அரசியல்

புரட்சியாளர் ஜோதிபா பூலேயின் திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுத்த ஒன்றிய அரசு : கி.வீரமணி கண்டனம் !

புரட்சியாளர் ஜோதிபா பூலேயின் திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுத்த ஒன்றிய அரசு : கி.வீரமணி கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமூகப் புரட்சியாளர் ஜோதிபா பூலேயின் பிறந்த நாளில் அவரைப் பாராட்டி ஒன்றிய உள்துறை அமைச்சரும், மாநில அமைச்சரும் பேசுவதும், அதே நேரத்தில் அவரைப் பற்றிய திரைப்படத்தில் ஜாதிக்கு எதிரான வசனங்களைத் தணிக்கையில் நீக்குவதும் இரட்டை வேடமே – கண்டனத்துக்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மனிதகுலத்தின் உண்மையான ஊழியரான மகாத்மா பூலேவின் பிறந்தநாளில் அவருக்கு நம் மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறோம். சமூகத்தின் சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலனுக்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நாட்டிற்கு அவர் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்பு ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்” நேற்று சமூகப் புரட்சியாளர் ஜோதிபா பூலே அவர்களின் பிறந்தநாளையொட்டி மேற்கண்ட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருப்பவர் வேறு யாருமல்ல. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான்.

அவர் மட்டுமல்ல.. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் எல்லோரும் ஜோதிபா பூலேவின் சமூகப் பணிகளை, சீர்திருத்தங்களை, பெண் கல்வி முன்னெடுப்புகளைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்கள்.

புரட்சியாளர் ஜோதிபா பூலேயின் திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுத்த ஒன்றிய அரசு : கி.வீரமணி கண்டனம் !

ஆனால், நேற்று (11.4.2025) அவரது பிறந்தநாளை யொட்டி வெளிவந்திருக்க வேண்டிய அவரது வரலாற்றுப் படமான “பூலே” திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுத்திருக்கிறது இதே ஒன்றிய அரசின் தணிக்கைத் துறை. அதில் பார்ப்பனர்களுக்கு எதிராகவும், அவர்களின் ஜாதிக் கொடுமைகளை எடுத்துக் காட்டியும் வரும் வசனங்களையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று படக் குழுவினரிடம் கட்டாயப்படுத்துகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

சமூகப் புரட்சியாளர் ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே, பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர், பழங்குடி மக்கள் தலைவர் பிர்சா முண்டா போன்றோரையெல்லாம் வெறும் படமாகக் காட்டி, புகழ் மாலை சூட்டி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளைக் குறி வைப்பதற்கான இரையாகப் பயன்படுத்தப் பார்க்கிறது பாரதிய ஜனதா கட்சி. அவர்களின் புத்தகங்கள், கொள்கைகள் பரவுவதையோ, அவர்களின் இயக்கங்கள் செயல்படுவதையோ தடுப்பதில் மும்முரம் காட்டுகிறது.

புரட்சியாளர்கள் ஜோதிபாபூலேவும், அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வெறும் படங்கள் அல்ல; பாடங்கள் என்பதைத் தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். பார்ப்பனரல்லாத மக்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏமாற்ற முடியாது. 'பூலே’ படத்திற்கு நெருக்கடி தராமல், உடனடியாக அதனை எந்த வெட்டும் இல்லாமல் வெளியிட அனுமதிக்க வேண்டும்.ஜாதி-தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகப் பேசுவதையும், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கத்திற்கு எதிராகப் படம் எடுப்பதையும் தொடர்ந்து தடுத்து, கருத்துரிமையை நசுக்கிவரும் ஒன்றிய அரசுக்கு நமது கண்டனங்கள்!"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories