உணர்வோசை

“அவருக்கு பல எதிரிகள்.. தனிப்பட்ட எதிரி என ஒருவரும் இல்லை”:கார்ல் மார்க்ஸ் இறுதிச்சடங்கில் ஏங்கெல்ஸ் உரை!

மார்க்ஸைப் பொறுத்தவரை, அறிவியல் என்பது படைப்பதற்கான வரலாற்று மற்றும் புரட்சிகர சக்தி. தத்துவார்த்த அறிவியல் துறையின் புதிய கண்டுபிடிப்பில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

“அவருக்கு பல எதிரிகள்.. தனிப்பட்ட எதிரி என ஒருவரும் இல்லை”:கார்ல் மார்க்ஸ் இறுதிச்சடங்கில் ஏங்கெல்ஸ் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மார்ச் 14, 1883-ல் கார்ல் மார்க்ஸ் இறந்தார். அவருடைய இறுதிச் சடங்கில், அவருடைய நெருங்கிய நண்பரும், மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவருமான ஏங்கெல்ஸ் மார்க்ஸுக்கு அஞ்சலி செலுத்தினார்:

"மார்ச் 14-ஆம் தேதி பிற்பகல் மூன்றே கால் மணிக்கு, மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஓர் இரண்டு நிமிடங்கள் அவரைத் தனியாக அறைக்குள் விட்டுச் சென்று மீண்டும் உள்ளே நுழைந்தபோது, அவர் தனது நாற்காலியில் அமைதியாக தூங்குவதைக் கண்டோம். ஆனால் எப்போதும் எழ முடியாத தூக்கம் அது.

போராடும் ஐரோப்பிய, அமெரிக்க பாட்டாளி வர்க்கமும் வரலாற்று விஞ்ஞானமும் இந்த மனிதனின் மரணத்தால் கொண்ட இழப்பு அளப்பறியது. இந்த மகத்தான மனிதனின் மரணத்தால் ஏற்படவிருக்கும் கையறுநிலையின் பாதிப்புகளை விரைவில் நாம் உணருவோம்.

உயிரியல் பூர்வமான பரிணாம விதியை டார்வின் கண்டுபிடித்தது போல, மார்க்ஸ் மனித வரலாற்றின் பரிணாம விதியைக் கண்டுபிடித்தார்: சித்தாந்த வளர்ச்சி மறைத்திருந்த ‘அரசியல், அறிவியல், கலை மற்றும் மதத்தை விட மனிதர்களுக்கு முதலில் உணவு, இருப்பிடம் ஆடை ஆகியவையே வேண்டும்’ என்கிற எளிய உண்மையை வெளிக்கொணர்ந்தார். ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தின் மக்கள் கொண்டிருக்கும் அரசு நிறுவனங்கள், சட்டக் கொள்கைகள், கலை, மதக்கருத்துகள் ஆகியவற்றின் அடித்தளமாக மக்களின் பொருளாதார மேம்பாடு அல்லது அந்தக் குறிப்பிட்டக் காலக்கட்டத்தின் பொருளாதார வளர்ச்சி ஆகியவைதான் இருக்கும்; அவற்றைக் கொண்டுதான் யாவும் விளக்கப்பட வேண்டுமே தவிர முன்பிருந்த பாணியிலல்ல என்றும் கூறியவர்.

இது மட்டுமல்ல, இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் அது உருவாக்கியிருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பின் வளர்ச்சிக்கான சிறப்பு விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார். முதலாளித்துவ மற்றும் சோசலிசப் பொருளாதார அறிஞர்கள் தொலைந்து கொண்டிருந்த இருளில் உபரி மதிப்பின் கண்டுபிடிப்பு வெளிச்சம் பாய்ச்சியது.

