வள்ளுவரை காவி மூலம் திருடப்பார்க்கிறார்கள். திருவள்ளுவர் மேல் வர்ணத்தை பூச நினைக்கும் அடாவடித்தனத்தை தமிழ் சமூகம் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும். உலக மக்களுக்கு ஒளி வழங்கும் சூரியனாய் இருக்கும் திருவள்ளுவரை அபகரிக்க நினைத்தால், அவரின் கருத்துக்களின் வெப்பமே அவர்களை பொசுக்கிவிடும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, காமராசர் அரங்கத்தில் நடைப்பெற்ற விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய “வள்ளுவர் மறை – வைரமுத்து உரை” நூலினை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதன் விவரம் :
உரையைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு செய்தி. நான் கவிப்பேரரசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன். இந்த நூலின் ஆசிரியர் என்பதற்காக மட்டுமல்ல. இன்று அவருக்கு பிறந்தநாள். இந்த நிலையோடு உங்கள் அனைவரின் சார்பில் மீண்டும் அவருக்கு உங்கள் கரவொலியோடு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிறந்தநாளுக்கு நாம் தான் அவருக்கு பரிசு கொடுக்கவேண்டும். ஆனால், இன்றைக்கு அவருடைய பிறந்தநாளில் நமக்கெல்லாம் இந்த புத்தகத்தை பரிசாக தந்திருக்கிறார். அதற்காக உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என்னுடைய நன்றி, நன்றி, நன்றி...
திருக்குறள் இரண்டு அடிதான்; ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அதற்குப் புதுப்புது பொருள்கள் சொல்லி, உலக மக்கள் எல்லோருக்கும் புதுவழியை - நல்வழியைச் சொல்லக் கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது! அதனால்தான், மணக்குடவர் - பரிமேலழகர் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வரிசையில்தான், இன்றைக்கு நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் இணைந்திருக்கிறார்!
கவிப்பேரரசு அவர்கள் ஏற்றியுள்ள இந்த திருக்குறள் தீபத்தில், வள்ளுவர் எழுதியதுதான் நீதி என்று சொல்ல, புத்தகத்தின் தலைப்பையே, "வள்ளுவர் மறை - வைரமுத்து உரை" என்று கவிதை மிடுக்குடன் வைத்திருக்கிறார்! இந்த உரையின் ஆழம் - குறள்களை அணுகிய கவிப்பேரரசின் திறன் போன்றவற்றை, இங்கு உரையாற்றிய அனைவரும் சொல்லியிருக்கிறார்கள்.!
நான் இதைப்பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், திருவள்ளுவருக்கும் - திருக்குறளுக்கும் - அவருக்கு ஒவ்வாத சாயத்தைப் பூசி மறைக்க முயற்சிகள் நடக்கும் காலக்கட்டத்தில், தன்னுடைய உரைவாளை எடுத்து, உடைவாளாக வீசியிருக்கிறார் கவிப்பேரரசு அவர்கள்!
கவிப்பேரரசு அவர்கள் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், "திராவிடப் பண்பாட்டை ஆரியப் பண்பாடு நகர்த்தவோ, தகர்க்கவோ முனைந்த காலக்கட்டத்தின் விளிம்பில் தமிழ் மரபு காக்கும் தனிப்பெரும் அரணாக வள்ளுவம் எழுந்தது" என்று சொல்லி, இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை தன்னுடைய சொற்களில் எடுத்துச் சொல்லிவிட்டார்!
திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும், இது தமிழர்களான நமக்கு மட்டும் சொந்தமான நூல் கிடையாது. அதனால்தான், திருக்குறளின் பொருளை உணர்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், "80 ஆண்டுகளுக்கு முன்பே, திருக்குறள் மாநாடுகளை நடத்தினார்". திருக்குறளை அச்சிட்டுப் பரப்பினார். மதங்களை வெறுத்த அவர், "உங்கள் மதம், குறள் மதம் என்று சொல்லுங்கள். “உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள்" என்று சொன்னார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், "திருக்குறளை படிப்பவர்களாக மட்டுமல்ல, பின்பற்றுபவர்களாக நாம் வாழ வேண்டும்" என்று சொன்னார்!
தலைவர் கலைஞர் அவர்கள், "குறள் மனிதர்களாக நாம் வாழ வேண்டும்" என்று சொன்னதோடு, இன்றைக்கு புதுப்பொலிவுடன் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தை கட்டினார். இந்தியத் துணைக்கண்டம் தொடங்கும் குமரி முனையில், 25 ஆண்டுகள் கடந்து சுனாமியையும் எதிர்த்து நிற்கும் அய்யன் வள்ளுவரின் வானுயர சிலையை நிறுவினார். குறளோவியம் தீட்டினார்! குறளுக்கு உரை எழுதினார்! தமிழின் சின்னம் - தமிழினத்தின் சின்னம் திருவள்ளுவர்தான் என்பதை அடையாளம் காட்டி, செம்மொழி மாநாட்டின் இலச்சினையில் வள்ளுவரையும் - குறளையும் இடம்பெற வைத்தார்! தமிழ்ச்சமூகம் என்பது சமத்துவச் சமூகம் என்பதை நிறுவ, வள்ளுவரின் வரிகளான, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சொல்லித்தான், அந்த மாநாட்டின் மையநோக்குப் பாடலையே உருவாக்கி தந்தார்!
திருக்குறளைத் தூக்கிப் பிடித்து, இதுதான் நம்முடைய இனத்திற்கான கலங்கரை விளக்கம் என்று போராடி - வாதாடி - பரப்பி வருவதுதான் திராவிட இயக்கம்!
அந்த வழித்தடத்தில் இன்றைக்கு நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பாதை மாறாமல், இந்த வள்ளுவ தீபத்தை அவர் ஏந்தியிருக்கிறார்!
நம்முடைய கவிப்பேரரசு அவர்கள், "12 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு, 72 வயதில் உரை எழுதியிருக்கிறேன்" என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது! உங்களின் 72 ஆண்டுகால அனுபவப் பயணம், உங்களின் அறிவுச் சேர்க்கை இதையெல்லாம் துணையாகக் கொண்டு, நீங்கள் திருக்குறளை அணுகி, உரை எழுதியிருக்கிறீர்கள். இதற்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!
ஒவ்வொரு குறளுக்கும் நீங்கள் எழுதியிருக்கும் பொருளை வாசிக்கும்போது, ஒரு கவிதையைப் படித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை! நான் ரசித்த சில இடங்களை மட்டும் இங்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்...
"இல்லறத்தான் என்பவன், நல்லறத்தால் துணைநிற்பவன்". "இல்வாழ்க்கையில் ஒருவன் செய்யத்தக்கது எல்லாம் அறச் செயல்களே! தள்ளத் தக்கவை எல்லாம் பழிச்செயல்களே!"
"முயற்சி என்னும் பெரும் பொருளே செல்வத்தை பெருக்கி விடும். முயலாமை எனும் சோம்பலோ, ஒருவனை வறுமைக்குள் செலுத்திவிடும்".
"உள்ள வளம் உள்ளவர்கள் உயிர்வலிமை பெறுவார்கள். நல்ல இனத்தைச் சேர்ந்தவர்களோ எல்லாப் புகழையும் அடைவார்கள்".
"பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று உணரும் மயக்கம் இருப்பது பிறப்புக்குச் சிறப்பன்று".
"உன் கண்கள் உன்னைக் கைவிட்டு விட்டன. இனியேனும் உன் சொற்களால் உண்மை சொல்". இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
கவிஞர் தன் கைவண்ணத்தை உரையில் - உரைநடையில் காட்டியிருக்கிறார்! அதனால்தான் எழுதப்பட்ட உரையும், ஒவ்வொரு கவிதையாக இருக்கிறது.
திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னும் நிறைய இருக்கிறது என்று ஏராளமான அறிஞர்கள் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி உரை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்!
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வரிகளுக்கான தேவை இன்றைக்கும் இருக்கிறது! காலங்கள் கடந்து வாழும் வள்ளுவர் மறையை - இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாக சொல்லும் வகையிலான மாபெரும் அமைப்பை தலைநகர் தில்லியில் நாம் உருவாக்கியாக வேண்டும்! வள்ளுவர் மறையின் பொருளை இந்திய சமூகத்தில் விதைக்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்!
வள்ளுவர் புலவர் மட்டுமல்ல; புரட்சியாளர்! வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல; கலகக்காரர்! அவர் வழங்கியிருக்கும் கொடையான வள்ளுவத்தை பரப்ப வேண்டியது நம்முடைய கடமை மட்டுமல்ல; காலத்தின் தேவை! மனிதத்திற்கு வள்ளுவத்தை பரப்புவதோடு, எதிரான கருத்தியல் வண்ணங்களை அவர் மேல் பூச முயற்சிக்கும் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் எதிர்க்க வேண்டும்! சொந்தம் கொண்டாடுவதற்கு ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால், நம்முடைய வள்ளுவரைக் காவியடித்து திருடப் பார்க்கிறார்கள். ‘திருட’ என்பதைவிட ஏமாற்ற பார்க்கிறார்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்!
திருவள்ளுவர் என்பவர், உலகம் பழிப்பதை ஒழித்துவிட்டால் மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று சொன்ன பகுத்தறிவுக் கவி! தெய்வத்தால் முடியாததையும் முயற்சி செயல்படுத்திக் காட்டும் என்ற சுயமரியாதைக் கவி! அனைவரும் சமம் என்ற சமூகநீதிக் கவி!
உலக மக்களுக்கு ஒளி வழங்கும் சூரியனாக இருக்கும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவரை அபகரிக்க நினைத்தால், அவரின் கருத்துகளின் வெப்பமே அவர்களை பொசுக்கிவிடும்! திருக்குறளைப் படித்தால் மட்டும் போதாது; பரப்பினால் மட்டும் போதாது; அதன்படி நடக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்ட, இளைய தலைமுறையிடம் திருக்குறளின் பெருமைகளைச் சேர்ப்பதுடன் அவர்களை திருக்குறளை உள்வாங்கும் மனிதர்களாக வளர்த்தெடுக்க நம்முடைய திராவிட மாடல் அரசு, தீராக்காதல் திருக்குறள் நிகழ்ச்சிகள் – குறளோவியப் போட்டிகள் – குறள் இனிது நாட்டிய நாடகங்கள் – மாணவர் திருக்குறள் மாநாடு – டிசம்பர் மாதத்தில் ‘குறள் வாரம்’ – திருக்குறள் முற்றோதல் - உள்ளிட்ட ஏராளமான முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது!
ஏன் என்றால், குறள்நீதி இருக்கும் இடத்தில் மனுநீதி தழைக்க முடியாது! அதற்கு, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரையும் அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!
நம்முடைய இளைஞர்களுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றை, அறிவார்ந்த கருத்துகள் - இலக்கியங்கள் வழியாக மேம்படுத்தி, மானுட உணர்வுமிக்க மனிதர்களாக உருவாக்க வேண்டியது நம்முடைய ஒவ்வொருவரின் கடமை!
மொழி வாழ்ந்தால் இனம் வாழும்! மொழி வீழ்ந்தால் இனம் வீழும்! இதுதான் உலக வரலாறு நமக்கு தந்திருக்கும் பாடம்! இன்றைக்கு நாமும் அதிக வீரியத்துடன் அரசியல் - பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்கொண்டிருக்கிறோம்! எத்தகைய படையெடுப்புகளையும் வெல்லும் திறன் தமிழுக்கு இருக்கிறது! தமிழர்களான நம்முடைய தடந்தோள்கள் வலுப்பெற - திறன் பெற "வள்ளுவர் மறை - வைரமுத்து உரை" போன்ற நூல்கள் வாளும் கேடயமுமாக அமையும்!
இந்த நம்பிக்கையோடு, நமது கவிப்பேரரசு அவர்களின் இலக்கியப் பயணம் இன்னும் பல சாதனைகளைச் செய்து தமிழுக்குப் பெருமை சேர்க்கட்டும் என நான் அனைவரின் சார்பாக வாழ்த்துகிறேன்!
தமிழ் இருக்கும் வரை - குறள் இருக்கும் வரை - இந்த நூலும் இருக்கும்! வாழ்க தமிழ்! வளர்க வள்ளுவம்! பரவட்டும் குறள் நெறி!