நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இன்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கி பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கௌரவ் கோகோய் MP, "பஹல்காம் தாக்குதல் நடந்து 100 நாட்கள் கடந்துவிட்டது. ஆனால் இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளை நீதியின் முன்பாக இன்னும் நிறுத்தவில்லை.
ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த அவையில் பலதகவல்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் பயங்கரவாதிகள் பஹல்காமுக்கு எப்படி வந்தார்கள்?. பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் மற்றும் தகவல் கொடுத்தது யார்? அவர்கள் தப்பிக்க உதவியது யார்? என்பதை அவர் கூறவில்லை.
பயங்கரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் உரி, பாலகோட் மற்றும் பஹல்காம் என தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முழுமையடையவில்லை என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் மீண்டும் தாக்கும் என்றும் கூறுகிறார்கள். பிறகு எப்படி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றது என்று சொல்ல முடியும்?. மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் உங்கள் அரசாங்கத்தின் கீழ் நடந்துள்ளன. இந்த அரசாங்கம் மிகவும் கோழைத்தனமானது, மிகவும் பலவீனமானது” என தெரிவித்துள்ளார்.