ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை, எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை முழுவதும் நிறைவடைந்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்கான நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதமானது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தேர்தல் பத்திரங்களால் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களைத் தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஐ.டி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதோடு,2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை வெயிட SBIக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும் நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகி ராகுல் காந்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதளத்தில், "நரேந்திர மோடியின் ஊழல் நிறைந்த கொள்கைகள் மீண்டும் உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் மற்றும் கமிஷன் பெறும் வழியாக தேர்தல் பத்திரங்களை பாஜக பயன்படுத்தியது. இன்று அது நிரூபணம் ஆகியிருக்கிறது." என தெரிவித்துள்ளார்.