கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கியது. அதோடு இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்ட நெரிசலுக்கு விஜய் கட்சியினர் பலரும் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய நிலையில், அதற்கும் வீடியோ ஆதாரத்துடன் இதற்கு காரணம் விஜய் ரசிகர்கள் என்று அரசு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வராமல், நேரத்தை இழுத்தடித்ததும், அவரது முகத்தை காட்டாமல் ரோட் ஷோ மேற்கொண்டதும் இந்த கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள், அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் சம்பவம் நடந்த அன்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்காமல் பனையூருக்கு பறந்த விஜய், 3 நாட்கள் கழித்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவிலும் இந்த நிகழுவத்தில் அரசியல் செய்யும் வகையில் பேசியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரிதாக பேசாமல், கடந்து செல்ல முயன்ற விஜய், இறுதியில் தமிழ்நாடு அரசு மீது வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியுள்ளார்.
விஜய் பேச்சுக்கு அரசியல் விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுளளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் எம்.பி. பேசியதாவது :-
“கரூரில் ஏற்பட்ட விபத்தில், நடிகர் விஜய்யை பார்க்க போனதால்தான் 41 பேர் உயிரிழந்தார்கள். எனவே விஜய்க்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று கூற இயலாது. 3 நாட்கள் வீட்டில் சும்மா இருந்து விட்டு, ஆர்.எஸ்.எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார் விஜய். ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பிவிடுவார்கள் என்றே விஜய் தனது வீடியோவில் அவ்வாறு பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றியிருக்கும் அனைவரும் பாஜக பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜக துணையோடு விஜய் செயல்பட்டு வருகிறார். பாஜக-ஆர்.எஸ்.எஸ் அறிவுரையின் பேரிலே அரசியலுக்கு வந்திருக்கிறார்.
திமுக கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பாஜகவின் திட்டம். பாஜக- அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது. விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை, முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம்.
ரஜினியை அரசியலுக்கு கொண்டுவந்து இது போன்ற பதற்றமான சூழலை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்க நினைப்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட ரஜினி அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார். ரஜினிக்கு விஜயை போல் அரசியல், பதவி வெறி இல்லை. அவர் ஒரு ஜெண்டில்மேன்.
விஜய் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜயால் தமிழகத்தில் ஒரு போதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழி போட முயற்சிக்கிறார்." என்று விமர்சித்துள்ளார்.