பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது நீக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை ஏன் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பதில் தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணையம் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட தேவையில்லை என்றும், அப்படி வழங்க தேர்தல் ஆணைய சட்ட விதிமுறை எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
மேலும், வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.