முரசொலி தலையங்கம்

“100 கோடி தடுப்பூசி.. இதுதான் ஒன்றரை ஆண்டுச் சாதனையா?” : மோடி அரசின் போலி பெருமையை தோலுரித்த ‘முரசொலி’!

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியளவைக் கூட நாம் எட்டவில்லை. இதற்கான முழுமையான அரசியல் காரணங்கள் அனைவருக்கும் தெரியும்.

“100 கோடி தடுப்பூசி.. இதுதான் ஒன்றரை ஆண்டுச் சாதனையா?” : மோடி அரசின் போலி பெருமையை தோலுரித்த ‘முரசொலி’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (25.10.2021) தலையங்கம் வருமாறு:-

100 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டதை சாதனையாகச் சொல்லி இருக்கிறார் பிரதமர். நாம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதே அதை விடப் பெரிய உண்மை!

உலகில் இந்தியாவும், சீனாவும் மட்டும்தான் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாடுகள். சீனாவில் தற்பொழுது, 223 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாம் இப்போதுதான் 100 கோடி போட்டிருக்கிறோம். அதில் 30 கோடி பேருக்கு மட்டும்தான் இரண்டாவது தடவையும் போட்டிருக்கிறோம். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியளவைக் கூட நாம் எட்டவில்லை. இதற்கான முழுமையான அரசியல் காரணங்கள் அனைவருக்கும் தெரியும்.

2019 டிசம்பரில் கொரோனா என்ற கொடும் தொற்று பரவியது. இன்று நாம் 2021 அக்டோபரில் இருக்கிறோம். எத்தனை மாதங்கள் என்பதைப் பாருங்கள். இப்போது சொல்லப்படுவது சாதனையா என்பதை உணருங்கள். நூறு கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதை இன்று சாதனையாகக் கொண்டாடுபவர்கள், கடந்த மே, ஜூன் மாதங்களில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசைச் சாடியதை வசதியாக மறைக்கிறார்கள். இது குறித்து முந்தைய தலையங்கங்களில் நாமே சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறோம்.

உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு:

1. தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு என்ன கொள்கை வகுத்துள்ளது?

2. மத்திய அரசு குறைந்த விலைக்கு தடுப்பூசிகளை வாங்கும் நிலையில், மாநிலங்களுக்கு மட்டும் அதிக விலை நிர்ணயித்திருப்பது ஏன்?

3. மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு விட்டுவிடப் போகிறதா?

4. உடனே தடுப்பூசிக் கொள்கை ஒன்றை வகுத்து அதனை மாநிலங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

5. தடுப்பூசிக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யாவிட்டால், தட்டுப்பாடு வரும்போது, ரூ.2,000 வரை கூட வசூலிக்கப்படலாம். ரெம்டெசிவீர் மருந்து பற்றாக்குறை நிலவியபோது அதன் விலை உச்சத்துக்குச் சென்றுள்ளது ஏன்?’’ - என்று நீதிபதிகள், கடந்த மே மாதம் இறுதியில் கேள்வி எழுப்பினார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘மத்திய அரசுக்கு உதவத்தான் நாங்கள் இத்தனை கேள்விகளைக் கேட்கிறோம்; தவறை ஒப்புக்கொள்வது தான் ஓர் அரசுக்குத் துணிவு, பெருமையும்கூட! தனிப்பட்ட எனது உடல் நலத்தை விட நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம்’’ - என்று கூறினார்.

அதன்பிறகுதான் புதிய தடுப்பூசிக் கொள்கையை பிரதமர் அறிவித்தார். அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியமும் உலக வங்கியும் கடந்த ஜனவரி மாதமே வலியுறுத்தி இருந்தது. அதன் பிறகும் அசைந்து கொடுக்கவில்லை ஒன்றிய அரசு. ஏப்ரல் 11 முதல் 14 வரையிலான நான்கு நாட்கள் தடுப்பூசி முகாம் என்று முதன்முதலாக பிரதமர் அறிவித்தார்.

அப்போதும் ஒன்றிய அரசிடம் தடுப்பூசிகள் இல்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மட்டும் செய்து கொண்டு இருந்தார்கள் போலிப்பெருமைக்காக! உள்நாட்டு மக்களுக்கு இல்லாமல் 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் என்ன பெருமை வந்து விடப்போகிறது? இரண்டே இரண்டு தடுப்பூசி தவிர மற்றவைக்கு அனுமதி தர மறுத்ததிலும் மர்மம் தொடர்ந்தது. செங்கற்பட்டில் 6 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் தொழிற்சாலையை இயக்கி, தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்குவதற்கு, தி.மு.க அரசு எடுத்த முயற்சிகளுக்கும் எந்த ஒத்துழைப்பும் ஒன்றிய அரசிடம் இருந்து இல்லை.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பாரபட்சமாக இருப்பதை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி, பா.ஜ.க அல்லாத 11 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதேபோன்ற கோரிக்கை மராட்டிய அரசிடம் இருந்தும் வந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ முறை பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். நேரிலும் அமைச்சர்களிடம் முறையீடுகள் வைக்கப்பட்டது. இவற்றை எல்லாம் மறக்க முடியுமா?

“தடுப்பூசி விலை குறித்த கொள்கை ஏதும் இருக்கிறதா? 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் மத்திய அரசு தடுப்பூசி தரும் என்பதற்குப் பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன? இரண்டாம் அலையில் 45க்கும் குறைந்த வயதுடையோரும் இருக்கிறார்களே? அவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் கடமையை மாநிலங்களின் பொறுப்பில் மட்டும் விட என்ன காரணம்?

‘டிஜிட்டல் இந்தியா’ என்று தொடர்ந்து பேசுகிறீர்கள். ஆனால் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்ட்டிற்குச் சென்று வேலை செய்யும் ஒரு ஏழை விவசாயத் தொழிலாளி தடுப்பூசிப் பதிவிற்காகத் தன் சொந்த மாநிலத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?” - என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டதை மறக்க முடியுமா?

“100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் மைல்கல் சாதனை மட்டுமல்ல, நாட்டின் திறமையையும் புதிய இந்தியா என்ற பிம்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது. நாட்டில் புதிய அத்தியாயத்தை இது எழுதி உள்ளது. கடினமான இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கான வழியையும் காட்டும் நாடாக தற்போது இந்தியா திகழ்கிறது. இலக்குகளை அடைவதற்காகக் கடினமாக உழைக்கும் வகையில் புதிய இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் சொல்லி இருப்பது, சக்கையான வார்த்தைகள் மட்டும்தான். சத்தான செயல்கள் இதன் பின்னணியில் இல்லை.

செப்டம்பர் மாதத்தில் 12,19,26 ஆகிய மூன்று நாட்கள் முகாம் நடத்தியது தி.மு.க அரசு. மொத்தம் 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் இரண்டு நாட்கள் முகாம் நடந்துள்ளது. 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமே ஐந்து முகாம்கள்தான் ஒரு கோடியே 10 லட்சத்து 186 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை மாதச் சாதனை இது. ஒன்றரை ஆண்டுச் சாதனை அல்ல இது! எது உண்மையான சாதனை?

banner

Related Stories

Related Stories