
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.3.2026) தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 177.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 4 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, 3,958 பயனாளிகளுக்கு 110.66 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 136.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்சிறப்பு மருத்துவமனை கட்டடம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 38.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம்;
எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறை கட்டடம், படர்ந்தபுளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறை கட்டடம் என 177.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 4 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வளாகத்தை 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1,755 பயனாளிகளுக்கு 40.09 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப்பட்டா/ வரன்முறைப்பட்டா (கணினி இ- பட்டா) க்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1800 பயனாளிகளுக்கு 63.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் 20 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3.06 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளையும்;

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), கலைஞர் கைவினைத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 5 பயனாளிகளுக்கு 54.09 லட்சம் ரூபாய் மானிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என 51 மாற்றுத்திறனாளிகளுக்கு 53.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவி உபகரணங்களையும்,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு கடல்சார் கல்வி உதவித் தொகை, குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனத்திற்காக மானியத்தொகை என 53.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்,
தாட்கோ திட்டத்தின் சார்பில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் 5 தொழில் முனைவோருக்கு 51.00 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் தூத்துக்குடி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 77 பயனாளிகளுக்கு 15.40 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும், 39 பயனாளிகளுக்கு 27.49 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும் வழங்கினார்.
மேலும் கூட்டுறவுத் துறையின் சார்பில் 39 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 39.00 லட்சம் ரூபாய்க்கான வங்கிகடன் இணைப்புகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு 3.52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும்,
சமூக நலத்துறையின் சார்பில் 10 பெண்களுக்கு முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் ரூபாய்க்கான நல உதவிகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறையின் அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 106 பயனாளிகளுக்கு 2.12 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும்,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு 26,760 ரூபாய் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15 விளையாட்டு வீரர்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கான ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் வீராங்கனை முத்துமீனாவிற்கு 12.00 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலையையும்,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு தலா 8,50,000 ரூபாய் வீதம் மொத்தம் 1.36 கோடி ரூபாய்க்கான மானியத்தையும் என கூடுதல் மொத்தமாக 3,958 பயனாளிகளுக்கு 110.66 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.






