அரசியல்

அவதூறு பதிவு : வரிக்கு வரி அண்ணாமலையின் பொய்களை தோலுரித்த திமுக எம்.பி. வில்சன்... முழு விவரம் உள்ளே !

அவதூறு பதிவு : வரிக்கு வரி அண்ணாமலையின் பொய்களை தோலுரித்த திமுக எம்.பி. வில்சன்... முழு விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திமுக அரசை விமர்சித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் உள்ள பொய்களை தோலுரித்து பதில் அறிக்கையை திமுக எம்.பி வில்சன் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

அதன் விவரம் :

அண்ணாமலை அவர்களது இந்த டிவீட் பதிவினை, புதியதாக வேலையிழந்த ஒருவரின் கசப்பான உளறலாகப் பார்க்க வேண்டியிருந்தாலும், இந்த பதிவில் உள்ள பொய்களை தோலுரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உண்மைகளை உணர்த்த வேண்டியது அவசியமாகிறது.

பொய் :

தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சியை தமிழக மக்கள் பாராட்டுவதாக நம்பி ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்.

உண்மை :

சமீபத்திய சி-சர்வே கருத்துக்கணிப்பில் கூட , மக்களிடையே மிகவும் பிரபலமான முதலமைச்சராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே திகழ்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற அனைத்து மாநில முதல்வர்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் இருந்து வருகிறார். எனவே அவரது புகழ் என்பது கற்பனை அல்ல.. அதுவே யதார்த்தம்!

பொய் :

தமிழ்நாடு அரசு மக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற குழுக்களுக்கு வீணடிக்கும் நடவடிக்கையைத் தொடரும் முன், ஏற்கனவே அமைத்த குழுக்களுக்கு இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்.

உண்மை :

தற்போது தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பணியாற்றுவதற்காக தாம் எந்த ஊதியமும் பெறவில்லை என்று நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் பகிரங்கமாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் போட்டோஷூட் மற்றும் மக்கள் தொடர்புகளுக்காக மட்டும் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழிக்கப்படும் போது, பாஜக அரசியல்வாதி ஒருவர் வீண் செலவுகள் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. மோடியின் விளம்பர செலவுகளுக்கு முதலில் கணக்கு கூறுங்கள்!

அவதூறு பதிவு : வரிக்கு வரி அண்ணாமலையின் பொய்களை தோலுரித்த திமுக எம்.பி. வில்சன்... முழு விவரம் உள்ளே !

பொய் : கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற திமுக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

உண்மை :

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான தனிநபர் மசோதாவை நானே ( பி.வில்சன் எம்.பி ) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

என்னதான் ட்வீட் பதிவு செய்வது இலவசம் என்றாலும், ஒருவர் தன் மனதில் தோன்றுவதையெல்லாம் சொல்லக்கூடாது!

பொய் :

கடந்த 2013 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுதான், நீட் தேர்வை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தது, மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு, நீட் தேர்வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீகோர்ட்டில் யார் வாதிட்டார்கள் என்பதும் முதலமைச்சருக்கு நன்றாகத் தெரியும்.

உண்மை:

இது அண்ணாமலை அவர்களின் அறியாமையாகும். மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதல்படி, நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நான் ஆஜராகி 06.1.2011 அன்று இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஒழுங்குமுறை விதிகளுக்கு 2011 ஆம் ஆண்டின் ரிட் மனு எண். 341 மற்றும் 342 மீது தமிழ்நாடு அரசின் சார்பில் தடை உத்தரவு பெற்றேன்.

அதன்பிறகு, 2016-ம் ஆண்டு பாஜக அரசு இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்து, 10-டி பிரிவை அறிமுகப்படுத்தும் வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமல்படுத்தப்படவில்லை. நீட் தேர்வை ஆதரித்ததோடு, அதனை அமல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்திடம் கோரியது பாஜக தான்.

அவதூறு பதிவு : வரிக்கு வரி அண்ணாமலையின் பொய்களை தோலுரித்த திமுக எம்.பி. வில்சன்... முழு விவரம் உள்ளே !

பொய் : நீதிபதி ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் எந்த நடைமுறை வலிமையையும் கொண்டிருக்கவில்லை என்று அப்போதைய ஒன்றிய அரசே கூறியது.

உண்மை :

இதுவும் அறியாமையே! தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி தொடர்புடைய சமீபத்திய தீர்ப்பு உட்பட, மத்திய-மாநில அரசுகளின் பிரச்சனைகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

பொய் :

சீர்குலைந்து கிடக்கும் மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்.

உண்மை :

ஒன்றிய பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் தேசிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகம் 9.69 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக கடந்த வாரம்தான் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. எனவே, தமிழகத்தில் பாஜகவைத் தவிர வேறு எதுவும் சீர்குலைந்து இருக்கவில்லை.

திரு.அண்ணாமலை அவர்கள் தியானத்தில் அதிக நேரத்தையும், ட்வீட் செய்வதில் குறைந்த நேரத்தையும் செலவிட வேண்டும், ஏனென்றால் அவர் பேசுவதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

banner

Related Stories

Related Stories