அரசியல்

தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !

தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (14-07-25)

ரயில்வே துறை உடனடியாகச் செய்ய வேண்டும்!

அநியாயமாக மூன்று உயிர்கள் பலியாக ஒன்றிய ரயில்வே துறையின் அலட்சியமே காரணம் என்பது அம்பலம் ஆகி இருக்கிறது. ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்று காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 8-ஆம் தேதி கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் மிகப்பெரிய விபத்து நடந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. ரயில் வருகிறது என்றால் கேட் மூட வைக்கப்பட்டு இருக்க வேண்டும். கேட் திறந்து இருந்ததால் பள்ளி வாகனம் செல்ல முயற்சித்துள்ளது. கேட்டை மூடாதது யார் தவறு? ரயில்வே ஊழியரின் மாபெரும் தவறு ஆகும். இந்த விபத்தில் மூன்று உயிர்கள் பரிதாபமாக பலியானது.

‘’நான் கேட்டை மூடித்தான் வைத்திருந்தேன். அவசரமாகச் செல்ல வேண்டும் என்று சொல்லி வேன் டிரைவர், ரயில்வே கேட் கதவைத் திறக்கச் சொன்னார். அதனால் திறந்தேன்’’ என்று பொய் சொன்னார் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா. அவரை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே ஊழியர்கள் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !

செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை மூடிவிட்டதாக, ஆலப்பாக்கம் நிலைய அதிகாரியிடம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பொய் கூறியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ரயில்வே கேட்டை மூடாமல், அதை மூடி விட்டதாக ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற பிறகு, ரயில் நிலைய அதிகாரியை தொடர்புகொண்ட கேட் கீப்பர், ‘கேட்டை மூட வில்லை’ என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் என்பது இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது. ரயில் வரும் போது கேட்டை மூடாமல், இந்த கேட் கீப்பர் தூங்கிக் கொண்டிருந்தார் என்று அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

ரயில்வே கிராசிங் என்றால் ரயில் இன்ஜின் டிரைவர், ஹாரன் அடிப்பார். அதுவும் செய்யப்பட வில்லை.

‘’செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகில் நான் வேனை ஓட்டி வந்தபோது, ரயில்வே கேட் திறந்து இருந்தது. இதனால் ரயில் வரவில்லை என்பதை உறுதி செய்துதான் தண்டவாளத்தை கடக்க முயன்றேன். ரயில்வே கேட் மூடி இருந்தால் கடக்க முயன்றிருக்க மாட்டேன்”என்று சொல்லி இருக்கிறார் வேன் டிரைவர் சங்கர். இதன் மூலமும் கேட் கீப்பரின் மெத்தனத்தை உறுதி செய்ய முடிகிறது.

சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், ‘’ இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் கவனக்குறைவு மற்றும் லட்சியப் போக்கே காரணம்” என்பதை ஒப்புக் கொண்டார். ‘’ அதிகப் போக்குவரத்து உள்ள இடங்களில் கேட் மூடப்படுவதற்கும், சிக்னலைத் தெரிந்து கொள்வதற்கும் ‘இன்டர் லாக்’ என்ற முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது இங்கு இல்லை’’ என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

தெற்கு ரயில்வேயில் 1,643 லெவல் கிராசிங் உள்ளது. இதில் 1,367 கேட்டுகள் ‘இன்டர் லாக்’ தொழில் நுட்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.ரயில்வே கேட்டுகளையும் அதற்கு முன் உள்ள சிக்னல்களையும் இவை இணைத்து விடும். ரயில்வே கேட்டை மூடாவிட்டால், அந்த கேட்டை கடந்து செல்ல அந்த ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைக்காது. இதனால் சில நூறு மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே ஓட்டுநர் நிறுத்திவிடுவார். விபத்து தடுக்கப்பட்டு விடும்.

தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !

தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 276 கேட்டுகள் இந்த தொழில் நுட்பத்துடன் இன்னும் இணைக்கப்படவில்லை. அதில் ஒன்று இந்த செம்மங்குப்பம் ரயில்வே கேட் ஆகும். ஒரு திட்டத்தை இப்படி அரைகுறையாகவா செய்வார்கள்?

2025--–26 நிதியாண்டுக்கான ரயில்வே திட்டத்தில் லெவல் கிராசிங் பாதுகாப்புப் பணிகளுக்காக 706 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யது. மேம்பாலம், கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகளுக்காக 7000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் மேம்பாலம், கீழ்பாலம் அமைக்கப்பட்டு விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. சொல்லியதை ஒன்றிய அரசு செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

ரயில்வே லெவல் கிராசிங் விபத்துகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வுகளை இந்திய ரயில்வே துரிதமாக மேற்கொள்ள வேண்டும். சுரங்கப் பாதைகள் அமைத்தல், பாலங்கள் அமைத்தல் ஆகியவை இதற்கு நிரந்தரத் தீர்வு ஆகும். நிலங்களைக் கையகப்படுத்துதல், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை முறையாகச் செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்து ரயில்வே கேட்டுகளும் ‘இன்டர் லாக்’ தொழில் நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டும். மாற்றப்படாத பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். இண்டர் லாக் தொழில் நுட்பத்துடன் இணைக்கப்படாத பகுதிகளில் ரயில் வருவதை ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ரயில்வே கேட் அருகில் வேகத் தடையை அமைக்க வேண்டும். எச்சரிக்கை பலகைகளை அதிகம் வைக்க வேண்டும். அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அனைத்து பகுதியிலும் தடையின்றி மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிலாவில் மனிதனை அனுப்பி வாழ வைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் பூமியில் லெவல் கிராசிங்கில் உயிர்கள் பலியாவது பரிதாபத்திலும் பரிதாபம் ஆகும்.

banner

Related Stories

Related Stories