எந்தவொரு வாழ்க்கைக்கும் இதுபோன்ற இரண்டு கண்டுபிடிப்புகள் போதும். ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பவரும் அதிர்ஷ்டசாலிதான். ஆனால் மார்க்ஸ் ஆய்வு செய்த ஒவ்வொரு துறையிலும், பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டியிருந்தன. அவற்றையும் அவர் செய்தார். எதுவுமே மேலோட்டமாகச் செய்யப்படவில்லை. கணிதத் துறையில் கூட அவர் பல கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

அவர் அறிவியலின் மனிதர். ஆனால் அதுவே அவரின் முழுமையும் அல்ல. மார்க்ஸைப் பொறுத்தவரை, அறிவியல் என்பது படைப்பதற்கான வரலாற்று மற்றும் புரட்சிகர சக்தி. தத்துவார்த்த அறிவியல் துறையின் புதிய கண்டுபிடிப்பில் அவர் மகிழ்ச்சியடைந்தார். கண்டுபிடிப்பின் நடைமுறை விளைவுகள் இன்னும் தெரியவில்லை எனினும் உடனடியாக தொழில்துறை வளர்ச்சியையும், ஒட்டுமொத்த வரலாற்று வளர்ச்சியையும் முழுமையாக புரட்சிகரமாக பாதிக்கும் வகையில் அக்கண்டுபிடிப்பு இருந்தது. உதாரணமாக, அவர் மின் அறிவியல் துறையில் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை நெருக்கமாகக் கவனித்தார். இறுதியில் மார்க் டெப்ரெஸையும் கவனித்து வந்தார்.

“அவருக்கு பல எதிரிகள்.. தனிப்பட்ட எதிரி என ஒருவரும் இல்லை”:கார்ல் மார்க்ஸ் இறுதிச்சடங்கில் ஏங்கெல்ஸ் உரை!

மார்க்ஸ் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புரட்சியாளர். முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கிய அரசு நிறுவனங்களையும் தூக்கியெறிய ஒத்துழைப்பதும் நவீன உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு ஒத்துழைப்பதுமே அவரது வாழ்க்கையின் பிரதான நோக்கங்களாக இருந்தன. பாட்டாளி வர்க்கநிலை மற்றும் அதன் வர்க்கத் தேவைகள், அதன் விடுதலைக்குத் தேவையான நிலைமைகள் பற்றிய அறிவை முதலில் உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கியவர் அவர்தான். இந்தப் போராட்டத்தில் அவர் முழுமையாக இருந்தார். ஒரு சிலருக்கு மட்டுமே இருந்த ஆர்வத்துடனும், உறுதியுடனும் போராடினார். 1842-ல் Rheinische Zeitung, 1844-ல் பாரிஸில் உள்ள Vorwärts, 1847-ல் Brüsseler Deutsche Zeitung, 1848 முதல் 1849 வரை Neue Rheinische Zeitung, 1852 முதல் 1861 வரை நியூயார்க் ட்ரிப்யூன், பிறகு எண்ணற்ற விமர்சனக் கட்டுரைகள் என எழுதிக் கொண்டிருந்தார். பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டனில் அமைப்புசார் பணிகள் செய்தார். இறுதியில் மாபெரும் பெருமைக்குரிய சர்வதேச தொழிலாளிகள் சங்கம் அமைத்தார். உண்மையில், அவர் வேறு எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் கூட அந்த ஒரு விஷயம் மட்டுமே அவரது வாழ்க்கையின் பெருமைக்குரிய வேலையாக இருந்திருக்கும்.

எனவே, மார்க்ஸ் தனது வயதில் மிகவும் வெறுக்கப்பட்ட, அதிக அவதூறு பரப்பப்பட்ட மனிதராக இருந்தார். முடியாட்சி மற்றும் குடியரசு ஆட்சி ஆகிய இரண்டும், அவரைத் தங்கள் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றின. அதே நேரத்தில் முதலாளித்துவ, பழமைவாத மற்றும் தீவிர-ஜனநாயகவாதிகள், போட்டிப் போட்டுக் கொண்டு அவரை இழிவுபடுத்தினர். சிலந்தி வலைகள் போல அனைத்தையும் ஒரு பக்கமாகத் ஒதுக்கிப் புறக்கணித்தார். நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே பதில் அளித்தார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சைபீரிய சுரங்கங்கள் தொடங்கி கலிபோர்னியா கடற்கரைகள் வரை கோடிக்கணக்கான புரட்சிகரத் தொழிலாளர்களால் மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டவர் அவர். பல எதிரிகள் அவருக்கு இருந்தபோதிலும் தனிப்பட்ட எதிரி என அவருக்கு ஒருவர் கூட இல்லை என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும்.

அவரது பெயர் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும். அதே போல் அவர் செய்த பணியும் இருக்கும்."

banner

Related Stories

Related Stories