அரசியல்

’சிறுபான்மையினருக்கு மிரட்டல் விடுக்கும் ராஜேந்திர பாலாஜி ஆர்.எஸ்.எஸ் அடிவருடியா?’ - டி.கே.எஸ் காட்டம்

சிறுபான்மையினரை தரக்குறைவாகப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என விமர்சித்துள்ளார் டி.கே.எஸ்.இளங்கோவன்.

’சிறுபான்மையினருக்கு மிரட்டல் விடுக்கும் ராஜேந்திர பாலாஜி ஆர்.எஸ்.எஸ் அடிவருடியா?’ - டி.கே.எஸ் காட்டம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிறுபான்மையினரை பழித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அமைச்சர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனக் குறிப்பிட்டு தி.மு.க செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் வாக்குச் சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியத் தோழர், ஜமாத்தை சேர்ந்த சிலரை அழைத்துக் கொண்டு கோரிக்கை மனு வழங்கினார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அந்த இஸ்லாமிய மக்களிடம் "உங்களுக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும்? நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்கள்; அதைப்போல, கிறித்தவர்களும் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஜமாத்தினர் மற்றும் பாதிரியார்கள் எங்களுக்கு வாக்களிக்க கூடாது என்று சொல்லியிருப்பார்கள். உங்களிடம் நான் மனு வாங்க மாட்டேன். உங்களையெல்லாம் காஷ்மீரில் செய்ததைப் போல ஒதுக்கி வைக்க வேண்டும்" என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கடுமையாகப் பேசியுள்ளார்.

இதுபோல, அநாகரீகமாக - அருவருக்கத்தக்க வகையில், சிறுபான்மையினரைப் பற்றி பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவாகிறார்.

’சிறுபான்மையினருக்கு மிரட்டல் விடுக்கும் ராஜேந்திர பாலாஜி ஆர்.எஸ்.எஸ் அடிவருடியா?’ - டி.கே.எஸ் காட்டம்

அமைச்சர் என்ற முறையில் ராஜேந்திரபாலாஜி, அரசுப் பணத்தில் சம்பளம் பெறுகிறார்; பயணப்படி பெறுகிறார்; வாகன வசதி, வீட்டு வசதி ஆகியவற்றை அனுபவித்து வருகிறார். இவையெல்லாம் அரசுப் பணத்திலிருந்து வழங்கப்படுகிறது. அரசுக்கு வருவாய் வரிமூலம் கிடைக்கிறது. அந்த வரியை அனைத்துத் தரப்பு மக்களுடன் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் செலுத்துகிறார்கள். அப்படி சிறுபான்மையின சமூகத்தினர் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து சலுகைகளையும் - சம்பளத்தையும் பெற்று அனுபவிக்கும் ராஜேந்திரபாலாஜி, சிறுபான்மை மக்களைப் பற்றி கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

சிறுபான்மை மக்களைப் பற்றி இப்படி பேசிய அவர் உடனடியாக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவர், அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளார். எனவே, இவர் அமைச்சர் வகிக்க தகுதியற்றவராகிறார்.

மேலும், சிறுபான்மையினரை மிரட்டும் தொனியில் அவர் பேசியிருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடியாக அவர் நடந்து கொள்வதையே காட்டுகிறது.

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து இஸ்லாமியர் போராட்டம்
ராஜேந்திர பாலாஜியை கண்டித்து இஸ்லாமியர் போராட்டம்

தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து மத மக்களும் நட்புடனும் - நல்லுறவுடனும் - சகோதரத்துவத்துடனும் பழகி வருகிறார்கள். ராஜேந்திரபாலாஜி போன்ற தகுதியற்றவர்கள், பதவிகளைப் பெறும்போது, இதுபோன்று சில்லறைத்தனமாகப் பேசி இந்த ஒற்றுமையை குலைக்க முயற்சிப்பது இழிவான செயலாகும்.

ராஜேந்திரபாலாஜியின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.” என அறிக்கையில் தெரிவித்துள்ளார் டி.கே.எஸ்.இளங்கோவன்.

banner

Related Stories

Related Stories