருக்கடி எல்லாம் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, குறிப்பாக ஏழை எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்கு ஒரு தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் தந்திருக்கிறது. ஆனால் அதை மட்டுமே நம்பி நாம் ஏமாந்துவிடக் கூடாது. அதனால்தான் நம்முடைய கட்சியைப் பொறுத்த வரைக்கும், நம்முடைய சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் நம்முடைய மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அவர்கள் மேற்பார்வையில் உதவி மையம் அமைத்திருக்கிறோம்.
கழக நிர்வாகிகள் உதவிக்காக ஒரு தொலைபேசி எண்ணையும் அறிவித்திருக்கிறோம். கழக நிர்வாகிகள் அனைவரும் உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், அந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். S.I.R. தொடர்பாக எந்தக் குழப்பம் இருந்தாலும் இதில் நீங்கள் கேட்டுத் தெளிவு பெறலாம்.
அதுமட்டுமல்ல, நம்முடைய காங்கிரஸ் பேரியக்கத்தின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி அவர்கள் இதற்காகப் பெரிய போராட்டத்தை - இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, கர்நாடகா, ஹரியானா பகுதிகளில் எந்த அளவிற்கு வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது என்று எல்லாம் ஆதாரப்பூர்வமாக எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது. வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும். இந்தப் பெரும் பொறுப்பை கழகத்தின் BLA 2-க்கள் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும். தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் காவலர்களாகக் கழகத்தின் பூத் ஏஜெண்டுகள் செயல்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெற்றிபெற பணியாற்ற வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் உங்களை எல்லாம் கேட்டுக்கொண்டு,
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். தமிழ்நாட்டிற்குப் பெருமையைச் சேர்த்து, புகழ்மிக்க தமிழ்நாட்டை உருவாக்குங்கள் என்று நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு, வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற்று, நீங்கள் சிறப்போடு வாழ வேண்டும்.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக” மணமக்கள் வாழ்க... வாழ்க... என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!






