அரசியல்

"இந்தியா வலிமைபெற மாநில சுயாட்சி அவசியம்": தினத்தந்தி இதழில் வெளியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை!

"இந்தியா வலிமைபெற மாநில சுயாட்சி அவசியம்": தினத்தந்தி இதழில் வெளியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தினத்தந்தி நாளிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மாநில சுயாட்சி இன்று ஏன் அவசர அவசியம்? என்பது குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது .

அதன் விவரம் :

" இந்திய நாட்டை மாநிலங்களின் ஒன்றியம்' என்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி - ஒன்றியத்தில் கூட்டாட்சி என்பதுதான் தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையாகும். அந்த முழக்கத்தை வென்றெடுக்க நீதிபதி ராஜமன்னார் தலைமையில் மூவர் குழுவை தலைவர் கலைஞர் அமைத்தார். அதே இலக்கில்தான் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழுவை அமைத்துள்ளோம்.

கலைஞர் குரல் எழுப்பிய காலத்தைவிட இன்றைய காலம் மிக, மிக மோசமான காலமாகும், அன்றைய காலக்கட்டத்தில் ஒரு சில அதிகாரங்கள்தான் பறிக்கப்பட்டன. ஆனால் இன்றைய ஒன்றிய பா.ஜ.க., ஆட்சியானது, மாநில அரசுகளை முடக்கப் பார்க்கிறது , மாநிலங்களின் மொழி, கலாசாரங்களை அழிக்கப் பார்க்கிறது. மாநிலங்களின் உரிமைகளைச் சிதைக்கப் பார்க்கிறது. மாநில அரசுகளை அதிகாரமற்றவைகளாக மாற்றி, அதனை 'சட்டமியற்றும்' தகுதியற்றவைகளாக குறைத்து, 'சொன்னதைச் செய்யும்' கிளிப் பிள்ளைகளாக மாற்ற நினைக்கிறது ஒன்றிய அரசு.

"இந்தியா வலிமைபெற மாநில சுயாட்சி அவசியம்": தினத்தந்தி இதழில் வெளியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை!

முதலில் நிதி உரிமையைப் பறிக்கும் வகையில் "வரி" உரிமைகளைப் பறித்தார்கள். இழப்பீடு தருவதாக நடித்தார்கள். அந்த இழப்பீட்டையும் சில காலத்தில் நிறுத்தினார்கள். சமூகநீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் கல்விக்கொள்கையை வகுத்திருக்கிறோம். அதனைச் சிதைக்க தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். இது ஏழை-எளிய மக்களை கல்விச்சாலைகளில் இருந்து துரத்தும் கல்வி முறையாகும். 'நீட்' தேர்வானது நமது ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக இருக்கிறது.

மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை ஒன்றிய அரசு மறைமுகமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்க முற்படுகிறது. மும்மொழிக் கொள்கை என்று முதலில் சொல்லி, பின்னர் அதனை இந்தி மொழிக் கொள்கையாகவே மாற்றிவிடுவார்கள். இது இந்தி பேசாத மக்களை இந்திய நாட்டில் இரண்டாம் தர மக்களாக மாற்றும் சூழ்ச்சியாகும்.

"இந்தியா வலிமைபெற மாநில சுயாட்சி அவசியம்": தினத்தந்தி இதழில் வெளியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை!

நமக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவும், எரிச்சல் ஏற்படுத்தவுமே ஆளுநர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இன்றைய ஆளுநர் வந்தது முதல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் குழிதோண்டிக் கொண்டிருக்கிறார். நாம் இயற்றிய சட்டமசோதாக்கள் மீது உரிய ஒப்புதல் வழங்காமல் காலம்தாழ்த்தி வந்தார். அவரது செயலை 'சட்டவிரோதம்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அவர் திருந்தவில்லை; திருந்த மாட்டார்; அவரது குணத்தை எந்தத் தீர்ப்பும் மாற்ற முடியாது. ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

மாநில அமைப்பைக் காப்பதே மாநில மக்களைக் காப்பதாகும் என்பதால்தான் 'மாநில சுயாட்சி' முழக்கத்தை தி.மு.க. ஓங்கி ஒலிக்கிறது. கூட்டாட்சிக் கொண்ட இந்தியா வலிமைபெற வேண்டுமானால் மாநிலங்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் ஆட்சி செலுத்தி வளர்ச்சியை அடைந்தாக வேண்டும். எந்தப் பிரிவினை எண்ணத்தோடும் மாநில சுயாட்சிக் குழுவை அமைக்கவில்லை. இந்தியா வலிமைபெற வேற்றுமையில் ஒற்றுமை காணவே மாநில சுயாட்சி அவசியமாகும். மாநில சுயாட்சிக்காக அனைவரும் முழங்குவோம். வளமும், வளர்ச்சியும் பெற்ற மாநிலங்கள் மூலமாக கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories