
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளத் தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று (பிப்.20) நடைபெற்றது. இதில் கழக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதன் விவரம் வருமாறு:-
இன்று ‘லோடிங் 2.0’ (Loading 2.0) என்கிற தலைப்பில் நடக்கின்ற தகவல் தொழில் நுட்ப அணியின் இந்த நிர்வாகிகள் சந்திப்பில் நானும் கலந்துகொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எப்போது தகவல் தொழில்நுட்ப அணி நிகழ்ச்சி நடத்தி என்னை அழைத்தாலும் ஏதோ ஒரு சிறிய சிக்கல் வந்துவிடும். உங்களுக்கு எல்லாம் நினைவிருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 2024-இல் ‘விங் 2.0’ (Wing 2.0) மாநாட்டிற்கு அழைத்திருந்தீர்கள், அப்பொழுது எனக்குக் கண்ணில் தொற்று, கருப்புக் கண்ணாடி அணிந்து வந்திருந்தேன்.
அதன் பிறகு கோயம்புத்தூரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் பொழுது, இடையில் என்னை அழைத்து அங்கு கோயம்புத்தூரில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினீர்கள். அப்போதும் கொஞ்சம் சோர்வாக வந்திருந்தேன். ஆனால் இன்று அப்படி இல்லை.
ஏனெனில், நீங்கள் இந்த முறை என்னிடம் தேதியே வாங்கவில்லை. இன்று டி.ஆர்.பி.ராஜா அவர்கள் என்னை அழைத்து வரவில்லை, இழுத்துக்கொண்டு வந்திருக்கிறார். தலைவர் 6 மணிக்கு வந்து பேசுகிறார், அதுவரைக்கும் நீங்கள் வந்து பேசிவிட்டுச் சென்றால் நன்றாக இருக்கும் என்றார். மெயின் பிக்சர் 6 மணிக்கு, நான் டிரைலர் என்று நேற்று மாலைதான் என்னிடம் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதை தெரிவித்தார்.
இதற்கு முன்பு நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன், இதற்குப் பிறகு என் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது, இருந்தாலும் இடையில் வந்துவிட்டுச் செல்ல வேண்டுமே, ஏனெனில் தகவல் தொழில்நுட்ப அணி அழைத்தால் இளைஞர் அணி வந்துதான் ஆக வேண்டுமே. தகவல் தொழில்நுட்ப அணி அழைத்தால் இளைஞர் அணி வந்துதான் ஆக வேண்டும் என்கிற நிலையை நீங்கள் அனைவரும் சேர்ந்து இன்று உருவாக்கி வைத்துள்ளீர்கள். ஆனால் அதற்காக மட்டும் வரவில்லை, தமிழ்நாடு முழுவதிலிருந்து வந்திருக்கிறீர்கள், உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்கிற அந்த ஒரே எண்ணத்தோடுதான் இன்று வந்துள்ளேன். உங்களை எல்லாம் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி, மிகுந்த உற்சாகம் அடைகிறேன்.

கழகத்தின் மற்ற அணிகளின் நிர்வாகிகளைத் தினமும் சந்திக்க முடியாது. உங்களில் பல பேரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும், உங்கள் பெயர் எனக்குத் தெரியும், நீங்கள் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள் என்று தெரியும். ஏனெனில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் இருப்பவன் நான், சென்னையில் மட்டுமே இருக்க மாட்டேன். எப்படியும் மாதத்திற்கு 5-6 மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் இருப்பேன். அங்கு வரும் பொழுது ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசக்கூடிய பழக்கம் வைத்துள்ளேன்.
இளைஞர் அணியைச் சந்திக்கும் பொழுது, பல மாவட்டங்களில் இளைஞர் அணி சந்திப்பை ஒருங்கிணைப்பது தகவல் தொழில்நுட்ப அணி என்பதும் எனக்குத் தெரியும். எனவே மற்ற அணி நிர்வாகிகளைத் தினமும் சந்திக்க முடியாது. ஆனால் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உங்களை எல்லாம் சமூக வலைதளம் மூலமாக நான் கிட்டத்தட்ட தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், பின் தொடர்கிறேன். நீங்கள் பதிவிடும் வீடியோக்களை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக நான் வெளி மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பொழுது, வாகனப் பயணத்தில் இருக்கும் பொழுது நான் பதிவிறக்கம் செய்து ரசித்துக் கேட்பது, கவனித்துக் கேட்பது உங்களின் உரைகளை, உங்களின் பதிவுகளைத்தான்.
நீங்கள் அனைவரும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நமக்குத்தான் பணிச்சுமை அதிகம். இன்னும் சொல்லப்போனால் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணி அவர்களுக்கு எல்லாம் இந்த அளவுக்குப் பணிச்சுமை இருக்காது, இந்த அளவுக்கு அழுத்தம் இருக்காது. அவர்கள் தோன்றுவதைப் பேசிவிட்டு, தோன்றுவதைக் கூறிவிட்டுப் பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டு இருப்பது அவர்களின் வேலை.
ஆனால் நம் தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பு என்பது மிக மிகக் கடினமானது. ஏனெனில் அவர்கள் பரப்புகின்ற அந்த அவதூறுகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதில் சொல்ல வேண்டியது நம் கடமையாக இன்று இருக்கிறது. அதற்கு உங்களை எல்லாம் உங்களின் அணிச் செயலாளர் தயார் செய்திருக்கிறார். நீங்கள் இன்னும் சிறப்பாக உங்களின் உழைப்பைக் கொடுக்க வேண்டும்.
எல்லா அவதூறுகளுக்கும் சரியான பதிலடியை நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், இன்னும் அதிகமாக அந்தப் பணிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். எனவே கழகத்தைக் காக்கக்கூடிய ஒரு காவல் அரணாக இன்று தகவல் தொழில்நுட்ப அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் அடிமைகள், சங்கிகள், கொள்கை இல்லாமல், லட்சியம் இல்லாமல் எதை நோக்கிச் செல்கிறோம் என்ற அடிப்படை அரசியல் அறிவே இல்லாத வெற்று அட்டைகள் இவர்கள் எல்லாம் இன்று கணினியைத் தாக்குகின்ற ஒரு வைரஸ் மாதிரி இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பொய்களை எல்லாம் முறியடிக்கின்ற ஆண்டி வைரஸ், FIRE WALL ஆக, தடுப்புச் சுவராக இன்று நம் கழகத் தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இரவு பகல் பார்க்காமல் எந்நேரமும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நல்ல வேறுபாடு தெரிகிறது. பல கட்சிகளில் பல லட்சங்களைச் செலவு செய்து பணம் கொடுத்துப் (WAR ROOM) போர் அறை எல்லாம் அமைத்துத் தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் நீங்கள் எந்தவிதமான ஒரு சிறிய எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்திற்காக, கலைஞருக்காக, நம் தலைவருக்காக, உதயசூரியன் சின்னத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
திராவிட இயக்கத்திற்கு அவதூறுகளை எதிர்கொள்வது ஒரு புதிய விஷயம் கிடையாது. எவ்வளவோ பார்த்துவிட்டோம், பெரியார் பார்க்காததா? பேரறிஞர் அண்ணா பார்க்காததா? டாக்டர் கலைஞர் பார்க்காததா? எனவே எதிரிகள் தொடர்ந்து நம் மீது பொய்ச் செய்திகளை, அவதூறுகளைப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். நம் கழகத் தலைவர் மிசாவிலேயே கைது செய்யப்படவில்லை என்கிற ஒரு பொய்ச் செய்தியையும் இடையில் பரப்பினார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் ஆதாரத்தோடு மெய்ப்பித்துக் காட்டியது இங்கு வந்திருக்கக்கூடிய தகவல் தொழில்நுட்ப அணித் தோழர்கள் நீங்கள்தான். உண்மையைச் சொல்வதற்கு நாம் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது. எனவே ஒரு விஷயத்தை நான் இங்கு மிகத் தெளிவாக அழுத்தந்திருத்தமாகச் சொல்லியாக வேண்டும். அப்படிப்பட்ட பொய்ச் செய்தி பரப்புபவர்களை இன்று நாம் பயப்பட வைத்துள்ளோம், ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துள்ளோம் என்றால் நம் தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகளால்தான் அவர்களை நீங்கள் முறியடித்துள்ளீர்கள்.
