இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்றைய நாள் (ஜூலை 24) தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
தேசிய நெடுஞ்சாலை – 87 (NH)ஐ மேம்படுத்துவது குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா கேள்வி!
பரமக்குடி - இராமநாதபுரம் பகுதியை இணைக்கவும், தற்போதுள்ள நெரிசலைக் குறைக்கவும் தேசிய நெடுஞ்சாலை (NH)-87ஐ நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. இராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் நடப்பு நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட தொகை - நபர் - நாட்களின் அடிப்படையில் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வாய்ப்புள்ளதா? மற்றும் இத்திட்டம் எப்போதிருந்து பயன்பாட்டுக்கு வரும்? என்றும் அவர் கேட்டுள்ளார்.
“அனைவருக்கும் தடையின்றி சமையல் எரிவாயு! உடனடியாக கிடைக்க நடவடிக்கை என்ன?” என ஈரோடு திமுக எம்.பி. கே.இ. பிரகாஷ் கேள்வி!
பின்தங்கிய பகுதிகளில் வரையறுக்கப்பட்ட விநியோக உள்கட்டமைப்பு உட்பட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஒன்றிய அரசாங்கத்திடம் ஈரோடு திமுக மக்களவை உறுப்பினர் கே. ஈ. பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமான திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) நிரப்புதலுக்கான தடைகளை நீக்கவும், மற்றும் கண்காணிப்பு அல்லது தணிக்கை அமைப்புகளில் உள்ள இடைவெளிகளை அகற்றவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
நாடு முழுவதும் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த வீடுகளில் சுத்தமான சமையல் எரிபொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக விநியோக வலையமைப்புகளை வலுப்படுத்துதல், மலிவு விலையில் மறு நிரப்பல் செய்வதை மேம்படுத்துதல், டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் தணிக்கை வழிமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
“ஊரக மின்மயமாக்கல் கழகம் வழங்கிய கடனுதவி விவரங்கள் என்ன?” என வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி!
ஊரக மின்மயமாக்கல் கழகம் (REC), மின் உற்பத்தி திட்டங்கள், மின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக தனியார் லிமிடெட் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கி வருகிறதா என கேட்டு வேலூர் மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
கடந்த நான்கு ஆண்டுகளில் நிறுவனங்கள் வாரியாக, RECஆல் கடன்கள் வழங்கப்பட்ட தனியார் லிமிடெட் நிறுவனங்களின் விவரங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் REC தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய மறுநிதியளிப்பு கடன்களின் விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் தனியார் லிமிடெட் நிறுவனங்களுக்கு REC கடன்களை வழங்கியுள்ளதா?
“தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை என்ன?” என காஞ்சிபுரம் திமுக எம்.பி. ஜி. செல்வம் மற்றும் திருவண்ணாமலை திமுக எம்.பி. சி என் அண்ணாதுரை கேள்வி!
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அல்லது தொடங்கப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் ஜி. செல்வம் மற்றும் சி என் அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதன் விவரம் பின்வருமாறு:
தேசிய நெடுஞ்சாலை (NHs) திட்டங்களின் விவரங்கள், அவற்றின் திட்ட காலக்கெடு, அனுமதிக்கப்பட்ட நீளம் மற்றும் எதிர்பார்க்கப்படும் நிறைவு தேதிகள் என்ன?
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கப்பட்ட சாலைகளின் எண்ணிக்கை, ஆண்டு வாரியாக வெளியிடுக.
தமிழ்நாட்டில் நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் தற்போதைய நிலை, மாவட்டம் மற்றும் இடம் வாரியாக மற்றும் தற்போது தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் என்ன?
நடப்பு நிதியாண்டிலும் கடந்த மூன்று ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக அரசு செய்த மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உண்மையான செலவு, ஆண்டு வாரியாக வெளியிடுக.
தமிழ்நாட்டின் தொலைதூர, பின்தங்கிய அல்லது வளர்ச்சியடையாத பகுதிகளில், குறிப்பாக வரலாற்று ரீதியாக குறைந்த உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ள மாவட்டங்களில் நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
“கிராமங்களில் இணைய இணைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என் சோமு கேள்வி!
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் டிஜிட்டல் இந்தியா முயற்சியின் விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். கிராமங்களில் இணைய இணைப்புகளின் அணுகல் நிலை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இணைய பயனாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு குறித்த விவரங்கள் மற்றும் கிராமங்களில் இணைய இணைப்பை மேம்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/ எடுக்க முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று அவர் ஒன்றிய அரசின் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளார்.