
பத்து லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுக்கத் தொடங்கி இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தினந்தோறும் பேட்டி என்ற பெயரால் உளறல்களைச் செய்து கொண்டு இருக்கிறார் பழனிசாமி.
•நாங்கள் 52 லட்சம் மடிக்கணினி கொடுத்தோம்.
•நாங்கள் தான் அந்த திட்டத்தைத் தொடங்கினோம்.
•தேர்தலுக்காக கொடுக்கிறார்கள் – என்றெல்லாம் வாய்க்கு வந்ததைச் சொல்லி இருக்கிறார்.
தனது ஆட்சி காலத்தில் 2019 ஆம் ஆண்டே மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டவர்தான் பழனிசாமி. 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்தவர்தான் பழனிசாமி. அப்போதெல்லாம் அவர் மடிக்கணினியை ஏன் தரவில்லை?
55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சியில் 68 கோடி ரூபாயில் வாங்கிய 55 ஆயிரம் மடிக்கணினிகள் வீணடிக்கப்பட்டதை CAG என்ற இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனைச் சுட்டிக் காட்டி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை கொடுத்த பிறகும் பழனிசாமி தனது நாவை அடக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த மடிக்கணினி முறைகேட்டை அம்பலப்படுத்தியது CAG அறிக்கை. இந்த அறிக்கையானது 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2017–2018–ஆம் ஆண்டு போட்டித் தேர்வுக்குத் தயாரான 12–ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க எல்காட் நிறுவனம் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

அதில், 8 ஆயிரத்து 79 மடிக்கணினிகள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 55 ஆயிரம் மடிக்கணினிகளைத் தரவில்லை. அப்படியே குப்பையில் போட்டு விட்டார்கள். இதனால், 68 கோடியே 71 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
CAG அறிக்கையில் 53–ஆம் பக்கத்தில் மடிக்கணினிகளின் தேவை, கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2017 – 2018 முதல் 2020 – 2021 வரை 11 மற்றும் 12–ம் வகுப்பில் 18.60 லட்சம் தகுதியான மாணவர்கள் இருந்தார்கள். ஆனால், இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளின் எண்ணிக்கை 14.83 லட்சம் மட்டுமே. 3.77 லட்சம் மாணவர்களுக்கு வழங்கவில்லை. 20 சதவிகித மாணவர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தார்கள்.
2017–2018 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை மடிக்கணினிகளைப் பெறவில்லை. பழனிசாமி தரவில்லை. இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பேட்டி தருகிறார் பழனிசாமி.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்திட்டத்தை முடக்கியவரே பழனிசாமிதான். இப்போது, ‘தேர்தலுக்காக தி.மு.க. அரசு கொடுக்கிறது’ என்கிறார்.
‘‘நிதி நிலைமை சரியானதும், மடிக்கணினி திட்டம் தொடங்கப்படும்’’ என்று தி.மு.க. அரசு தொடர்ந்து சொல்லி வந்தது. ‘‘மடிக்கணினி திட்டத்தை முடக்கவில்லை, அது தொடரப் போகும் திட்டம் தான்’’ என்பதை அமைச்சர்கள் சொல்லியே வந்தார்கள். இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்று தி.மு.க. வெளியிட்ட வாக்குறுதியில் இருக்கிறது.
‘‘தமிழ்நாட்டில் மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இணையத் தள வசதியுடன் கூடிய மடிக்கணினிகள் அரசு செலவில் வழங்கப்படும்”என்று சொல்லப்பட்டு உள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட திட்டத்தைத்தான் கழக அரசு இப்போது நிறைவேற்றுகிறது.
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதே, ‘‘20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்’’ என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதற்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்றன.
அண்ணா பல்கலைக்கழகம், தேசிய தகவல் மையம் (National Informa tics Centre), ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவைக் கொண்டு, லேப்டாப் உற்பத்தி நிறுவனங்களிடம் மூன்று முறை கலந்தாய்வு கூட்டமும் 7 முறைக்கு மேல் வல்லுநர் குழுக் கூட்டமும் நடத்தி மாணவர்களுக்கு Artificial Intelligence (AI) பயன்பாட்டிற்கு உகந்த வகையில் லேப்டாப் இருக்க வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டு Technical Specifications முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவர்கள் தயாரித்து வழங்கத் தொடங்கியதும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கு கொடுக்கத் தொடங்கினார்கள்.
மடிக்கணினி கொடுக்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துக் கொண்ட பழனிசாமி, ‘‘தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இப்போது ஏன் மடிக்கணினி கொடுக்கிறீர்கள்?’’ என்றும் சில வாரங்களுக்கு முன்பு கேட்டார். ஏன் கொடுக்கிறீர்கள் என்று கெட்ட எண்ணத்தோடு கேட்டவர்தான் பழனிசாமி.
அதற்கு அப்போதே துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள்.‘‘தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேறி விடக் கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை அவர்களின் வழிகாட்டுதல்படி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
கல்லூரி மாணவர்களுக்கு எப்படியாவது மடிக்கணினி கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மை கூட இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதனை எப்படியாவது சீர்குலைத்து விட முடியாதா என்று முயற்சிக்கிறார்”என்று மண்டையில் கொட்டிச் சொன்னார். அப்படியும் பழனிசாமிக்கு உறைக்கவில்லை என்பதையே அவரது தினப்படி உளறல்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை தமிழ்நாடு அறியும்.








