அரசியல்

“கல்வித்துறையை காவி மயமாக்குகிறது மோடி அரசு” - பல்கலை.,-ல் பாஜக நிர்வாகி நியமனத்துக்கு திமுக MLA கண்டனம்!

ஒரு அரசியல் கட்சியில் உள்ளவரை, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும்.

“கல்வித்துறையை காவி மயமாக்குகிறது மோடி அரசு” - பல்கலை.,-ல் பாஜக நிர்வாகி நியமனத்துக்கு திமுக MLA கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் பி.கனகசபாபதியை நியமித்த உத்தரவை தமிழக ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 05.09.2020 அன்று , கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் “மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களால் , பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பி.கனகசபாபதி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், மூன்று வருடங்களுக்கு இந்த பணியில் தொடர்வார் ” என்றும் கூறப்பட்டுள்ளது

தமிழக ஆளுநர் , பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பி.கனகசபாபதி, பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆவார். பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களாக கட்சி சார்பற்ற , கல்வியில் சிறந்தவர்களை நியமிப்பதுதான் மரபு.

“கல்வித்துறையை காவி மயமாக்குகிறது மோடி அரசு” - பல்கலை.,-ல் பாஜக நிர்வாகி நியமனத்துக்கு திமுக MLA கண்டனம்!

ஆனால் தற்பொழுது பாரதீய ஜனதா கட்சியில் பதவியில் உள்ள துணைத் தலைவர் ஒருவரை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்வதை பார்க்கும் பொழுது, தமிழகத்தில் உயர்கல்வியில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்து , உயர் கல்வியை காவி மயமாக்கும் முயற்சிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக உள்ளது.

ஒரு அரசியல் கட்சியில் உள்ளவரை, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும். ஒரு அரசியல் கட்சியின் சித்தாத்தங்களை, கல்வித்துறையில் பரப்புவதற்கு மேடை அமைத்துக் கொடுக்க, முயற்சி செய்வது போல உள்ளது.

ஜனநாயக மாண்புகளை மதிக்கக்கூடியவர்கள், விரும்பக்கூடியவர்கள் வருங்கால இந்தியா நல்லதொரு மதச்சார்பற்ற பன்மைத்தன்மையை அங்கீகரிக்கும் இளைஞர்களை உருவாக்கக் கூடிய கல்வியைத்தான் எதிர்நோக்குவார்கள். ஆனால் , தற்பொழுது தமிழக கல்வித் துறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, அப்படிப்பட்ட கல்விக்கான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரியவில்லை

கல்வித் துறையை காவி மயமாக்குவதற்கு வலுச்சேர்க்கும் விதமாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் மத்திய பாஜக அரசு செய்திருக்கும் அத்துமீறலை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்

“கல்வித்துறையை காவி மயமாக்குகிறது மோடி அரசு” - பல்கலை.,-ல் பாஜக நிர்வாகி நியமனத்துக்கு திமுக MLA கண்டனம்!

தமிழகத்தில் உயர் கல்வித்துறை சம்பந்தப்பட்ட நியமனங்களில் தொடர்ந்து மயான அமைதி காத்துவரும் , இந்த செயலற்ற அதிமுக அரசு , மத்திய பி.ஜே.பி. அரசுக்கு அடிபணிந்து , மாநில அரசுக்கு உள்ள உரிமையை, அதிகாரத்தைப் பறிகொடுத்து, கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சிக்கு அனுமதிக்கக் கூடாது

ஆளும் அதிமுக அரசு சுதந்திரமாக, சுயேச்சையாகச் செயல்பட முடியாத, பலவீனமான ஓர் அரசாங்கமாக இருக்கிறது. இதன் காரணமாக, மத்திய அரசு தன் விருப்பங்களை எல்லாம் ஆளுநர் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கு பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பி.கனகசபாபதி மேலும் ஓர் உதாரணம்.

இதுபோன்ற நபர்களை நியமிக்கிற செயல்களை அனுமதிப்பதன் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் இதுவரை கட்டிக்காத்த மாநில உரிமைகளை, மத்திய அரசிடம் அடகு வைக்கிற அவல நிலைக்கு தள்ளியுள்ளார். ஆகவே, கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக கனகசபாபதியை நியமித்த உத்தரவை மறு பரிசீலனை செய்து , மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories