தமிழ்நாடு

”திராவிட மாடல் அரசு மீது காழ்ப்புணர்வுடன் குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.என்.ரவி” : வைகோ கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

”திராவிட மாடல் அரசு மீது காழ்ப்புணர்வுடன் குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.என்.ரவி” : வைகோ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பழங்குடியினர் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக திட்டங்களை தீட்டி செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசின் மீது காழ்ப்புணர்வுடன் குற்றம் சாட்டுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி திராவிட மாடல் அரசின் மீது வழக்கம்போல குற்றம் சாட்டியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் படித்து முன்னேறி நல்ல நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்ற சனாதன வர்ணாசிரம கோட்பாட்டை தூக்கி பிடித்து, குலக்கல்வியை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய பா.ஜக அரசின் ஊது குழலாக மாறி அதை ஆதரித்து பேசி வருபவர் ஆளுநர் இரவி என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க முயலும் வஞ்சகர்களுக்கு துணை போகும் வேலையை செய்ய துணிந்த ஆளுநர் ஆர் .என் .ரவி, தொடர்ந்து தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முனைந்து செயல்படுகிறார்.

அதனால்தான் தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய “தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்” உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக,ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” 2023 - 2024- ஆம் ஆண்டு மே திங்களில் முதல்வரால் தொடங்கப்பட்டது.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் இதுவரை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கென்று தனியே முதன் முதல் தொடங்கப்பட்டுள்ள திட்டம் என்பது இத்திட்டத்தின் தனிப்பெருமையாகும். இந்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான உன்னதமான திட்டமாகும்.

திராவிட மாடல் அரசு இத்திட்டத்திற்கான தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை மானியமாகவும், 65 சதவீதத் தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதத் தொகையை வட்டி மானியமாகவும் அளிக்கிறது.

ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்ப்புறப் பகுதிகளிலும் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கு 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 1687 உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1966 பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிதிராவிடர் குடியிருப்புகளைக் குடிநீர், சாலைகள், மின்சாரம் முதலிய அடிப்படை வசதிகளைக் கொண்ட தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றுவதற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் ரூபாய் 100 கோடி வீதம் ரூபாய் 200 கோடி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3,082 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆண்டிற்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின கிராம மக்கள் மருத்துவ மற்றும் அவசியத் தேவைகளுக்காக அவர்கள் வாழும் கிராமங்களை இணைக்கும் வகையில் 8 மாவட்டங்களில் 26 அணுகு சாலைகள் ரூ.51.47 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. செவிலியர் படிப்பு பயிலும் 100 பழங்குடியின மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 70,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மறுசீரமைத்திட முதற்கட்டமாக திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளை நவீன முன்மாதிரிப் பள்ளிகளாகவும், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைத் தேவையின் அடிப்படையில் வாகனவசதி, அறிவுத் திறன் வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாடு, இளைஞர்களுக்கான மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த சிறப்பு சுய வேலை வாய்ப்பு, தொழில் முனைவோர் கடனுதவிகள், நிலம் மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கி முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

இத்திட்டத்தின்கீழ், தனிநபர் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், வங்கியில் கடன் தவணைத் தொகையினைத் தவறாமல், திரும்பச் செலுத்தும் பயனாளிகளுக்கு 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

கடந்த 40 மாதங்களில் இத்திட்டத்தின்கீழ் 52,255 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.409.68 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிட மகளிரை நில உடைமையாளர்களாக மாற்றி சமூக நிலை மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் நன்னிலம் எனும் ஆதிதிராவிடர் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தைப் புதிதாக உருவாக்கியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 217 பயனாளிகளுக்கு ரூ.10.63 கோடி மானியம் வழங்கப்பட்ட நிலையில், அதிக மகளிரை நில உடைமையாளராக மாற்றுவதற்காக 2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

சாதி வேறுபாடுகளற்ற முறையில் சமத்துவ மயானங்கள் கொண்டுள்ள கிராமங்களில் 37 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம் 37 முன்மாதிரிக் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த திராவிட மாடல் சார்பில் தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் ரூ.3.70 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 199 முன்மாதிரி கிராமங்களுக்கு ரூ.30.30 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் சிறப்புக் கவனம் காரணமாக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்கள் தொடர்பான கலை, பண்பாடு, இலக்கிய படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.50ஆயிரம் என்பதை ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார்.

ஆதிதிராவிடர்களை மேலும், பெருமைப்படுத்தும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த தமிழ்ப் படைப்புளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

வீடற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையினை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு 2021க்குப் பின் 19.30 கோடி மதிப்பீட்டில் 2,861 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளத்துக்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் ரூ.117.27 கோடி மதிப்பீட்டில் 120 கிராம அறிவு சார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் பொறுப்பேற்றது முதல் தனிக் கவனம் செலுத்தி ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலம் சார்ந்து புதியபுதிய திட்டங்களை நிறைவேற்றி வருவதால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாழம் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கல்வி, தொழில், பொருளாதாரங்களில் விரைந்து முன்னேறி வருகின்றனர்.

இப்படி அடுக்கடுக்காக பழங்குடியினர் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக திட்டங்களை தீட்டி செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசின் மீது காழ்ப்புணர்வுடன் குற்றம் சாட்டுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories