தமிழ்நாடு

புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வாசிப்பு பழக்கம் வளரவும் – சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் படைப்புகளை ஊக்குவிக்கவும் நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது.

புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.1.2026) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 49-வது சென்னை புத்தகக் காட்சி 2026-யை தொடங்கி வைத்து, ஆற்றிய உரை:-

சென்னையில் தொடர்ந்து 49-வது ஆண்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த புத்தகக் கண்காட்சி. இந்த அறிவுச் சங்கமத்தை அறிவுத்திருவிழாவை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சிந்தனை ஊற்றெடுக்கும் அடித்தளமாக இருக்கும் புத்தகங்களை, மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கின்ற அந்த எண்ணத்தோடு, இந்தப் புத்தகக் கண்காட்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

1977-இல் தொடங்கிய இந்த அறிவுப்பணி, இப்போது 49-ஆவது ஆண்டில் இருந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு 13 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி, இன்றைக்கு 900 அரங்குகளுடன் இருப்பதே, இதன் வெற்றிக்கான சாட்சியாக அமைந்திருக்கிறது! இந்த வெற்றியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வது போல, புதிதாக வெற்றி பெற்றிருக்கும் ப.பா.சி. பொறுப்பாளர்கள் செயல்படுவார்கள் என்று உங்களைப் போல நானும் நம்புகிறேன். அந்த நம்பிக்கையை அளிக்கும் விதமாகதான், உங்களின் செயல்பாடுகளும் இருந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, இன்னும் அதிகளவிலான மக்கள், இந்தக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்று, நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்திருப்பதை நான் வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன்!

இதில், தனிப்பட்ட முறையில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால், தலைசிறந்த படைப்பாளிகளுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் பொற்கிழி விருதுகளை வழங்கியது. அதிலும் குறிப்பாக, தலைவர் கலைஞர் அவர்களே இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு தன்னுடைய சொந்த நிதியில் இருந்து வழங்கிய ஒரு கோடி ரூபாய் நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையில் இருந்து, ஆண்டுதோறும் 6 எழுத்தாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம்!

அப்படி வழங்கப்பட்ட இதுவரைக்கும் ஒரு கோடியே 11 இலட்சம் ரூபாயை விருதாக வழங்கியிருக்கிறோம். இந்த ஆண்டிற்கான விருதுகளை நவீன தமிழ்க் கவிதையின் மிக முக்கியமான முகமாக இருக்கும் கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கு கவிதைக்கும் - ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காத்திரமான படைப்புகளைப் படைக்கும் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு சிறுகதைக்கும் – பன்முக எழுத்துக்குச் சொந்தக்காரரான இரா.முருகன் அவர்களுக்கு நாவலுக்கும் - ஓவியங்கள், சிற்பங்கள், கட்டடக் கலைகள் அது குறித்த ஆய்வை நெடுங்காலமாக செய்துவரும் பேராசிரியர் பாரதிபுத்திரன் அவர்களுக்கு உரைநடைக்கும் – நவீன நாடக மேடைகளில் இயங்கி வரும் முக்கியமான கலைஞரான கருணா பிரசாத் அவர்களுக்கு நாடகத்திற்கும், தமிழ்நாட்டின் மிக முக்கியமான அறிஞரும், எஸ்.வி.ராஜதுரை அவர்களுடன் இணைந்து, பெரியார் சுயமரியாதைச் சமதர்மம் என்ற முக்கியமான வரலாற்று ஆவணத்தை தந்துள்ள வ.கீதா அவர்களுக்கு மொழிபெயர்ப்புக்கும் இன்றைக்கு வழங்கியிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன்! அதற்காக உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்!

நம்முடைய எண்ணம் எல்லாம், தமிழ்ச் சமூகம், அறிவில் சிறந்த சமூகமாக உலகத்தால் மதிக்கப்பட வேண்டும். அதற்கான அறிவுப்புரட்சியை ஏற்படுத்த நம்முடைய மண்ணில் தோன்றியதுதான், திராவிட இயக்கம்! இந்த அறிவுப்புரட்சிக்கு நாம் பயன்படுத்திய முக்கியமான கருவிதான், புத்தகங்கள்! அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், “என்னுடைய வாரிசுகள் என்பது, என்னுடைய புத்தகங்கள்தான்” என்று சொன்னார். பேரறிஞர் அண்ணா அவர்கள், “வீட்டுக்கு ஒரு நூலகம் அமையுங்கள்” என்று சொன்னார். அதைப்போல நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், “புத்தகங்கள் மூலம் உலகைப் படியுங்கள்” என்று கட்டளையிட்டார். “அறிவுக்கான தீ பரவட்டும்” என்று அவர்கள் சொன்ன பாதையில்தான், நம்முடைய திராவிட மாடல் அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தனிப்பட்ட முறையில், 2017-ஆம் ஆண்டு முதலே, என்னை சந்திக்க வருபவர்கள், அப்படி சந்திக்க வருகின்றபோது, எனக்கு பொன்னாடைகளுக்கும் பூங்கொத்துகளுக்கும் வழங்கக்கூடியவர்கள் அதற்குப் பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும் என்று நான் சொன்னேன். அப்படி பெறப்பட்ட புத்தகங்களை, அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன் ஆய்வு நூலகம் மூலமாக, அந்த புத்தகங்கள் கேட்டு எனக்கு கடிதம் எழுதிய மாணவர்கள், இளைஞர்கள், படிப்பு வட்டங்கள், நூலகங்கள் என்று நான் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதுவரை எவ்வளவு புத்தகங்கள் அந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது தெரியுமா! சுமார் நான்கு இலட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டு, அவைகள் எல்லாம் நான் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

