தி.மு.க தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் தமிழ்நாடு முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தொடங்கப்பட்டு, மாநில அளவில் தி.மு.கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நெல்லை கிழக்கு மாவட்ட பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தது பின்வருமாறு,
“மக்கள் யாரை எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தி.மு.க மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இது வரக்கூடிய தேர்தலுக்கான முடிவுகளின் அறிகுறியாக இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையோடு ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கம் மூலம், தி.மு.கழகத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் என்பது மக்களின் வரவேற்பை பார்க்கும்போது தெரிகிறது.
தமிழ்நாட்டின் யார் வேண்டுமானாலும் தனித்து போட்டியிடலாம். அது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால், யார் எவ்வாறு போட்டியிட்டாலும் அது தி.மு.க.விற்கோ அல்லது தி.மு.க கூட்டணிக்கோ சவாலாக இருக்காது.
தி.மு.க.வுடன் கருத்தியலை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவு தருகிறவர்களோடு இணைந்து பணியாற்றுவோம். தமிழ்நாட்டின் ஓரணியில் யார் யார் இணைய வாய்ப்பிருக்கிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.”