தமிழ்நாடு

ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடிட 2,22,91,710 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடக்கம்.

ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,22,91,710 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகள், 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

”தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/- வழங்கப்படும்” எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.

மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில், 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகள் மற்றும் 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் மூலம் மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.

ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

அதன்படி, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.1.2026) சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார்.

முன்னதாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பரிசு மற்றும் வேட்டி - சேலைகள் ஆகியவை மொத்தம் 7604 கோடியே 29 இலட்சத்து 47 ஆயிரத்து 959 ரூபாய் செலவில் வழங்கப்படுகிறது.

இப்பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் இன்று (8.1.2026) முதல் 12.1.2026 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தினை தொடங்கி வைக்கின்றார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories