உணர்வோசை

கறுப்பு - சிவப்பு நிறங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் என்ன? : கறுப்பு வெறும் நிறம் மட்டுமா..?

தமிழணங்கின் நிறமாக கறுப்பு இருப்பதும் அதை பார்ப்பனீய பிரதிநிதிகள் எதிர்ப்பதும் விமர்சிப்பதும் முதலைக்கண்ணீர் வடிப்பதும் முகநூலில் கடந்த சில நாட்களின் ‘ட்ரெண்டாக’ இருக்கிறது.

கறுப்பு - சிவப்பு நிறங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் என்ன? : கறுப்பு வெறும் நிறம் மட்டுமா..?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இந்திய ஒன்றியத்தின் அரசியல் விவாதங்கள் பெரும்பாலான நேரங்களில் வடக்கு - தெற்கு, கறுப்பு- சிவப்பு, சைவம் - அசைவம் போன்ற பண்பாட்டு இருமை விவாதங்களாகத்தான் நடைபெறுகிறது. சமீபத்திய விவாதம் கறுப்பு - சிவப்பு!

இந்திய நிலப்பரப்பின் அரசியல் வரலாறு ஒரே ஒரு முக்கியமான அடிப்படையை விவாதிப்பதாகவே வளர்ந்து வந்திருக்கிறது. பார்ப்பனீயம்!

வட இந்தியாவில் பார்ப்பனீய அல்லது ஆரியக் கலப்பு அதிகம் என்கின்றனர் மானுடவியலாளர்கள். மொழிகளிலும் ஆரிய மொழிக் குடும்பத்தின் கலப்பு மிகக் குறைவாக நடந்திருப்பது தமிழில் மட்டும்தான். சமீபத்தில் வெளியான ஒரு இந்திய வரைபடத்தில் பிரதிபலிக்கப்பட்டக் கணக்கெடுப்பின்படி தெற்கே இறங்க இறங்க அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே அடிப்படையில் பார்ப்பனீய எதிர்ப்பு மற்றும் பார்ப்பனீயக் கலப்பு ஆகியவையே இந்திய அரசியல் வரலாற்றை தீர்மானிக்கும் கண்ணியாக இருந்து வந்திருக்கிறது.

தமிழணங்கு ஓவியம் என வெளியான படத்தில் தமிழணங்கின் நிறமாக கறுப்பு இருப்பதும் அதை பார்ப்பனீய பிரதிநிதிகள் எதிர்ப்பதும் விமர்சிப்பதும் முதலைக்கண்ணீர் வடிப்பதும் முகநூலில் கடந்த சில நாட்களின் ‘ட்ரெண்டாக’ இருக்கிறது. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மொழியே இணைப்பு மொழி எனப் பேசியதும் சமூகதள சர்ச்சைகளில் அடக்கம்.

கறுப்பு - சிவப்பு நிறங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் என்ன?

உங்களின் சகோதரரை நீங்கள் என்னவென சொல்வீர்கள்? ‘சகோதரர்’ என சொல்லலாம். ‘தம்பி’ அல்லது ‘அண்ணன்’ என சொல்லலாம். ஆங்கிலத்தில் ‘சகோதரனை’ எப்படிச் சொல்கிறார்கள். 'Brother'. அதாவது ‘பிரதர்’. கிரேக்க மொழியில் சகோதரனுக்கு என்ன வார்த்தை தெரியுமா? ‘ஃப்ரேடெர்’. லத்தீன் மொழியில்? சுவாரஸ்யம் என்னவென்றால் லத்தீனும் சமஸ்கிருதமும் கிட்டத்தட்ட ஒரே வார்த்தையைத்தான் ‘சகோதர’னுக்குக் கொண்டிருக்கிறது. ‘ப்ரேதர்’ என லத்தீனிலும் ‘ப்ரதா’ அல்லது ‘ப்ராதா’ என சமஸ்கிருதத்திலும் அந்த வார்த்தைக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆங்கிலம் தொடங்கி, லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் தன்மை ‘சகோதரன்’ என்கிற வார்த்தையில் மட்டுமின்றி, பல விஷயங்களில் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் மொழிகள் எனக் குறிப்பிடுகிறோம். எனவே சமஸ்கிருதம் என்பது ஐரோப்பிய மொழிகளின் தன்மையை உடையதாக இருக்கிறது.

2015ஆம் ஆண்டு வெளியான ஓர் அறிவியல் ஆய்வின்படி இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் மூதாதையர் மேய்ச்சல் பழங்குடியினராக இருந்திருக்கின்றனர். கருங்கடலின் வடக்கே இருக்கும் ஸ்டெப்பி புல்வெளிப் பரப்பில் வாழ்ந்தவர்கள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஆரம்ப வடிவத்தை பேசியவர்கள். அதாவது 6,000 வருடங்களுக்கு முன்பு.

நவீன மனிதர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி 40,000 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவை அடைந்தனர். அவர்கள் கறுப்பு நிறத்தில் இருந்திருக்கிறார்கள். காரணம், சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் கறுப்புத் தோல்தான் அவர்களுக்கு ஆரோக்கியம். 8500 ஆண்டுகளுக்கு முன் வரை ஸ்பெயின், ஹங்கேரி உள்ளிட்ட இடங்களில் கூட கறுப்புத் தோல்தான் பரவலாக இருந்தது. SLC24A5 மற்றும் SLC45A2 என்ற இரு மரபணுக்கள் அவர்களிடம் இருக்கவில்லை. கரிய நிறத்தை குறைத்து வெளுப்படையச் செய்யும் மரபணுக்கள் அவை.

கறுப்பு - சிவப்பு நிறங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் என்ன? : கறுப்பு வெறும் நிறம் மட்டுமா..?

7,700 வருடங்களுக்கு முன் வட துருவப் பக்கத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நேர்ந்திருப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர் ஆய்வாளர்கள். கரிய நிறத்தைக் குறைக்கும் இரு மரபணுக்கள் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. தெற்கு ஸ்வீடனின் மொதாலா என்னும் அகழ்வாய்வு தளத்தில் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே இன்னொரு புதிய மரபணுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நீல நிறக் கண்கள் மற்றும் பொன்னிற முடி ஆகியவற்றுக்கான மரபணு.

வடதுருவவாசிகளுக்கும் யம்னயாவாசிகளுக்கும் இடையே கலப்பு 4,800 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் நேர்கிறது. கரிய நிறத்தை விடுத்து வெளிறியத் தோல்கள் மரபணுத் தேர்வாக மத்திய ஐரோப்பியாவில் மாறியதற்கான அடிப்படைக் காரணமாக ஆய்வாளர்கள் சொல்வது ஒரு விஷயத்தைதான். வடக்குப் பக்கம் இருந்தவர்கள் தோலிலிருந்த வைட்டமின் டி-யை ஒருங்கிணைப்பதற்கான சூரிய வெளிச்சத்தை உட்கொள்ள முடியவில்லை. விளைவாக சூரிய வெளிச்சத்தை உட்கொள்ளும் வகையில் தோல் வெளிறும் மாற்றம் நேர்ந்திருக்கிறது. இந்த மாற்றத்தில் விளைந்தவர்கள்தாம் பிற்காலத்தில் இந்திய நிலப்பரப்புக்குள் நுழைந்த ஆரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

அடிப்படையில் கறுப்புத் தோலை எதிர்ப்பவர்கள் இந்திய நிலப்பரப்புக்கு அந்நியமானவர்களே. அவர்கள் ஐரோப்பியர்களாகவும் இருக்கலாம். ஆரியர்களாகவும் இருக்கலாம். இரு தரப்புமே காலனியாதிக்கம், பார்ப்பனீயம், வெள்ளை ஆதிக்கம் எனப் பல வகைகளில் ஆதிக்கத்தை செலுத்துவதில் ஒற்றுமை கொண்டிருப்பதற்குப் பின்னும் கூட இத்தகைய மரபணுத் தொடர்பின் படிமங்கள் இருக்கலாம், யார் கண்டார்?

கறுப்பு என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வெறும் நிறம் மட்டுமல்ல, ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான பேராயுதம்!

banner

Related Stories

Related Stories