
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 7) “தமிழ்நாட்டில் PVTG பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்ன? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?” என தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட அளவுகோல்களில் மிக மிக பின் தங்கியுள்ள PVTG என அழைக்கப்படும் "குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் தற்போதைய நிலை பற்றி திமுக துணை பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி மக்களவையில் கேள்விகளை எழுப்பினார்.

"PVTG பழங்குடியின குழுக்களின் நலனை உறுதி செய்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் விவரம் என்ன?
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டங்களின் கீழ் மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி மற்றும் இதனால் பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன?
ஆறு PVTGகளான தோடர்கள், கோத்தர்கள், குரும்பர்கள், இருளர்கள், பணியர்கள் மற்றும் காட்டுநாயக்கர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக, இந்த நிதி ஆண்டில் மானிய உதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதிகளின் விவரம் என்ன?
தமிழ்நாட்டில் PVTGs பழங்குடியினர் குறித்த பல நோக்கு ஆய்வுகள் செய்ய வேண்டும் என இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) அழைப்பு விடுத்துள்ளதற்கு அரசின் பதில் என்ன?
தமிழ்நாட்டில் இந்த PVTG- கள் பற்றி அரசாங்கத்தால் நடத்தப்பட்ட அடிப்படை ஆய்வுகளின் நிலை மற்றும் அதன் விளைவில் உருவாக்கப்பட்ட செயல் திட்டங்கள் என்ன?" என்று கனிமொழி எம்பி கேள்விகளை எழுப்பினார்.








