சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இன்று (24.06.2025) பிற்பகல் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், அமைச்சர் மூர்த்தி அவர்களும், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் அளித்த பேட்டி வருமாறு :
‘ஒரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வரக்கூடிய ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதலமைச்சர் அவர்கள் இது குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.
அடுத்த நாள் அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பேரணியாகச் சென்று இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடக்கி வைக்க இருக்கிறோம்.
அதை தொடர்ந்து ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குசாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை வாக்குச்சாவடி முகவர்கள், தகவல் தொழில்நுட்ப துறை முகவர்கள், மற்ற அணிகளாக இளைஞர் அணி, மகளிரணி போன்றவற்றின் நிர்வாகிகள், கிளை கழகத்துடைய நிர்வாகிகள் ஒவ்வொரு பூத்-களிலும் இருக்கக்கூடிய வீடுகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 நிமிடம் அமர்ந்து, அங்கே இருக்கும் வாக்காளர் பெருமக்களில் 30% நம்முடைய கழகத்தில் இணையகூடிய வகையில் அரசியல் பணியாற்றச் சொல்லியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அத்தனை வாக்காளர்களையும் சந்தித்து மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய அழைப்பு விடுக்கப்போகிறோம். இதன் இன்னொருகட்டமாக, ஏறத்தாழ 2 கோடி பேரை நமது கழகத்தின் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நமது கழகத்தின் முக்கிய திட்டங்களை விளக்கி, இந்த 4 ஆண்டு ஆட்சி சாதனைகளை அவர்கள் இடத்தில் எடுத்து சொல்லி, டிஜிட்டலாக அவர்கள் ஒரு செயலியின் மூலமாகவும், ஒரு படிவம் மூலமாகவும் அவர்களை இணைக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்லும் அளவில் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்கள் நடைபெற இருக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் எந்த ஒரு அரசியல் சூழ்நிலையிலும் மதங்களையோ, சாதிகளையோ அவற்றுக்கெல்லாம் மாறுபட்டு எப்போதும் ஒரணியில் நின்று அரசியல் கருத்துகளை எடுத்துரைப்பார்கள்.
தமிழ்நாடு எந்த ஒரு சவாலையும் எதிர்க்கொள்கிற போது, அது ஒரணியில் திரண்டு நிற்பதுதான் தமிழ்நாட்டிற்குரிய இயற்கையான பண்புக் கூறு என்பதை மனதில் வைத்து, இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் அவர்கள் 1 ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.
தொடர்ச்சியாக வட மொழிக்கு அவர்கள் அதிக முக்கியத்துவத்தையும் நிதியையும் ஒதுக்கியுள்ளனர். இதனால் வட மொழிக்கு அவர்கள் கொடுக்கும் முன்னுரிமை மீண்டும் உறுதியாகியுள்ளது.
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் கலைஞர் அவர்கள் செம்மொழி அந்தஸ்த்தை உருவாக்கினார்கள். வட மொழிக்கு இருக்க கூடிய முக்கியத்துவத்தை, மற்ற மொழிகள் உட்பட தமிழ் மொழியும் பெற முடியாமல் போயுள்ளதால்தான், தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும் என்று கூறுகின்றோம்.
=> திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பின்வரும் செய்தியைத் தெரிவித்தார் :-
‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்வின் மூலம் ஒன்றிய, நகர, பேரூர் கழகத்துடைய செயலாளர்களை ஒவ்வொருவரையும் தனித் தனியாகச் சந்திப்பேன் என்று 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் முதலமைச்சர் அறிவித்தற்கு ஏற்ப கடந்த 23 ஆம் தேதியில் இருந்து இதுவரை 20 தொகுதியின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மண்டல பொருப்பாளர்கள் ஆகியரோடு தலைவர் தளபதி அவர்கள் நாள்தோறும் 3 மணி நேரம் உரையாடி வருகின்றார்.
ஒவ்வொரு கூட்டமும் 3 மணி நேரத்திற்கு மேலாக அவர்களின் கருத்துகளைக் கேட்டு, தலைவரும் நிர்வாகிகளும் மனம் விட்டு பேசினார்கள். அதன் அடிப்படையில் கழகத்தின் தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றார்கள். ஒன்றிரண்டு நாட்களில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்கள். ஆகவே உணர்ச்சியோடு, மகிழ்ச்சியோடு இந்த சந்திப்பு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.
=> பெரியார், அண்ணாவை பாஜக - அதிமுக அவமதித்தது குறித்த கேள்விக்கு...
நாங்கள் தெளிவாக எங்களின் அறிக்கையில் சொல்லிவிட்டோம். எங்களை விட பொதுமக்கள் கொதித்து போய் இருக்கிறது. தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை.
இந்த இரு பெரும் தலைவர்களையும் இழித்து பேசியதை வேடிக்கை பார்த்ததைத் திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமில்ல, தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கண்டனத்தை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நீங்களே பார்க்கலாம். ஒரு சொல்லும் சரி, ஒர் ஆயிரம் சொல்லும் சரி உணர்ச்சி உள்ளவர்களுக்கு உறைக்கும்.
=> அரசு நடவடிக்கை எடுக்குமா என்கிற கேள்விக்கு...
மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு? இதை பெரிதாக வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இதை புறக்கணித்துவிட்டார்கள். நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் சேர்த்து விட்டார்கள்.