அதற்காகவே தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கும் வந்திருக்கக்கூடிய தன்னார்வலர்கள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அணியின் செயலாளர் சகோதரர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் செயல்பாடுகளை நான் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஒரு நல்ல அணியின் செயலாளர் எப்படிச் சிறப்பாகச் செயல்பட வேண்டுமோ, எப்படி உங்களை எல்லாம் வழிநடத்த வேண்டுமோ, அதை அவர் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். அதையும் தாண்டி இன்று தமிழ்நாட்டின் ஒரு சிறந்த அமைச்சராக, நம் திராவிட மாடல் ஆட்சியில் சிறந்த தொழில்துறை அமைச்சராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தகவல் தொழில்நுட்ப அணி என்று சொன்னால் சும்மா மடிக்கணினியையும் கைபேசியையும் வைத்துக்கொண்டு இருக்கின்ற அந்த நிலையை மாற்றி, இன்று டி.ஆர்.பி.ராஜா களத்திலும் எங்களால் செயல்பட முடியும் என்பதை உங்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி களத்தை எப்படி நாம் வலுப்படுத்த முடியும் என்று நீங்கள் பல்வேறு பணிகளைச் செய்து, மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறீர்கள்.

குறிப்பாகச் சென்ற ஆண்டு நம் தலைவர் அறிவித்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கின்ற ஒரு முன்னெடுப்பு. தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு இல்லாமல் நிச்சயமாக இந்த வெற்றியை நாம் பெற்றிருக்க முடியாது. நீங்கள் இல்லாமல் அந்த வெற்றி வந்திருக்காது. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு அதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்த்தீர்கள். அதேபோல கைபேசி செயலி மூலமாக நாள்தோறும் நீங்கள் உறுப்பினர் சேர்ப்பதை நம் கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து நேரடியாகவே கண்காணித்துக் கொண்டிருந்தார். உங்களில் பலரோடு நேரடியாகத் தொலைபேசியிலும் பேசியிருக்கிறார்.
அதே மாதிரி மற்ற கட்சிகள் எல்லாம் வாக்குச்சாவடி குழு அமைக்கவே இன்று திண்டாடிக்கொண்டு, திணறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம் கழகத்தில்தான் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நாம் டிஜிட்டல் ஏஜென்டை நியமித்துள்ளோம். இது எந்த இயக்கத்திற்கும் கிடையாது. இந்தப் பணிகளை எல்லாம் சிறப்பாகச் செய்ததற்காகவும் தகவல் தொழில்நுட்ப அணிக்கு என் பாராட்டுகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று களம் வித்தியாசமானது, மாறி இருக்கிறது. களம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு இன்று இணையதளமும் மிகவும் முக்கியமாகிவிட்டது. அதனால் நாங்கள் இன்று இளைஞர் அணியில் மாவட்டத்திற்கு ஒரு சமூக வலைதளத் துணை அமைப்பாளர்களை நியமித்துக் கொண்டிருக்கிறோம். உங்களின் இன்னொரு முக்கியமான பணியைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ‘திராவிட மாதம்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாக நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு இந்த நேரத்தில் என் வாழ்த்துகள்.
அந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சிறந்த பேச்சாளர்களைச் சமூக வலைதளத்தில் பேச வைக்கிறீர்கள். அந்த ஒலிப்பதிவுத் தொடரில் நம் கழகத் தலைவர் அவர்களும் பேசியிருக்கிறார்கள், எனக்கும் அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளீர்கள். பல்வேறு தலைவர்கள் அதில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இளைய தலைமுறையைச் சேர்ந்த பேச்சாளர்களும் அதில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தத் திராவிட மாதத் தொடர் கூட்டங்கள் மிக மிக முக்கியமான ஒரு பெரும் வெற்றி பெற்ற ஒரு முன்னெடுப்பு. அதற்கு இந்த நேரத்தில் என் பாராட்டுகள்.
அதே மாதிரி நம் கொள்கைகளைப் பரப்புவதற்குச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் சிறப்பாகப் பல காணொளிகளை நீங்கள் பகிர்ந்து கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் சங்கி கூட்டம் டெல்லியில் ஒரு சர்வதேசச் செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டில் என்னென்ன வேடிக்கைகள் எல்லாம் நடத்தினார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை, நீங்களே பார்த்திருப்பீர்கள்.

சீனாவிற்குச் சென்று ஒரு இயந்திர பொம்மையை வாங்கி வந்து இதை நாங்கள்தான் தயாரித்தோம் என்று பொய் கூறி இன்று ஒட்டுமொத்த உலகமும் காரித்துப்பும் அளவுக்கு சங்கி கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இன்று உலகமே அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த மாதிரி கோமாளி கூட்டத்தோடுதான் நாம் இன்று தினமும் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது, அவர்களோடு நாம் சண்டை போட வேண்டியதாக இருக்கிறது. எனவே தேர்தல் நெருங்க நெருங்கத் தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். பொய்ச் செய்திகளை, அவதூறுகளை எல்லாம் ஆரம்பக் கட்டத்திலேயே அடித்து நொறுக்குங்கள்.
தவறான தகவல் (Misinformation), திட்டமிட்ட பொய்த் தகவல் (Disinformation) என்று இரண்டு வகையான பொய்கள் இருக்கின்றன. இதில் தவறான தகவல் என்பது ஒருவருக்குத் தெரியாமல் பரப்புகின்ற ஒரு பொய்ச் செய்தி. நானும் அது உண்மை என்று நினைத்துக்கொண்டு அதைப் பரப்பிக் கொண்டிருப்பேன், அதுதான் தவறான தகவல். ஆனால் திட்டமிட்ட பொய்த் தகவல் என்பது வேண்டும் என்றே, சங்கி கூட்டம் மாதிரி தெரிந்தே பரப்புகின்ற பொய்ச் செய்தி. இந்த இரண்டுக்கும் எதிராக நம் களப்பணியை அமைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள்.
மற்ற சங்கி கூட்டம் மாதிரி நான் உங்களைப் பொய்ச் செய்திகளைப் பரப்பச் சொல்லவில்லை. நம் கழகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொண்டு, உள்வாங்கி அதை மக்களிடம் பரப்புங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா ஒத்துழைப்பையும் வழங்க எப்பொழுதுமே நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக இளைஞர் அணி உங்களுக்கு எப்பொழுதுமே கூட நிற்கும். அதே மாதிரி உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் நிச்சயமாக உங்களுக்கான சரியான நேரத்தில் உங்களைத் தேடி வரும் என்பதை நான் இந்த நேரத்தில் உங்களுக்குச் சொல்கிறேன். எனவே உற்சாகமாக வேலை செய்யுங்கள்.

எப்பொழுதுமே நடப்புச் செய்திகளில் புதுப்பித்த நிலையில் இருங்கள். தினசரி காலையில் எழுந்த உடனே செய்தித்தாள் படித்துவிடுங்கள். தயவு செய்து ‘முரசொலி’ நாளிதழைத் தினமும் தவறாமல் படித்துவிடுங்கள். தலைவரின் அறிக்கை, தலைவரின் பேச்சு இதையெல்லாம் படித்துவிடுங்கள். நம்மிடம் திராவிட இயக்கத்தின் கொள்கை, வரலாறு இருக்கிறது. நம்மிடம் மட்டும்தான் அந்த வரலாறு இருக்கிறது. அதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். திராவிட மாடல் அரசின் இந்த நான்கு ஆண்டுப் பத்து மாதங்கள் அரசின் சாதனைகளை உள்வாங்கிக்கொள்ளுங்கள். அதை எல்லாம் மக்களிடம் தொடர்ந்து பேசுங்கள், கொண்டு போய் சேருங்கள்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்துகின்ற இந்த நான்கு ஆண்டுப் பத்து மாதத்தில் செயல்படுத்திய திட்டங்களினால் இன்று இந்தியாவிலேயே வளர்ந்து வருகின்ற மாநிலங்களில் முதல் மாநிலமாக 11.19 சதவிகித வளர்ச்சியோடு இன்று நம் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இது பிடிக்காமல்தான் இன்று ஒன்றிய அரசு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், பல்வேறு இடையூறுகளை நம் தமிழ்நாட்டிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறித்தான் நம் முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நம் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து கொண்டு செல்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தல் வருவதால் மோடி அவர்களும், அமித்ஷா அவர்களும் இனிமேல் தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வருவார்கள். என்னென்னவோ முயற்சி செய்வார்கள். திருக்குறள் பேசுவார்கள். விட்டால் நமக்கே தமிழ் பாடம் வகுப்பு எடுப்பார்கள். இதற்கெல்லாம் ஏமாறக்கூடிய மக்கள் தமிழ்நாட்டு மக்கள் கிடையாது. எனவே நாம் தமிழ்நாட்டு மக்களை இன்னும் அதிகமாகக் கல்வியறிவு ஊட்ட வேண்டும்.
மோடி இப்பொழுது தொடர்ந்து என்ன சொல்கிறார், சென்னைக்கு வந்து ஒரு பதினைந்து நாளுக்கு முன்னாடி பேசும்போது என்ன சொன்னார்? தமிழ்நாட்டிற்கு ‘இரட்டை இயந்திர அரசு’ (Double Engine Sarkar) வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். நான் ஏற்கனவே அதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன். திரு. மோடி அவர்களே உங்களின் இரட்டை இயந்திர அரசு எல்லாம் இருக்கட்டும், முதலில் பா.ஜ.க-வோடு கூட்டணி இருக்கக்கூடிய எல்லாமே ‘பஞ்சரான டயர்கள்’. அந்தப் பழுதான இயந்திரத்தையும் பஞ்சரான டயர்களையும் வைத்துக்கொண்டு உங்களால் எந்த வண்டியையும் ஓட்ட முடியாது. அப்படித்தான் இன்று பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி திகழ்ந்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையைப் பார்த்திருப்பீர்கள். இந்த முறை தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தையும் ஒதுக்கவில்லை. ஆனால் நிர்மலா சீதாராமன் அவர்கள் அந்த பட்ஜெட் அறிக்கையைப் படித்து முடிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாராட்டுகிறார் ‘மிகச்சிறந்த பட்ஜெட்’ என்று. அவர்கள் இன்னும் படித்தே முடிக்கவில்லை, அதற்குள் இங்கிருந்து பாராட்டுகிறார்.
‘முரட்டு பக்தர்கள்’ பார்த்திருப்போம், ‘முரட்டுத் தொண்டர்கள்’ உங்களில் பல பேர் இருப்பீர்கள். ஆனால் இன்று இந்தியாவே ஒரு ‘முரட்டு அடிமையைக்’ கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அதுதான் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

‘ஜாடிக்கு ஏற்ற மூடி’ என்று சொல்வார்கள். இன்று மோடிக்கு ஏற்ற ஒரு முரட்டு அடிமையாகத் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் உருவாகி இருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு முரட்டு பக்தர், முரட்டு அடிமை. சமீபத்தில் சமூக ஊடகங்களில், யூடியூபில், தொலைக்காட்சிச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அது ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் ஒரே அழுகை, கண்ணெல்லாம் அப்படியே வீங்கிப் போய் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. என்னவென்று பார்த்தால் எதிரே மறைந்த முதலமைச்சர், மறைந்த தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் அங்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறார்.
