சேலம், ஏற்காட்டைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர், அங்குள்ள எஸ்டேட் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அப்போது இவருக்கும் அவரது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நிலத்தின் உரிமையாளரின் மகனான பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டாட்டப் பிரிவு மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்திக்கும் இடையே தகராறுஏற்பட்டுள்ளது .
இதில் சிபி சக்கரவர்த்திமற்றும் மூன்று பேர் சேர்ந்து, கடந்த 19 ஆம் தேதி வெள்ளையனை கடுமையாகத் தாக்கியதாகக் கூறி, வெள்ளையன், ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில், சிபி சக்கரவர்த்தி, தன்னை ஆபாசமாகவும், சாதிப்பெயரைக் கூறியும் திட்டி, தாக்கியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், சிபி சக்கரவர்த்திக்கு எதிரான தனது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, வெள்ளையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதனால், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.