தமிழ்நாடு

“மோடி ஆட்சியிலும் நீடிக்கும் எல்லை பிரச்சனை.. மீண்டும் ஒரு போர்ச் சூழலை உருவாக்கும் சீனா”: முரசொலி சாடல்!

கொரோனாவுக்குப் பிந்தைய சொந்த நாட்டுச் சரிவுகளைச் சரிசெய்ய இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் சீனாவால் நடத்தப்படுமானால், அதற்கும் பாடம் கற்பிக்கும் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது.

“மோடி ஆட்சியிலும் நீடிக்கும் எல்லை பிரச்சனை.. மீண்டும் ஒரு போர்ச் சூழலை உருவாக்கும் சீனா”: முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (23.10.2021) தலையங்கம் வருமாறு:-

அருணாசலப் பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாக மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்தியா எத்தனை பதிலடிகள் கொடுத்தாலும் சீனா அடங்கியதாகத் தெரியவில்லை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்ற அடைமொழியை வாங்குவதற்கு சீனா துடிக்கிறதே தவிர, ‘அமைதியாளன்’ என்ற சொல் அதற்குக் கசக்கவே செய்கிறது.

நிகழ்காலத்தில் ‘வல்லரசு’ என்ற சொல்லே காலாவதி ஆகிவிட்டது. சொந்தப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் எப்படி வல்லரசுகள் ஆக முடியும்? அந்த யதார்த்தத்தை மாஜி வல்லரசுகள் உணர்ந்துவிட்டன. ஆனால் இன்னமும் சீனா உணரவில்லை.

வைரஸ்களுக்கு எல்லைகள் இல்லை. எங்கிருந்தோ, யாருக்கும் தெரியாமல் அதுவே நாடுகளைத் தேடி அடைக்கலம் ஆகிக் கொண்டிருக்கும் கொடூரமான கொரோனா காலக்கட்டத்திலும் தனது ஆக்கிரமிப்பை அருணாசலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் சீனா செய்வது எதிர்காலத்தின் போக்கை உணராத போக்கு என்றே கணிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி உள்ளே வந்தார்கள். அப்போது இந்திய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டார்கள். இரண்டு நாட்டுக்கும் நேரடிப் போர் நடக்கப் போகிறது என்ற சூழலே ஏற்பட்டது. ஆனால் இரண்டு தரப்பும் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக, போர் தவிர்க்கப்பட்டது.

பாங்காங் ஏரியின் வடக்கு - தெற்குக் கரைகளில் இருந்தும், கோக்ரா பகுதியில் இருந்தும், இரண்டு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன. ஆனாலும் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த படைகள் திரும்பப் பெறப்படவில்லை. இதற்கான பேச்சு வார்த்தைகள் ஓராண்டு காலமாக நடந்து வருகின்றன.

“மோடி ஆட்சியிலும் நீடிக்கும் எல்லை பிரச்சனை.. மீண்டும் ஒரு போர்ச் சூழலை உருவாக்கும் சீனா”: முரசொலி சாடல்!

இந்தப் பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாத நிலையில், சில வாரங்களுக்கு முன்னால், மீண்டும் தனது ஆக்கிரமிப்பைச் செய்தது சீனா. அருணாசலப்பிரதேசத்தின் ‘யாங்கி’ என்ற பகுதிக்கு அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் 100 சீன ராணுவ வீரர்கள் நுழைந்தார்கள். இந்தப்பகுதியானது இந்திய நிலப்பரப்பு ஆகும். இதனால் இரு நாடுகளுக்கும் நேரடியாக மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மீண்டும் இரண்டு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வழக்கம் போல் மீண்டும் பின்வாங்கியது சீனா. தற்காலிக அமைதி ஏற்பட்டது.

ஆனாலும் சும்மா இருக்கவில்லை சீனா. இந்திய எல்லைப் பகுதியில் தனது ராணுவத் துருப்புகளைக் குவித்தது. அதிகளவில் ராணுவ வீரர்களுக்கான பயிற்சிகளும் தரப்பட்டு வருகின்றன. இது ஒருவிதமான அச்சநிலையை மீண்டும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவும் அந்தப் பகுதியில் ராணுவத்தை குவிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்திய ராணுவ வீரர்களின் பயிற்சியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேச எல்லையில் விமான எதிர்ப்புப் பீரங்கிகளை அதிகளவில் நிறுத்தத் தொடங்கி இருக்கிறது இந்தியா. “அருணா சலப்பிரதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உயர் மலைப் பகுதிகளில் இந்த தரம் உயர்த்தப்பட்ட எல்.70 போர் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணை, எதிரிநாட்டு ஆளில்லா கண்காணிப்பு மற்றும் போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள், நவீன போர் விமானங்களையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை” என்று இந்திய ராணுவ விமானப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி சர்யா அப்பாசி சொல்லி இருக்கிறார். இதனை வைத்துப் பார்க்கும் போது மீண்டும் ஒரு போர்ச் சூழலை சீனா உருவாக்கி இருப்பதை உணர முடிகிறது.

1962 ஆம் ஆண்டு முதல் இது தொடர் பதற்றமாக மாறிக் கொண்டு இருக்கிறது. எல்லைப் பகுதியில் கட்டுமானப் பணிகளை நடத்துவதை சீனா எப்போதும் நிறுத்தவில்லை. சாலைகளை அமைப்பதை ஒரு வேலையாக வைத்திருக்கிறது. பாலங்கள், விமான ஓடுபாதைகளையும் அமைத்து வருகிறது சீனா. என்னென்ன அமைத்துள்ளது என்ற தகவல்கள் ராணுவ ரகசியங்கள் ஆகும். ஆனால் அவை ஒட்டுமொத்த தேசத்துக்கே அச்சுறுத்தலான விஷயங்களும் ஆகும்.

‘மோடி ஆட்சிக்கு வந்துவிட்டார், அதனால் சீனா அமைதியாகி விட்டது’ என்றெல்லாம் பெருமை பீற்றிக் கொள்ள முடியாது. ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருக்கின்றன. எல்லையோரக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சீன ராணுவம், தனது கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் நடந்த சூழலில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நடக்கத் தொடங்கி இருக்கும் பின்னணியை ஆராய வேண்டும்.

சீனாவுக்கும் பூடானுக்குமான ஒப்பந்தத்தின் பின்னணி வனிக்கப்பட வேண்டும். இலங்கை என்ற நாட்டையே சீனா முழுமையாக தனது பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்திருப்பதையும் உன்னிப்பாகக் கவனித்தாக வேண்டும். இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு இந்தியா, ரத்தினக் கம்பளம் கொடுத்து வரவேற்பதை நிறுத்தியாக வேண்டும். இரண்டு பக்கமும் நல்ல பிள்ளையாக நடித்துக் கொண்டு இருக்கிறது இலங்கை. அவர்களுக்கு எப்போதுமே சீனாவே நட்பு நாடு.

சீன அதிபரை, மாமல்லபுரத்துக்கு அழைத்துவந்த போது நடத்திய பேச்சு வார்த்தைகள் என்ன ஆயின? அது புரிந்துணர்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைதானா? இப்படி மாதம் தோறும் எல்லைப் பிரச்சினைகளை உருவாக்குவார்கள் என்றால், அதிபர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளால் என்ன பயன்?

இந்தியாவைச் சுற்றிலும் எதிரிகளை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது! இந்தியாவைவிட பெரிய நாடாக, பொருளாதார வளம் கொண்டதாக இருக்கலாம். அதற்காக அவர்கள் செய்வது அனைத்தும் சரியாகி விடாது. கொரோனாவுக்குப் பிந்தைய சொந்த நாட்டுச் சரிவுகளைச் சரிசெய்ய இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் சீனாவால் நடத்தப்படுமானால், அதற்கும் பாடம் கற்பிக்கும் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது. 1980களில் இருந்த இரண்டு வல்லரசுகளில் ஒன்று 1990 இல் முடிவுக்கு வந்தது. இன்னொரு நாடு தன்னை வல்லரசாக இப்போது சொல்லிக் கொள்வது இல்லை. அப்படி ஒரு நாற்காலி இனி உருவாக முடியாது. எனவே இல்லாத நாற்காலிக்காக இன்னொரு நாடு போட்டியிடத் தேவையில்லை!

banner

Related Stories

Related Stories