இந்நேரம் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தால் எப்படி அழுதிருப்பார் நீங்கள் அதை மட்டும் யோசித்துப் பாருங்கள். அ.தி.மு.க-வின் நிலைமையைப் பார்த்து, திரு. எடப்பாடி பழனிசாமியின் நிலைமையைப் பார்த்து எம்.ஜி.ஆர் கீழே உருண்டு உருண்டு அழுதிருப்பார் ‘என் கட்சியை இப்படி ஆக்கிவிட்டீர்களே’ என்று. எனவே இதையெல்லாம் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
வரப்போகின்ற தேர்தலில் பாசிஸ்டுகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் ஒரு சரியான பாடத்தை நாம் கற்பித்தாக வேண்டும். நாம் மீண்டும் மீண்டும் தலைவர் சொன்னது மாதிரி டெல்லிக்குத் தமிழ்நாடு என்றுமே ‘கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது’ (Out of control) தான் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதையெல்லாம் மக்களிடம் சென்று பேசுங்கள்.
பத்துத் தோல்வி பழனிசாமியையும், மொத்தத் தோல்வி மோடியையும் மீண்டும் ஒரு முறை ஓட ஓட தமிழ்நாட்டு மக்கள் நம் சக்தியால் விரட்டப் போகிறார்கள். நடக்க இருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான ஒரு ஜனநாயகப் போர். வெல்வது தமிழ்நாடா இல்லை டெல்லியா என்று நாம் பார்த்துவிடுவோம். தமிழ்நாட்டின் வெற்றிக்காக யார் களத்தில் இருக்கிறார்களோ இல்லையோ, தி.மு.க-வின் தொண்டன் கடைசி உடன்பிறப்பு நிச்சயமாகக் களத்தில் நின்று அந்தப் போரில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
தலைவர் நமக்கு இலக்கு கொடுத்திருக்கிறார்கள் ‘வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு’ என்று. நிச்சயமாக நான் சொல்கிறேன் தொடர்ந்து பல்வேறு பகுதி மக்களைச் சந்தித்துக் கொண்டு வருகிறேன். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய மக்களுடைய வரவேற்பு, அதிலும் முதலமைச்சரின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் ஒரு பயனாளியாவது ஒரு திட்டத்திலாவது பயன்பெற்று இருப்பார்கள்.
அதிலும் இப்பொழுது கடைசியாக எல்லாரும் சொல்கிறார்களே, நம் தலைவர் அடித்தாரே, Master stroke பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் - மூன்று மாதத்திற்குச் சேர்த்து ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 3,000 ரூபாய், மற்றும் கோடை காலத்திற்கு கூடுதலாக 2,000 ரூபாய். தலைவர் என்ன சொன்னார்? ‘என் தமிழ்நாட்டு மகளிர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு நாங்கள் கொடுக்கின்ற 1,000 ரூபாயை நீ நிறுத்தப் பார்க்கிறாயா? நான் கொடுக்கிறேன் 5,000 ரூபாய்’ என்று நம் தலைவர் அவர்கள் இன்று கொடுத்துள்ளார். இது மகளிரிடையே மிகப்பெரிய ஒரு வரவேற்பைக் கொடுத்துள்ளது. இதையெல்லாம் மக்களிடம் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருங்கள்.
நம் கழகம் ஏழாவது முறையாக நிச்சயமாக ஆட்சி அமைக்கும். நம் தலைவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக நிச்சயமாக முதலமைச்சர் பொறுப்பில் அமர்வார். எனவே அடுத்த 50 நாட்கள் மிக மிக முக்கியம். களத்தில் நாம் இறங்கி மக்களைச் சந்தித்து, நீங்கள் இணையதளத்தில் உங்களின் கடமைகளைச் செய்யுங்கள். கழகத்தின் மகத்தான வெற்றிக்கு இந்தத் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பணிகள் மிக மிக முக்கியமான ஒரு பணியாக நிச்சயம் இருக்கும். உங்களின் பணிகள் சிறக்கட்டும் என்று கூறி, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.






