
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்குள் வந்ததில் இருந்தே மக்கள் மத்தியில் மதம் ரீதியாக வன்முறையை ஏற்படுத்தி பிளவு படுத்துவதற்கான வேலைகளை செய்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் இன்னமும் நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இந்திய இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை மினி பாகிஸ்தான் என்றும், பெண் வழக்கறிஞரிடம் அநாகரீக கருத்துகளை கூறி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்டார். பாஜக ஆதரவு நீதிபதிகள் இதுபோன்ற பல்வேறு விஷயங்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் பாஜக அமைச்சராக இருப்பவர் நிதேஷ் நாராயண் ரானே.
இவர், “கேரளா ஒரு மினி பாகிஸ்தானாக இருப்பதால்தான் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து தீவிரவாதிகளும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். நான் உண்மையைத்தான் சொல்கிறேன் தீவிரவாதிகளின் ஆதரவால்தான் இவர்கள் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவாக்கு எதிராக யாரும் செயல்பட்டால் அவர்களை நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்.” என்று பேசியுள்ளார்.
பாஜக அமைச்சரின் இந்த பேச்சு கடும் கண்டனங்களை எழுப்பியதோடு கேரளா மக்களை பற்றியும் கொச்சைப்படுத்தியதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பாஜக அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
“மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் கோட்டையாக விளங்கும் கேரளாவிற்கு எதிராக சங்கபரிவாரால் திட்டமிடப்பட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. கேரளா மீதான இந்த மோசமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்; சங்கபரிவாரின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.








