மாநிலங்களிடையே பாயும் தென்பெண்ணை போன்ற ஆறுகள் மேல்பகுதியில் உள்ள மாநிலங்களில் இயங்கும் ஆலைகள் வெளியேற்றிடும் கழிவுநீரால் மிகக் கடுமையான அளவில் மாசுபடும் பிரச்சினை குறித்து அரசு அறிந்துவைத்துள்ளதா? அப்படியானால் இதற்கு காரணமான தொழிலக நிறுவனங்கள் மேல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இன்ன பிற சுற்றுச் சூழல் தீர்ப்பாயங்களும் சென்ற இரண்டு ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் எடுத்த தடுப்பு நடவடிக்கைகள், அளிக்க ப் பட்ட தண்டனைகளின் விவரங்கள் என்ன? என்று நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள ஒன்றிய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாறுதல் துறைக்கான இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், ” நகர்ப்பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரால் தான் ஆறுகள் மாசடைகின்றன. எனவே, ஆறுகள், நதிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மாசு நிலை குறித்து மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து கண்காணித்து வருகின்றன.
இதற்கான தேசியச் செயல் திட்டத்தின் கீழ், நீர்நிலைகளின் நீரின் தரத்தை தீர்மானிக்க பயோகெமிகல் ஆக்ஸிஜன் டிமாண்ட் ( BOD) அளவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆறுகளில் வெட்டவெளியில் குளிப்பதற்கு உகந்த நீரின் தரம் என்பது ஒரு லிட்டரில் 3 கிராம் அளவுக்கு மிகாமல் பயோகெமிகல் ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். ஆனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் நடத்திய கண்காணிப்பு ஆய்வுகளில் கண்டறிந்த உண்மைகளின்படி தென்பெண்ணை ஆற்றில், பெங்களூர் சொக்கரசன்பள்ளிஅணைப் பகுதியில் , பயோகெமிகல் ஆக்ஸிஜன் அலகின் அளவு 72 என்ற நிலையில் மிக அதிகமாக உள்ளது.
எனவே, பெங்களூரில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தென்பிராந்திய மய்யம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை ப் பகுதியில் உள்ள சொக்கரசன் பள்ளி தென்பெண்ணை அணைப்பகுதியை தேசிய நீர் தரம் கண்காணிப்பு திட்டத்தின் வாயிலாக கண்காணித்து வருகிறது.
2024 ம் ஆண்டுக்கான ஆய்வுத் தரவுகளின் படிதென்பெண்ணை நதியில் உள்ள சொக்கரசன்பள்ளி அணை மாநில எல்லைப்பகுதியில் நதி நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரக்கட்டுப் பாட்டின் குறைந்த பட்ச அளவான 0.3 மில்லி கிராம் ( லிட்டருக்கு) விட குறைவாக உள்ளது. இதைப் போலவே ஏனைய மாசுகளான அமிலத்தன்மை, கோலிஃபார்ம்( மனிதக் கழிவுகள்) போன்றவையும் மிகக் கடுமையாக உள்ளன.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு
எனவே, தென்பெண்ணை நதி மாசுப் பிரச்சனை தொடர்பாக புதுடில்லி யில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பெங்களூரு மாநகர் மற்றும் அருகாமையில் இயங்கும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரால் தென்பெண்ணை ஆறு மாசுபடாமல் இருப்பதை கண்காணித்து உறுதி செய்யுமாறு கர்நாடக மாநில மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. "
மேற்கண்ட தகவல்களை மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் தனது பதிலில் திமுக பொருளாளரும் மக்களவை திமுக குழு த் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்களுக்கு மக்களவையில் தெரிவித்தார்.