
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும், கண்டனங்களும் பின்வருமாறு,
“பழங்குடி குழந்தைகளின் கல்வியில் ஒன்றிய அரசுக்கு அலட்சியம் ஏன்?” அரக்கோணம் திமுக எம்.பி. ஜகத்ரட்சகன் கேள்வி!
NEST அறிக்கையின்படி 716 ஏகலைவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் (EMRS) 476 மட்டுமே செயல்படுது குறித்து ஒன்றிய அரசிடம் அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கேள்வி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

செயல்படாத பள்ளிகளை செயல்பட வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல்படும் பள்ளிகளில் கல்வித்தரம், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் விளைவுகளை மதிப்பாய்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் கேட்டுள்ளார்.
உள்கட்டமைப்பு போதாமைகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? பழங்குடி மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?
மாநில/யூனியன் பிரதேச வாரியாக இப்பள்ளிகளிலிருந்து இடைநின்ற குழந்தைகளின் விவரங்கள் உள்ளனவா? அதை சரி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? எனும் பல்வேறு கேள்விகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் வெறும் 20% நிதி ஒதுக்கி ஏமாற்றும் ஒன்றிய அரசு!” என வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு#
நகர்ப்புறங்களில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் பங்கை அதிகரிக்க வேண்டும் என வேலுர் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் பேசினார்.
ரூ. 50,000 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தில் தமிழ்நாடு அரசு ரூ. 40,000 கோடி ரூபாய் செலவழித்துள்ள நிலையில் ஒன்றிய அரசு வெறும் 10,000 கோடி மட்டும் கொடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார்.
மேலும் பிரதமரின் பெயர் சூட்டப்பட்டுள்ள ஒரு திட்டத்திற்கு ஒன்றிய அரசு வெறும் 20% நிதி மட்டுமே கொடுப்படுது முறையாகாது. ஆயினும் இத்திட்டத்தின்கீழ் இதுவரை அனுமதிக்கப்பட்ட மற்றும் கட்டி முடிக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் அவர் கேட்டுள்ளார்.