தமிழ்நாடு மட்டுமல்ல, இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் வாழக்கூடிய நாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறோம். புத்தகங்களை பரிமாறுவதை ஒரு இயக்கமாகவே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அண்மையில்கூட, தி.மு.க. இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடத்தினார்கள். நான் வள்ளுவர் கோட்டத்திற்கு சென்று, அங்கு அரைநாள் முழுவதும் சுற்றிப்பார்த்து, அந்த புத்தக ஸ்டால்களை எல்லாம் நான் மகிழ்ச்சியோடு, பெருமையோடு, பூரிப்போடு பார்வையிட்டேன். நேரம் சென்றதே தெரியவில்லை. அந்த அளவிற்கு நான் பார்வையிட்டேன்.

தொடர்ந்து ஏராளமானோர், அங்கு வந்து புத்தகங்களை வாங்கி செல்லும் செய்தியை பார்த்தபோது நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி நாம் வாங்கும் ஒவ்வொரு புத்தகமும் தனிப்பட்ட முறையில் நமக்கும் – நம்முடைய சமூகத்திற்கும் – எதிர்காலத்திற்கும் பயனளிக்கும் விலைமதிக்க முடியாத சொத்தாக அமைகிறது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலமாக மட்டுமல்ல, திராவிட மாடல் அரசு மூலமாகவும், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் – புத்தகங்களை எல்லோருடைய கைகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஏராளமான திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் நாம் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறோம்! நாம் செய்துகொண்டிருக்கும் பணிகளில் சிலவற்றை மட்டும் நான் தலைப்புச் செய்திகளாக, ஹைலைட்சாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான், தமிழ்நாடு அரசால், கன்னிமாரா நூலகத்தின் ஒரு பகுதியில், நிரந்தரப் புத்தகக் கண்காட்சிக்கு இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. புத்தக கண்காட்சியை நடத்த ஆண்டுதோறும் 75 இலட்சம் ரூபாயை வழங்கிக் கொண்டிருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில், இந்த புத்தகப் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் அமைப்புக்கு 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினோம். அந்த நிதியில் இருந்து பதிப்பாளர்கள் ஒவ்வொருவரும் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் புத்தகக் கண்காட்சி நடைபெறக் காரணம், நம்முடைய திராவிட மாடல் அரசுதான் என்று பெருமையுடன் சொல்வேன்.

புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்றைக்கு பார்க்கிறோம் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னை புத்தகப் பூங்கா அமைத்திருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக பன்னாட்டு புத்தகக் கண்காட்சியையும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். வெளிநாட்டு நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் – தமிழ் நூல்களை உலக மொழிகளில் வெளியிடவும் – முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது எல்லாவற்றையும்விட, நான் நினைத்து நினைத்து பெருமைப்படக் கூடிய திட்டமாக, 218 கோடி ரூபாயில், நாம் மதுரையில் அமைத்திருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கிறது!

ஏனென்றால், 2007-இல் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்து, இங்கு சென்னையில், கோட்டூர்புரம் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவர் உருவாக்கினார். அந்தப் பயணத்தை, இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசில் இன்னும் வேகமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். 2023-இல் திறக்கப்பட்ட இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரைக்கும் வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 24 இலட்சத்து 72 ஆயிரத்து 988 பேர் வந்திருக்கிறார்கள். இதுதான், தமிழர்கள் புத்தகங்கள் மீது கொண்டிருக்கும் பற்றுக்கு சாட்சி!

இந்த அறிவுத் தேடலையும் – வாசிப்பு பழக்கத்தையும் அதிகரிக்க வேண்டும், பரவலாக்க வேண்டும் என்றுதான், திருச்சியில், காமராசர் அறிவுலகம், கோவையில், பெரியார் அறிவுலகம், திருநெல்வேலியில், காயிதே மில்லத் அறிவுலகம், சேலத்தில், பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில், அஞ்சலை அம்மாள் அறிவுலகம் என்று அமைப்பதற்கான பணிகளை நாம் செய்துகொண்டு இருக்கிறோம். இதுமட்டுமல்லாமல், பழைய நூல்களை எல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம் - பழைய நூலகங்களை எல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளின் வழியாக, 604 நூலகக் கட்டடங்கள் கட்டியிருக்கிறோம். ஆயிரத்து 469 பொது நூலகங்களுக்கு வை-ஃபை வசதியும் ஏற்படுத்தி தந்திருக்கிறோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், சென்னை இலக்கியத் திருவிழா, நெல்லையில், பொருநை, கோவையில், சிறுவாணி, திருச்சியில், காவிரி, மதுரையில், வைகை என்று இலக்கியத் திருவிழாக்களை எல்லாம் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறோம்! அதுமட்டுமா,

தமிழ்நூல்கள் நாட்டுடைமை

எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள்

குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு

திராவிடக் களஞ்சியம் உருவாக்கம்

இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது

உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள்

நூலகங்களுக்கு சிற்றிதழ்கள்

இலக்கியமாமணி விருதுகள்

உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்

திசைதோறும் திராவிடம் என்று எழுத்தாளர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி என்னால் இன்னும் நிறைய முன்னெடுப்புகளை சொல்ல முடியும்!

இதையெல்லாம், தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு இளைஞர்கள் சந்தித்துக்கொண்டால், “இப்போது நீங்கள் படித்துகொண்டு இருக்கும் புத்தகம் என்ன?” என்று புத்தகங்களை மையமாக வைத்து பேசும் அளவிற்கு இருக்க வேண்டும். புத்தகங்களை பற்றி விவாதிக்கும் அளவிற்கு வாசிப்பு பழக்கம் அதிகரிக்க வேண்டும்; அறிவுத்தீ பரவ வேண்டும்!

இன்றைக்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பம், புத்தகங்களை படிக்க நிறைய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. மின்னூல்கள், கிண்டில் கருவி என்று நிறைய ஆப்ஷன்ஸ் வந்துவிட்டது. பல்வேறு இணைய நூலகங்களில் இருந்து, நம்மால் எளிதாக புத்தகங்களை டவுன்லோட் செய்ய முடியும். இத்தனை வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு புத்தகத்தை கையில் ஏந்தி, ஒவ்வொரு பக்கமாக புரட்டி படிக்கும் அனுபவமே தனி சுகம் தான். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போதும், புது வெளிச்சம் உண்டாகும். அந்த வெளிச்சத்தில் அறியாமை எனும் இருள் விலக வேண்டும்.

இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம்… தமிழும், தமிழ்நாடும் செழிக்க வேண்டும் என்றால், நீங்கள் வெற்றியாளர்களாக உயர வேண்டும் என்றால், புத்தகங்கள் எனும் அறிவாயுதங்களை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்! வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அங்கு பூங்காக்கள், பயணங்கள் என்று பொது இடங்களில் நிறைய பேர் புத்தகங்களை படித்துகொண்டே செல்வதை பார்ப்பதுண்டு. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு அந்த நிலைமை இல்லை. இது மாற வேண்டும். உங்களின் சிந்தனைகள் வளர வளரத்தான் நம்முடைய தமிழினத்தின் வளர்ச்சி, மேல் நோக்கி போகும். போராடி போராடி இந்த நிலைமைக்கு உயர்ந்து வந்திருக்கிறோம். இங்கிருந்து நாம் முன்னால்தான் செல்ல வேண்டும். யாரும் நம்மை வீழ்த்த அனுமதிக்க கூடாது. அதனால், தினமும் ஒருமணி நேரமாவது படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை புத்தகங்களில் செலவு செய்யுங்கள். புதிய எழுத்தாளர்கள் உருவாகி வாருங்கள். எழுத்துகளை படிக்க படிக்க எண்ணங்கள் வளரும்… எண்ணங்களை எழுத்துகளாக படைக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள்! அதற்கு இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் கை கொடுக்கும்!

இந்த நிகழ்ச்சியை நேரலையிலும், செய்திகளிலும் பார்ப்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது - சென்னையிலும், சுற்றுப்புற மாவட்டங்களிலும் இருப்பவர்கள், இந்தப் புத்தக கண்காட்சிக்கு வாருங்கள்… விடுமுறை நாட்களில், குழந்தைகளுடன் வாருங்கள்… குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்…

புத்தகக் கண்காட்சிகள் என்பது, எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல; அனைவருக்கும் சொந்தம்! வாசிப்பு பழக்கம் வளரவும் – சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் படைப்புகளை ஊக்குவிக்கவும் நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை உங்களுக்கு அளித்து, விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories