தமிழ்நாடு

தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!

வடசென்னை மக்களின் வசதிக்காக மிகக் குறைந்த வாடகையுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய ‘முதல்வர் திருமண மாளிகைகள்’ அமைக்கப்பட்டு வருகின்றன என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலகொத்தளம் பகுதியில் 14.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை திறந்து வைத்து 10 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து ஆற்றிய உரை

இன்றைக்கு சி.எம்.டி.ஏ (CMDA) சார்பாக, 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையைத் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இத்துடன் இன்று 10 இணையர்களுக்கு இந்தப் புதிய திருமண மண்டபத்தில், திருமணங்களை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

15 நாட்களுக்கு முன்பு துறைமுகம் தொகுதியில் இதைப் போல முதல்வர் பெயரில் ஒரு திருமண மண்டபத்தைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பை அண்ணன் சேகர்பாபு அவர்கள் கொடுத்தார்கள். அந்த வகையில், இன்றைக்கு இரண்டாவது வாய்ப்பு, முதல்வர் பெயரில் இரண்டாவது திருமண மண்டபத்தை, இந்த ராயபுரம் மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்துள்ளேன்.

இப்படி அண்ணன் சேகர்பாபு அவர்கள் வட சென்னைப் பகுதியில் அடுத்தடுத்து திருமண மண்டபங்களைக் கட்டிக்கொண்டே போகின்றார். அதுமட்டுமல்ல, ஆயிரக்கணக்கான இணையர்களுக்குத் திருமணத்தையும் அண்ணன் அவர்கள் நடத்தி வைத்துள்ளார். இப்படித் தொடர்ந்து திருமணங்கள் நடத்தி வைப்பதால்தான், எனக்குப் பலமுறை சந்தேகம் வருவதுண்டு, அண்ணன் அறநிலையத்துறை அமைச்சரா? இல்லை அன்பு நிலையத் துறையின் அமைச்சரா? என்று கேட்கின்ற அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றார். அதை மீண்டும் நிரூபிக்கின்ற வகையில், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியையும் இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு என் நன்றியையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மணமக்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்கள் சார்பாக, தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமய அறநிலையத் துறையும், நம்முடைய வடசென்னை வளர்ச்சியும் அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு இரண்டு கண்கள் போன்றவை. அதனால்தான் இதுவரைக்கும் எந்த ஆட்சியிலும் செய்யாத சாதனைகளை நம் ஐந்து வருட திராவிட மாடல் ஆட்சியில் அண்ணன் சேகர்பாபு அவர்கள் அறநிலையத் துறையின் சார்பாக செய்துள்ளார்.

சுமார் 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல வடசென்னையின் வளர்ச்சிக்காக இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்று, நான் வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக, நிறைவுபெற்ற பல்வேறு திட்டங்களைத் திறந்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த முதல்வர் திருமண மண்டபத்தையும் திறந்து வைத்துள்ளேன்.

தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!

இப்படி மிகச் சிறப்பாகச் செயல்படுவதால்தான், நம் தலைவர், முதலமைச்சர் அவர்கள் அண்ணன் சேகர்பாபு அவர்களை செயல் பாபு என்று எப்போதுமே பாராட்டுவார்.

இப்போது இருக்கின்ற நிலைமையில் ஒரேயொரு திருமணத்தை நாம் நடத்தி வைத்தால்கூட நம் குடும்பத்தின் சேமிப்பு அனைத்தும் செலவாகிவிடும். அந்த அளவுக்குத் திருமணம் என்பது இன்றைக்கு ஒரு செலவுக்குரிய விஷயமாக மாறிவிட்டது. இந்தச் சூழலில் இன்றைக்கு வடசென்னை மக்களின் வசதிக்காக மிகக் குறைந்த வாடகையில், மிக அதிகமான, அனைத்து வசதிகளையும் கொண்ட இந்தத் திருமண மண்டபங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்களும், அண்ணன் சேகர்பாபு அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். எப்போதுமே திருமணத்தைச் சிக்கனமாக நடத்த வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. அந்த வகையில், இங்கு சிக்கனமான முறையில் திருமணம் செய்து, இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்ற இணையர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மண்டபத்துக்கு வந்திருக்கக்கூடிய இணையர்களாக இருக்கட்டும், அவர்களுடைய உற்றார் உறவினர்களாக இருக்கட்டும், நீங்கள் அத்தனை பேரும் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்திருக்கிறீர்கள். குறிப்பாக, மகளிர் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள். ஏனெனில், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த நான்கு வருடமும் 10 மாதங்களும் மகளிருக்கான அரசாக, நம் அரசு செயல்பட்டிருக்கிறது. நம் முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று, அவர் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். இப்படிப் பல்வேறு திட்டங்கள்.

குழந்தைகள் படிக்க வேண்டும் என்று முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். மாணவர்கள் பள்ளிக்கூட படிப்புடன் நிறுத்துவது போதாது, உயர்கல்வி படிக்க வேண்டும், கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம். இப்போது சமீபத்தில் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக மடிக்கணினியையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் இன்றைக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து மூன்று வருடங்களாகக் கொடுத்து வருகிறார்.

இந்த பிப்ரவரி மாதம் உங்களுக்குத் தெரியும், பிப்ரவரி 13-ம் தேதி காலையில் 7 மணிக்கு அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் 5,000 ரூபாய் சேர்ந்துவிட்டது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை, மிகப்பெரிய ஒரு வியப்பு. மகளிருக்கு வியப்பு, எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சி. முதலமைச்சர் அதற்குப் பிறகு தொலைக்காட்சியில் தோன்றிச் சொல்லிவிட்டார், எதற்காகக் கொடுத்திருக்கிறேன் என்று.

ஒன்றிய அரசு பா.ஜ.க, தேர்தலைக் காரணம்காட்டி எப்படியாவது இந்த மகளிர் உரிமைத் தொகையை மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கிறார்கள். நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள். மகாராஷ்டிராவில் இதுபோல தடுத்துவிட்டார்கள். ஆனால், அதையெல்லாம் நான் முறியடிக்கிறேன். நான் 1,000 ரூபாய் தரக்கூடாது என்று சொன்னால், என் மகளிருக்கு நான் 5,000 ரூபாய் கொடுக்கிறேன் என்று ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை 1,000, கோடை சிறப்புத் தொகையாக 2,000 என மொத்தம் 5,000. அதுமட்டுமல்ல, இன்னொரு இனிப்பான வாக்குறுதி என்னவென்றால், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து உயர்த்தி 2,000 ரூபாயாக நான் கொடுப்பேன்’ என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துவிட்டார்.

முதலமைச்சர் கணக்கில் வரவு வைத்தது காலை 7 மணிக்கு, ஆனால் நம்முடைய மகளிரெல்லாம் 9 மணிக்கே வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் மேல் நம்முடைய மகளிருக்கு அவ்வளவு நம்பிக்கையின்மை. ஏதாவது ஒரு காரணம்காட்டி வங்கியில் இருக்கக்கூடிய பணத்தையும் எடுக்கவிடாமல் செய்துவிடுவார்களோ என்று அந்த அளவுக்கு அச்சம்.

இப்படி ஒரு சிறப்பான ஆட்சி, இதுபோல பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் இன்றைக்குத் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக 11.19 சதவிகித வளர்ச்சியோடு ஒரு சிறந்த மாநிலமாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த அரசு தொடர வேண்டுமென்றால், இங்கு வந்திருக்கக்கூடிய நீங்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஆட்சியில் அமர்த்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இங்கு திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இணையர்களுக்கு நான் அதிகம் அறிவுரை கூற விரும்பவில்லை. சில பேர் காதல் திருமணம் செய்துள்ளதாகச் சொன்னார்கள். மணப்பெண்ணின் பெயர் கீர்த்தனா, மணமகனின் பெயர் வசந்த்ராஜ். மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார்கள். காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்று கேட்டேன். "காதல் திருமணம்தான், இப்போது நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறிவிட்டது’’ என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.

இதே மகிழ்ச்சியோடு இன்றைக்குத் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள், அடுத்து உங்கள் வாழ்க்கை முழுவதும் ஒன்றாக இணைந்து நல்ல நண்பர்களாக, எதற்கெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டுமோ அதற்கெல்லாம் விட்டுக்கொடுத்து, எதற்கெல்லாம் உரிமையைக் காப்பாற்ற வேண்டுமோ அதற்கெல்லாம் உரிமையைக் காப்பாற்றி, நீங்கள் அனைவரும் சிறந்த தம்பதிகளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள், உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தை, அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு அழகான தமிழ்ப் பெயரை நீங்கள் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்தச் சிறப்பான வாய்ப்பை அளித்த அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்து, மணமக்கள் அனைவருக்கும் உங்கள் அனைவரின் சார்பாக மீண்டும்,  மீண்டும் என் வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories