தமிழ்நாடு

“குடிநீர் விநியோகிக்கும் வேலையைக் கூட செய்யாத கையாலாகாத அரசாக உள்ளது அதிமுக” - கோவை தி.மு.க MLA விமர்சனம்

சூயஸ் ஒப்பந்த பணிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

“குடிநீர் விநியோகிக்கும் வேலையைக் கூட செய்யாத கையாலாகாத அரசாக உள்ளது அதிமுக” - கோவை தி.மு.க MLA விமர்சனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”கோவை மாநகராட்சி நிர்வாகம், வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு, 26 ஆண்டுகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு போட்ட மக்கள் விரோத குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவை மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு , கடந்த 2018 ம் ஆண்டு , 26 ஆண்டுகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு பல்வேறு விமர்சனங்களுக்கு, குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு தான்தோன்றித்தனமாக வழங்கியிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான உடன் கடந்த 25.06.2018 அன்று மாண்புமிகு கழக தலைவர் அவர்கள் 26 ஆண்டு காலம் தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து , தமிழக அரசையும் , மாநகராட்சி நிர்வாகத்தையும் வன்மையாகக் கண்டித்தார்.

கோவையில் இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்த வண்ணம் இருந்தனர். அது மட்டுமின்றி கோவையில், தி மு க மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பிலும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த 06.07.2018 ,19.06.2019, 27.08.19 , 10-10-2019, 28-11-2019 ஆகிய தேதிகளில், பல கட்ட அறவழிப் போராட்டங்கள் நடத்தப் பட்டது. ஆனாலும் கோவை மாநகராட்சி நிர்வாகம், மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி விட்டு, தொடர்ந்து இத்திட்டத்தை செயல் படுத்திவருகிறது.

“குடிநீர் விநியோகிக்கும் வேலையைக் கூட செய்யாத கையாலாகாத அரசாக உள்ளது அதிமுக” - கோவை தி.மு.க MLA விமர்சனம்

இந்த ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் , இன்னும் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே உள்ளது. கோவை மாநகரில் உள்ள பல சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் பல சாலைகள் குண்டும் – குழியுமாக, போக்குவரத்திற்கு பயனற்ற சாலைகளாக மாறி விட்டது. பல இடங்களில் இந்த குழிகள் மரணக் குழிகளாக காட்சி அளிக்கிறது.

பல இடங்களில் குழாய்கள் பதிக்க , குழிகள் தோண்டும்போது, தற்பொழுது இருக்கும் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு , குடிநீர் விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். உடைந்த குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் மாதக்கணக்கில் நடையாக நடக்க வேண்டியுள்ளது.

மேலும் கோவை மாநகருக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து , உடைந்து, கசிவுகள் ஏற்பட்டு பெருமளவில் குடிநீர் வீணாகி சாலைகளில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் பழுது சரி செய்யப்படுவதில்லை. தற்பொழுது குடிநீர் விநியோக பணிகளை நிர்வகித்து வரும் இந்த சூயஸ் நிறுவன பணியாளர்கள் முறையான குடிநீர் விநியோகம் மற்றும் உடைப்பு ஏற்படும் குடிநீர் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யாமல் பெரும் குளறுபடி செய்து வருகின்றனர்.

இந்த சூயஸ் நிறுவன பணியாளர்களின் நிர்வாக குளறுபடிகளால், மாநகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியான முறையில் செய்யாமல் இருப்பதால் குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் தவித்து வருகிறார்கள்.

மக்களின் வரிப் பணத்தில் , மக்களின் எதிர்ப்பையும் மீறி , ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு மக்கள் விரோத ஒப்பந்தம் போட்டும், அத்தனையும் தற்போது “விழலுக்கு இறைத்த நீராகவே” உள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த ஒரு உபயோகமும் , முன்னேற்றமும் இல்லை. இது கோவையில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் செய்யும் மிகப் பெரிய துரோகம். மக்களின் வரிப்பணத்தில், அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதனால் மக்களுக்கு பயன் கிடைக்க வேண்டுமே தவிர இடையூறும், பின்னடைவும் ஏற்படக் கூடாது.

குடிமக்களுக்கு அரசு செய்து தர வேண்டிய அடிப்படை தேவைகளில் ஒன்று குடிநீர். அந்த குடிநீரை விநியோகிக்கும் வேலையைக் கூட செய்யமுடியாத கையாலாகாத அரசாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உள்ளாட்சித் துறையும் , எடப்பாடி பழனிசாமி அரசும் மாறியிருக்கிறது.

ஆகவே கோவை மாநகராட்சி நிர்வாகம், வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு 26 ஆண்டுகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு போட்ட மக்கள் விரோத ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் , சூயஸ் ஒப்பந்த பணிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இல்லை என்றால் , சமூக இடைவெளியோடு , சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, மக்களோடு இணைந்து , மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories