சென்னை இராயபுரத்தில் தி.மு.க சார்பில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் மார்பளவு சிலையையும் இன்று (ஜூலை 4) திறந்து வைத்தார் கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக 7-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் அவர் தம்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைகளை திறந்து வைக்கின்ற வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், விளையாட்டுத்துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என இத்தனை பொறுப்புகள் இருந்தாலும் எப்போதும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களது அன்புக்கு கட்டுப்பட்டவன் நான்.
இவ்வேளையில், திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமை. 2026-இல் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணியை வென்றிடவும், நம் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்கிடவும் அண்ணா - கலைஞர் சிலைகள் முன்பு உறுதியேற்றோம்.
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க கழகத்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்” என தெரிவித்துள்ளார்.