புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரத்தில் 21 லட்சம் மதிப்பீட்டில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களின் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட சிறுவிசை மின் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி, பேவர் பிளாக் சாலையை ஆகியவற்றை இன்று எம்.எம்.அப்துல்லா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மும்மொழி கொள்கை என்று மூன்றாவது மொழியாக இந்தியை கொண்டுவருவார்கள். உதாரணத்திற்கு ஒரு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவன் மூன்றாவது மொழியாக பெங்காலி மொழியை தேர்வு செய்தால் பெங்காலி மொழியை சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர் அங்கு இருக்க மாட்டார்கள். அதனால் மூன்றாவது மொழி என்று சொல்லும் பொழுது இந்தி மொழியில் தான் வந்து நிற்கும்.
இந்த சூது தெரிந்ததால் தான் நாங்கள் இதை எதிர்க்கின்றோம். முதலில் இந்தி மொழி என்று வந்தார்கள், நாங்கள் விரட்டி விட்டோம். தற்போது இந்தி மொழி என்று சொன்னால் விரட்டி விடுவார்கள் என்ற காரணத்தினால் மூன்றாவது மொழி என்று பின் வாசல் வழியில் வருகிறார்கள். இவர்களது சூழ்ச்சி தெரியாத ஆட்கள் நாம் கிடையாது. ஏனென்றால் நாம் போட்டுக் கொண்டிருப்பது பெரியார் கண்ணாடி. ஏதாவது ஒரு பொது மொழி என்கின்ற போது அந்த இடத்தில் ஆங்கிலம் இருந்து விட்டு போகிறது. பொதுமொழியாக ஆங்கிலம் இருக்கும் பொழுது மூன்றாவது மொழி ஒன்று தேவை இல்லை.
ஆங்கிலம் தெரிந்த இருவர் அமெரிக்க சென்று அங்கு உள்ளவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி அவர்களுடன் நாம் போட்டி போட முடியாது. அதேபோல ஒருத்தர் தாய் மொழியை கற்றுக்கொண்டு மற்றொருவரோடு போட்டி போட முடியாது. நாம் இந்தியை கற்றுக் கொண்டு விட்டால் அனைத்து போட்டித் தேர்வுகளும் ஹிந்தியில் தான் நடக்கும். அப்போது அனைத்திலும் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான் வெற்றி அடைவார்கள். நம்மால் வெற்றியடையவே முடியாது. ஆங்கிலம் என்பது ஒரு வேற்று மொழி. ஹிந்தி பேசுபவர்களுக்கும் வேற்று மொழி தமிழ் பேசுபவர்களுக்கும் வேற்று மொழிதான். அதனால்தான் ஆங்கிலம் கற்றுக்கொண்டு இருவரும் போட்டியிட்டால் தான் அது சமமாக போட்டியாக இருக்கும்.
தொகுதி மறுசீரமைப்பு அதுவும் ஒரு பிரச்சனைதான். ஹிந்தி பேசக்கூடிய மாநிலங்களில் பாஜகவின் கொள்கைகள் சித்தாந்தம் எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி விட்டு அங்கு மட்டும் மெஜாரிட்டியை பிடித்து விட்டு தொடர்ந்து இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற திட்டம் தான் இந்த தொகுதி மறுசீரமைப்பு. இது தவிர வேறு எதுவும் இல்லை.
உதாரணத்திற்கு நாடாளுமன்றம் என்பது கொள்கை வரையறை சட்டம் இயற்றுவது மட்டும் தான். அதைத் தாண்டி நாடாளுமன்றத்திற்கு வேறு ஒரு பெரிய பணிகள் எதுவும் கிடையாது. நாடு சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் மக்கள்தொகை 35 கோடியாக இருந்தது. அன்று ஒரு பிரதமர்தான் இருந்தார். இன்று இந்தியாவில் மக்கள்தொகை 150 கோடியாக மாறிவிட்டது என்ற காரணத்தினால் நான்கு பிரதமரா வைத்துக் கொள்ள முடியுமா? நாடாளுமன்றம் என்பது நாடு எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கக்கூடிய இடம்தான். அதனால் முடிவு எடுக்கக்கூடிய இடத்திற்கு தொகுதிகளை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் என்பது கிடையாது.
உள்ளாட்சி அமைப்புகள்தான் தினசரி பொதுமக்களை சந்திக்க கூடியவர்கள். அங்கு மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போது வார்டுகளை அதிகப்படுத்தலாம். ஆனால் நாடாளுமன்றம் என்பது மக்களுடன் தினசரி தொடர்பில் இருப்பது என்பது கிடையாது. நாடு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய இடம்தான் அதனால் அதனை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது" என்று கூறியுள்ளார்.