கரூரில் விஜயின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்தனர். அப்படி அவதூறு பற்றிய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை கோயம்பேடு பகுதியில் ரோஸ்ட் பிரதர்ஸ் youtube சேனலை சேர்ந்த இருவர் youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வருகை புரிந்த நபர் ஒருவர்தான் தவெக நிர்வாகி என்றும் தங்கள் கட்சியின் தலைவரை குறித்து அவதூறாக பேசினால் தங்களை தாக்க நேரிடும் என்றும் கொலை மிரட்டல் விட்டுள்ளார்.
இந்த சம்பவம் முழுவதும் அருகில் youtube சேனல் ஒளிப்பதிவாளர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக கிரண் புரூஷ் என்பவர் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தவெக நிர்வாகி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த கோகுல் என்கின்ற நபர்தான் கொலை மிரட்டல் விட்டவர் என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட கோகுல் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளதும், அவர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.