அரசியல்

“மாநில மொழிகள் புறக்கணிப்பு?; மோடி அரசு சில்லரைத்தனமான செயல்களை கைவிட வேண்டும்” : ‘தினகரன்’ நாளேடு சாடல்!

பள்ளிலேயே மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டால், தாய் மொழிப்பற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம் என்று எண்ணும் சில்லரைத்தனமாக செயல்களை கைவிட வேண்டும் என ‘தினகரன்’ நாளேடு தெரிவித்துள்ளது.

“மாநில மொழிகள் புறக்கணிப்பு?; மோடி அரசு சில்லரைத்தனமான செயல்களை கைவிட வேண்டும்” : ‘தினகரன்’ நாளேடு சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ,) மாநில மொழிகளை புறக்கணிப்பது ஏன்? என்று ‘தினகரன்’ தலையங்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது. 24.10.2021 தேதிய ‘தினகரன்’ தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது:-

சி.பி.எஸ்.இ தேர்வுக்கான அட்டவணையில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, மாநில மொழிகளை முக்கியத்துவம் இல்லாத பாடங்களாக மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அறிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கொரோனா பாதிப்பால் நடப்பு கல்வியாண்டை இரண்டாக பிரித்து இரண்டு பருவத் தேர்வுகளாக நடத்த சி.பி.எஸ்.இ திட்டமிட்டது. இதன்படி முதல் பருவ தேர்வுகள் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவ தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்பட உள்ளதாக சி.பி.எஸ்.இ வாரியம் அறிவித்தது. முதல் பருவ தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டதும் வெடித்தது சர்ச்சை. ஏனென்றால், சி.பி.எஸ்.இ. தேர்வுக்கான பாடங்களை முதல் முறையாக முதன்மை பாடங்கள், முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் என பிரித்தது. முதன்மை பாடங்கள் பிரிவில் இந்தி மொழி வருகிறது.

ஆனால், தமிழ். உள்ளிட்ட மற்ற அனைத்து மாநில மொழிகளும் முக்கியத்துவம் இல்லாத பாடங்களாம். முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களுக்கானத் தேர்வை சி.பி.எஸ்.இ. அமைப்பே நேரடியாக நடத்தி மதிப்பெண் வழங்குமாம். முக்கியத்துவம் இல்லாத பாடங்களுக்கானத் தேர்வுகளை அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாமாம். இது நியாயமல்ல.

இவ்வாறு வகைப்படுத்துவதன் மூலம் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சிறுமைப்படுத்த சி.பி.எஸ்.இ முயல்கிறதோ என்ற அச்சம் எழுகிறது. மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு இந்தி என்றால் கொள்ளை பிரியம். இந்த விவகாரத்தில் ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் பூசும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்துவதாக இல்லை. எல்லா வகைகளிலும் இந்தி திணிப்புக்கு ஆதரவாகவே ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக தான் மாநில மொழிகளை சிறுமைப்படுத்த முயற்சி நடந்துள்ளது. பள்ளி தேர்வுகளிலேயே மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டால், அவர்களது தாய் மொழிப்பற்றை முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம் என்று எண்ணுகிறார்கள் போலவும். இதுபோன்ற சில்லரைத்தனமாக செயல்களை கைவிட வேண்டும்.

மொழி என்பது மனிதனின் உணர்வோடு, உயிரோடு கலந்தது. இதை உணர்ந்து கொள்வது அவசியம். முதலில் இப்படி ஒரு முடிவை எடுக்கும்முன் அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும். அதை செய்யும் பழக்கம் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு துளியும் கிடையாது. எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்பதை அறிந்து அதை திருத்திக்கொள்வது ஜனநாயக நடைமுறைகளில் ஒன்று. அதையாவது இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு கடைபிடிக்க வேண்டும். அனைத்து மாநில மொழிகளையும் முதன்மை பாடங்கள் வரிசையில் சேர்க்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories